இஸ்லாம்தளம்

கேள்வி பதில்-49

வசூலித்த இடத்தில் தான் ஃபித்ராவை வினியோகிக்க வேண்டுமா?

49 கேள்வி: சவுதி அரேபியா போன்ற நாடுகளில் வேலை நிமித்தம் சென்றுள்ள இந்தியர்கள் தங்களது ஃபித்ராவை வசூல் செய்து தங்களது தாயகத்திற்கு அனுப்பி அங்கேயே வினியோகம் செய்யக் கூடாது, எங்கே வசூல் செய்யப்படுகின்றதோ அங்கேயே வினியோகம் செய்ய வேண்டும் என்று சில மார்க்க அறிஞர்கள் கூறி வருகிறார்கள். இதற்கு உங்களது விளக்கம் என்ன? அஷ்ரப் அலி, ஜுபைல்

பதில்: அபூதாவூதில் இடம் பெற்றுள்ள ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு சில அறிஞர்கள் இவ்வாறு கூறி வருகிறார்கள்.

இவர்கள் குறிப்பிடும் ஹதீஸுக்கும் வேலை நிமித்தம் சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்குச் சென்றுள்ள இந்தியச் சகோதரர்கள் ஃபித்ராவை சேகரித்து தங்களது நாடுகளுக்கு அனுப்புவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

முதலில் அந்த ஹதீஸில் சொல்லப்பட்டிருப்பது என்ன என்பதை பார்ப்போம்.

حدثنا نَصْرُ بن عَلِيٍّ أخبرنا أبي أخبرنا إِبْرَاهِيمُ بن عَطَاءٍ مولى عِمْرَانَ بن حُصَيْنٍ عن أبيه أَنَّ زِيَادًا أو بَعْضَ الْأُمَرَاءِ بَعَثَ عِمْرَانَ بن حُصَيْنٍ على الصَّدَقَةِ فلما رَجَعَ قال لِعِمْرَانَ أَيْنَ الْمَالُ قال وَلِلْمَالِ أَرْسَلْتَنِي أَخَذْنَاهَا من حَيْثُ كنا نَأْخُذُهَا على عَهْدِ رسول اللَّهِ e وَوَضَعْنَاهَا حَيْثُ كنا نَضَعُهَا على عَهْدِ رسول اللَّهِ e

இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களை ஜியாத் அல்லது கவர்னர் ஒருவர் ஸதகா பொருட்களை வசூலித்து வருமாறு அனுப்புகிறார். அவர் திரும்பி வந்த பொழுது, ‘(வசூலித்த) பொருட்கள் எங்கே?’ என்று இம்ரானிடம் கேட்டார். ‘(வசூலித்து) பொருட்களை கொண்டு வருவதற்காக அனுப்புனீர்களா? நபி (ஸல்) அவர்களின் வாழ்நாளில் எங்கிருந்து பொருட்களை வசூலிப்போமா அங்கிருந்து வசூலித்து, நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எங்கே வினியோகம் செய்வோமோ அங்கே வினியோகித்து விட்டோம்’ என்று கூறினார். (நூல்: அபூதாவூது 1626)

இந்த ஹதீஸில் அஸ்ஸதகா என்ற வாசகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஃபித்ராவையும் குறிக்கும் ஜகாத்தையும் குறிக்கும். இமாம் அபூதாவூது அவர்கள் ஜகாத் என்ற கிதாபின் கீழ் இந்த ஹதீஸை பதிவு செய்ததோடு, ஃபித்ரா சம்பந்தப்பட்ட பாடங்களின் வரிசையில் இந்த ஹதீஸை கொண்டு வருகிறார்கள். அதனால் நாம் நமது வசதிக்காக ஃபித்ராவோடு தொடர்புள்ளதாக கொள்வோம்.

வசூலிக்கப்பட்ட இடத்தில் தான் ஃபித்ராவை கொடுக்க வேண்டும் என்று இந்த ஹதீஸில் நேரடியாக சொல்லப்பட வில்லை என்பது முதல் விஷயம்.

வசூலிக்கப்பட்ட இடம் என்றால் என்ன அளவு கோல்?, கிராமத்தில் வசூலித்ததை அந்த கிராமத்திலேயே கொடுக்க வேண்டும் என்பதா? நகரம், பெரிய நகரம், அல்லது நாடு என்று எடுத்துக் கொண்டு அந்தந்த இடங்களில் வினியோகம் செய்வதா?

‘நபி (ஸல்) அவர்களின் வாழ்நாளில் எங்கிருந்து பொருட்களை வசூலிப்போமா அங்கிருந்து வசூலித்து, நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எங்கே வினியோகம் செய்வோமோ அங்கே வினியோகித்து விட்டோம்’ என்ற வாசகத்தில் வசூலித்த இடமும் வினியோகித்த இடமும் வேறு வேறாக இருக்க வாய்ப்பு உள்ளது என்பதை விளங்கலாம்.

வாதத்திற்காக ஃபித்ராவை வசூல் செய்த இடமும் வினியோகித்த இடமும் ஒன்றே என்று வைத்துக் கொண்டாலும், வசூல் செய்த இடத்தில் தான் வினியோகம் செய்ய வேண்டும் என்பதை சட்டமாக ஏற்க முடியாது, ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் ஜகாத் வசூலிப்பவர்களிடம் கிராமப் புறங்களில் வசூலித்து மதீனாவிற்கு கொண்டு வருமாறு சொன்னார்கள். தேவையுள்ள முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் வழங்கினார்கள் என்ற வரலாற்றுச் செய்தியையும் அறிந்து கொள்ள முடிகிறது.

இதிலிருந்து ஃபித்ராவை வசூல் செய்த இடத்திலும் வினியோகிக்கலாம் மற்ற இடங்களிலும் வினியோகிக்கலாம். ஃபித்ராவை வசூல் செய்த இடத்தில் தான் வினியோகம் செய்ய வேண்டும் என்பது தவறான கருத்தாகும்.

ஃபித்ராவை வசூல் செய்த இடத்தில் தான் வினியோகிக்க வேண்டும் என்று மதீனாவையும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களையும் ஒரே இடமாக மனதில் நினைத்துக் கொண்டு முடிவு செய்வதாக இருந்தால், இந்த சட்டம் குறிப்பாக சவுதியில் இருக்கும் அந்த நாட்டுப் பிரஜைகளுக்குத் தான் பொருந்தும். வேலை நிமித்தம் வந்துள்ள இந்திய பிரஜைகளுக்கு அது பொருந்தாது.

பெரும்பாலான இந்தியர்கள் குடும்பத்தினரை பிரிந்து வந்து, சவுதியில் வேலை செய்கிறார்கள். ஒரு குடும்பம் என்றால் தாய், பிள்ளைகள், பெற்றோர்கள் என்று ஃபித்ரா கொடுக்க வேண்டியவர்கள் அதிகமானோர் இந்தியாவில் இருக்கும் போது, சவுதியில் வேலை செய்பவர் தனது ஃபித்ராவை இந்தியாவிற்கு அனுப்புவது தான் ஹதீஸிலிருந்து நாம் புரிந்து கொள்ளும் சட்டமாகும்.

இன்னொரு விஷயத்தையும் மனதில் கொள்ள வேண்டும்.

ஃபித்ரா கடமையாக்கப்பட்டதற்கான இரண்டு நோக்கங்களை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த நோக்கங்கள் நிறைவேற்றப்படுகின்றனவா என்பதையும் கவனிக்க வேண்டும். அந்த நோக்கங்கள் நிறைவேறும் அளவிற்கு ஃபித்ரா வினியோக முறை அமைந்திருக்க வேண்டும்.

بن عَبَّاسٍ قال فَرَضَ رسول اللَّهِ e زَكَاةَ الْفِطْرِ طُهْرَةً لِلصَّائِمِ من اللَّغْوِ وَالرَّفَثِ وَطُعْمَةً لِلْمَسَاكِينِ من أَدَّاهَا قبل الصَّلَاةِ فَهِيَ زَكَاةٌ مَقْبُولَةٌ وَمَنْ أَدَّاهَا بَعْدَ الصَّلَاةِ فَهِيَ صَدَقَةٌ من الصَّدَقَاتِ

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நோன்பாளிகளிடம் நேர்ந்து விட்ட சிறு தவறுகளுக்காகவும் வீணான பேச்சுக்களுக்காகவும் (நிவர்த்தியாகவும்), ஏழைகள் உண்டு மகிழ வேண்டும் என்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் ஜகாத்துல் ஃபித்ரை கடமையாக்கினார்கள். யாரெல்லாம் பெருநாள் தொழுகைக்கு முன்பு கொடுத்து விட்டனரோ அது ஜகாத்துல் ஃபித்ராக ஏற்றுக் கொள்ளப்படும், தொழுகைக்கு பிறகு அவர் கொடுத்தால் அவர் ஸதகா செய்தவராவார். (நூல்: அபூதாவூது 1609, இப்னுமாஜா 1827)

ஒன்று, நோன்பாளிகளிடத்தில் நேர்ந்து விட்ட பாவங்களுக்கு பரிகாரமாக ஃபித்ரா விளங்குகிறது. அதாவது ஃபித்ரா நோன்பாளியை பாவங்களை விட்டும் பரிசுத்தப்படுத்துகிறது.

இரண்டு, ஃபித்ராவின் மூலம் ஏழைகள் உண்டு மகிழ வேண்டும் என்ற செய்தியை நாம் குறிப்பிட்ட ஹதீஸிலிருந்து பெற முடிகிறது. அதாவது ஏழைகள் ஃபித்ராவை பெற்று பெருநாளை கொண்டாட வேண்டும் என்ற விஷயத்தை மற்ற ஹதீஸ்களிலிருந்து பெற முடிகிறது.

நாம் இங்கே முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம், நாம் வழங்கும் ஃபித்ராவின் மூலம் ஏழைகள் பலன் பெற வேண்டுமானால், ஏழைகள் அதிகமாக வாழும் நமது தாய் நாட்டுக்கு ஃபித்ராவை அனுப்புவது கட்டாயமாகும்.

சவுதி அரேபியா போன்ற நாடுகளில் ஃபித்ராவை பெற்று பெருநாள் கொண்டாடக் கூடிய அளவுக்கு, சவுதியிலுள்ள மக்கள் யாரும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு, மக்களின் நிலை உள்ளது.

அது மாத்திரமின்றி ஃபித்ரா பொருட்களை விற்கிறோம் என்ற பெயரில் ஒரு பெரும் வியாபாரக் கூட்டமும், அதை வாங்கும் ஏழைகள் நாங்கள் என்ற பெயரில் ஃபித்ரா பொருட்கள் விற்பனை செய்யும் இடத்திற்கு அருகிலேயே இன்னொரு கூட்டமும் அமர்ந்திருப்பதை சவுதி போன்ற இடங்களில் தாராளமாகவே பார்க்க முடியும்.

ஃபித்ரா பொருட்களை வாங்கி அருகில் அமர்ந்திருக்கும் ஃபித்ராவை வாங்குபவர்களிடம் கொடுத்தால் சிறிது நேரத்தில் அந்த ஃபித்ரா பொருட்கள் திரும்பவும் ஃபித்ரா பொருட்களை விற்பனை செய்பவரிடத்திலே வந்து விடுவதை கண்கூடாக பார்க்க முடியும். இங்கே நபி (ஸல்) அவர்கள் சொன்ன ஃபித்ராவின் நோக்கம் சிதைக்கப்படுவதை பார்க்க முடியும்.

இதனாலும் நாம் நமது ஃபித்ராவை நமது தாயகத்திற்கு தான் அனுப்ப வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, சவுதியில் வாழும் ஏழைக் குடும்பங்களுக்கு உதவ ஏராளமாக அமைப்புக்கள் தாராளமாக உதவிகளை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஜம்இய்யத்துல் பிர்ரிய்யா, ஜம்இய்யத்துல் ஹைரிய்யா போன்ற அமைப்புகள் ஏழைகளை தேடிச் சென்று ஏசி, ஃபிரிஜ் போன்ற அவர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் இருப்பவர்களுக்கு ஃபித்ரா பொருட்களை கொடுப்பது என்பது பெரிய தமாஸாக போய் விடும்.

ஃபித்ராவை வினியோகம் செய்வதற்கு நமது தாயகம் தான் மிக மிக பொருத்தமானது.

1 பின்னூட்டம் »

  1. Assalamu Alykkum
    Enudyia Kelvi Enna Wenral!
    Allahwukku uruwan Unda? Qran & Al- hadees Mulam Vilakkawum.

    பின்னூட்டம் by Roshan — ஜூலை11, 2010 @ 12.24


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: