நபிவழிப்படி நடக்காத திருமணத்தில் கலந்து கொள்ளலாமா?
48 கேள்வி: எனது மாமி பெண்ணிற்கு தவ்ஹீது அடிப்படையில் திருமணம் நடக்க இருக்கிறது. மாப்பிள்ளை தவ்ஹீது சகோதரர். நான் மாலை, மணவரை விஷயத்தில் பங்கு கொள்ள மாட்டேன், உங்கள் பெண்ணுக்கு வேண்டுமானால் செய்து கொள்ளுங்கள் என்று மாப்பிள்ளை சொல்கிறாராம். நான் சின்ன பிள்ளையாக இருக்கும் காலத்திலிருந்து சுன்னா அடிப்படையில் தொழுபவர்கள். எனக்கு தவ்ஹீது சிந்தனையை ஊட்டியவர்கள். ஆனால் இன்று தன் மகளுக்கு என்று வரும் போது, கண், ஹாஜ்ஜத்து என்ற பெயரில் மாலை போன்ற சடங்குகளை செய்ய இருக்கிறார்கள். இந்த திருமணத்தில் என் மனைவியை கண்டிப்பாக கலந்து கொள்ளக் கூடாது என்று சொல்லி விட்டேன். காலையில் மட்டுமாவது சென்று விட்டு சடங்குகள் அரங்கேறும் முன் வந்து விடுகிறேன். நிக்காஹ்விற்கு மட்டுமாவது போகிறேன் என்று என் மனைவி சொல்லியும் கூட நான் அனுமதிக்க வில்லை.
காரணம், பரிபூரண தவ்ஹீது அடிப்படையில் திருமணத்தை நடத்துவதற்கு எல்லா விதமான வாய்ப்புகள் இருந்தும், போலியான சாக்கு போக்கு சொல்லி தவிர்க்கிறார்கள். இப்படிப்பட்ட இரட்டை வேஷ, தவ்ஹீது தோல் போர்த்தியவர்கள் தான் தவிர்க்கப்பட வேண்டியதில் முதலாமானவர்கள். இவர்களால் தான் தவ்ஹீதுக்கு கெட்ட பெயர்.
இப்படி திருமணம் பண்ணுவதும், அசத்தியவாதிகள் அடிப்படையில் திருமணம் செய்வதும் ஒன்று தான். இது போன்ற மாப்பிள்ளைகளால் தான் கெட்ட பெயர் என்று கடுமையாக சொல்லி விட்டேன். என்னுடைய நிலை சரியா? தவறா? எந்தெந்த அடிப்படையில் சரி, அல்லது தவறு என்பதை குர்ஆன் ஹதீஸின் விபரங்களுடன் விளக்கவும். அவர்களுக்கு புரிந்து கொள்ளும் விதத்தில் விபரமாக விளக்கவும். ஏனெனில் இதனால் எல்லோரும் என்னை எதிரியாக, மனைவியை கல்யாணத்திற்கு கூட அனுப்பாத கொடுமைக்காரன் என்றெல்லாம் சொல்லக்கூடிய நிலை உருவாகிறது. மாப்பிள்ளை பற்றி நான் சொன்ன கருத்து தவறா? (உமர் ஃபாரூக், கேஎன்பிசி டாட் காம். கேடபிள்யூ மெயில் மூலமாக)
தவ்ஹீதுவாதிகள் திருமணத்தின் போது நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறைப்படி நடந்து கொள்வதில்லை. அப்படிப்பட்ட திருமணங்களுக்கு செல்லலாமா? என்பது தான் அந்தக் கேள்வியின் சாரம்.
‘திருமணம் எனது வழிமுறை (சுன்னத்), எவர் எனது வழிமுறையை புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவர் அல்லர்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்)
திருமணம் என்பது நபி (ஸல்) அவர்களின் சுன்னத் என்பதால், அவர்கள் எவ்வாறு திருமணம் செய்ய வேண்டும் என்று கூறினார்களோ அல்லது செய்து காட்டினார்களோ அப்படிச் செய்வது தான் நபி (ஸல்) அவர்களை பின்பற்றியதாக ஆகும்.
1. மஹர் தொகை:
‘பெண்களுக்கு அவர்களின் மஹர் (திருமண கொடை) தொகையை மனமுவந்து வழங்கி விடுங்கள்’ (அல்குர்ஆன் 4:4)
2. திருமண ஒப்பந்தம்:
‘அப்பெண்கள் உங்களிடமிருந்து கடுமையான உடன்படிக்கை செய்துள்ளார்கள்’ (அல்குர்ஆன் 4:21)
உதாரணத்திற்கு, ‘நான் எனது மகளை இவ்வளவு மஹருக்கு அவளது பூரண சம்மதத்துடன் உங்களுக்கு மணமுடித்து தருகிறேன்’ என்று பெண்ணின் தந்தையோ அல்லது பெண்ணின் பொறுப்பாளரோ கூறுவதும், மணமகன் அதை ஏற்றுக் கொள்வதாகக் கூறுவதும் ஒப்பந்தமாகும். இதோடு திருமணம் நிறைவுக்கு வந்து விடும்.
3. சாட்சிகள்:
திருமணத்திற்காகவும், திருமணத்தின் போது நிகழும் கொடுக்கல் வாங்களுக்காகவும் இரண்டு சாட்சிகள் அவசியமாகும். இது திருக்குர்ஆன் வசனத்தின் அடிப்படையிலாகும்.
திருமணத்தின் போது நிகழும் கொடுக்கல் வாங்கலில் திருமணத்திற்கு பின்பு சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது இருவரும் கணவன் மனைவியர் தானா என்ற சந்தேகம் ஏற்படும் போதோ தம்பதியர் தான் என்பதை உறுதி செய்வதற்கு சாட்சிகள் அழைக்கப்படுவதற்காக இரண்டு சாட்சிகள் அவசியம், ஆனால் அவர்கள் தம்பதியர் இருவரைப் பற்றிய தகவல்கள் அறிந்தவர்களாக இருக்க வேண்டும்.
4. குறைந்த செலவு:
‘குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்ததாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: அஹ்மத்)
5. வலீமா விருந்து:
திருமணத்தின் போது மணமகன் தான் விருந்து வழங்க வேண்டும், அது தான் நபி வழியாகும்.
நபி (ஸல்) அவர்கள் சபிய்யா(ரலி)வை மணமுடித்த போது சிறிது மாவு, சிறிது பேரீத்தம்பழம் ஆகியவற்றையே வலீமா விருந்தாக வழங்கினார்கள் என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா)
6. திருமண துஆ:
நபி (ஸல்) அவர்கள் திருமணத்தில் வாழ்த்தும் போது, ‘பாரகல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா ஃபீகைர்’ என்று கூறுவார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: அஹ்மத், திர்மிதி, அபூதாவூத், இப்னுமாஜா)
(பொருள்: உங்களுக்கு அல்லாஹ் பரகத் செய்வானாக! நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக!)
7. தவிர்க்கப்பட வேண்டியவை:
கருகமணி கட்டுவது, ஆரத்தி எடுப்பது, குலவையிடுவது, மாலை அணிவது, மணவரை ஏற்படுத்துவது, மாப்பிள்ளை ஊர்வலம், பாட்டுக் கச்சேரி, சீர்வரிசைகள் போன்றவை அனைத்திற்கும் ஆதாரமின்மையாலும், இவை பிற மத கலாச்சாரம் என்பதாலும் தவிர்க்கப்பட வேண்டியவைகளாகும்.
8. முடிவுரை:
மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்படாமல் நடக்கும் திருமணத்தை புறக்கணிக்க வேண்டும். ஏனெனில்,
‘உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்) அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்) இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 78)
உங்கள் உறவினரின் திருமணத்தில் நடக்கும தீமைகளை நீங்கள் தடுப்பதும், முடியாத போது அந்த திருமணத்தை புறக்கணிப்பதும், உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மனைவியையும் அத்திருமணத்தை புறக்கணிக்குமாறு விளக்கி கூறுவதும் உங்கள் மீது கடமையாகும். இதைப் புரிந்து கொள்ளாத மனைவியை அத்தகைய திருமணத்திற்கு செல்ல அனுப்பதில் உங்கள் மீது தவறில்லை.
மறுமொழியொன்றை இடுங்கள்