அல்லாஹ்வைப் படைத்தவர் யார்? நாம் ஏன் செயல்பட வேண்டும்?
47 கேள்வி: கடவுளைப் படைத்தது யார்? எல்லாமே விதிப்படி நடக்கிறது என்றால் மனிதன் கடவுளை மறுக்கிறான், அதுவும் விதிப்படி தான். நரகமும் (கிடைப்பதும்) விதிப்படி தான்! சொர்க்கமும் (கிடைப்பதும்) விதிப்படி தான். பிறகு ஏன் நாம் நல்லதைச் செய்ய வேண்டும்? (எஸ்.முஹம்மது பாரூக் அலி, யாகூ டாட் கோ டாட் இன் மெயில் மூலமாக)
கடவுளைப் படைத்தது யார்? என்ற கேள்வி ஓர் அர்த்தமற்ற கேள்வியாகும். அதனால் தான் இந்த கேள்வியை கேட்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
மனிதனின் இயல்பான சிந்தனை ஓட்டம் இப்படித்தான் இருக்கும் என்பதை நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
‘நிச்சயமாக மக்கள் உங்களிடம் ஒவ்வொன்றைப் பற்றியும் வினாத் தொடுப்பார்கள். இறுதியில், அல்லாஹ் தான் எல்லாவற்றையும் படைத்தான். அவனைப் படைத்தவன் யார்? என்று கேட்பார்கள்’ என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 216)
மனிதனின் இயல்பையும் இந்த கேள்வியை கேட்கும் நிலைக்கு ஆளாவான் என்பதையும் அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: மாண்பும் வலிவுமிக்க அல்லாஹ் (என்னிடம் பின்வருமாறு) கூறினான்: உம்முடைய சமுதாயத்தார் (உம்மிடம்) இதைப் பற்றியும் அதைப் பற்றியும் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில், ‘இதோ! அல்லாஹ் தான் படைப்பினங்களைப் படைத்தான். அல்லாஹ்வைப் படைத்தவன் யார்? என்று கேட்பார்கள். (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்: முஸ்லிம் 217)
அல்லாஹ்வும் அவனது தூதரும் இப்படிப்பட்ட கேள்வியை மனிதன் கேட்பான் என்பதை நமக்கு முன்கூட்டியே சொல்லிவிட்டார்கள் என்பதை அறியும் போது ஆச்சர்யமாக இல்லையா? இது இறைமார்க்கம் என்பதற்கு இது ஒரு சான்று இல்லையா?
நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே இப்படிப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்குரிய ஆதாரம்.
மக்கள் உங்களிடம் கல்வியறிவு தொடர்பான கேள்விகளைக் கேட்டுக் கொண்டே வந்து இறுதியில், ‘இதோ! அல்லாஹ் தான் நம்மைப் படைத்தான், அல்லாஹ்வைப் படைத்தவர் யார்?‘ என்று கேட்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஒரு மனிதரின் கையைப் பிடித்துக் கொண்டு, ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே கூறினர்’ (மேற்கண்டவாறு) என்னிடம் இருவர் கேட்டு விட்டனர். இதோ! இவர்தாம் மூன்றாமவர் அல்லது (அவ்வாறு ஏற்கனவே) என்னிடம் ஒருவர் கேட்டு விட்டார். இதோ! இவர் தாம் இரண்டாமவர்’ என்று கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 215)
இப்படிப்பட்ட கேள்விகள் மனதில் தோன்றுவது தவறு என்பதையும் நம்மை மீறி தோன்றும் போது நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்பதையும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.
உங்களில் ஒருவரிடம் ஷைத்தான் வந்து, இன்னின்னவற்றைப் படைத்தவர் யார்? என்று கேட்டுக் கொண்டே வந்து இறுதியில் அவரிடம், ‘உன் இறைவனைப் படைத்தவர் யார்? என்று கேட்பான். இந்தக் (கேள்வி கேட்கும்) கட்டத்தை அவன் எட்டும் போது, அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டம். (இத்தகைய சிந்தனையிலிருந்து) அவர் விலகிக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 214)
மேலும் சொல்கிறார்கள்,
‘மக்கள் (இதைப் படைத்தவர் யார்? அதைப் படைத்தவர் யார்? என்று ஒவ்வொன்றாகக்) கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில் ‘அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்தான், அல்லாஹ்வைப் படைத்தவன் யார்? என்று கேட்கும் நிலைக்கு உள்ளாவார்கள். இத்தகைய எண்ணம் ஒருவருக்கு ஏற்பட்டால் அவர் உடனே, ‘அல்லாஹ்வை நான் நம்பிக்கை கொண்டேன்’ (ஆமன்து பில்லாஹ்) என்று சொல்லட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 212)
அல்லாஹ்வை யார் படைத்தார்? என்ற கேள்வி அறிவுப்பூர்வமானதாக தோன்றினாலும் அதனால் இறைவனை நிராகரிக்கும் நிலைக்கு ஒருவன் தள்ளப்படுகின்றான். அதனால் தான் ஆமன்து பில்லாஹ் – அல்லாஹ்வை நான் நம்பினேன் என்று சொல்லி அப்படிப்பட்ட எண்ணத்திலிருந்து மீள வேண்டும்.
இரண்டாவதாக, அதே அறிவுப்பூர்வமாகவே மேலும் சிந்தித்தாலும் அதற்கான விடையை தெரிந்து கொள்ள முடியும். அது என்ன?
அல்லாஹ்வை படைத்தவர் யார்? என்ற கேள்விக்கு ஒருவர் இன்னார் படைத்தார் என்று ஒருவரைச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போதும் அந்த கேள்வி மீண்டும் பிறக்கத்தான் செய்யும். அவரைப் படைத்தவர் யார்? என்று மறுபடியும் அவர் கேட்பார்.
இந்தக் கேள்விக்கு ஒரு பதிலைச் இறுதியாக சொல்லிவிட முடியாது என்பதினாலும் இது அறிவப்பூர்வமான கேள்வியே அல்ல.
அல்லாஹ்வைப் படைத்தவர் இவர் தான் என்று சொன்னால், இங்கே படைப்பாளி படைக்கப்பட்டவராக ஆகிவிடுகிறார். படைக்கப்பட்டவர் இறைவனாக இருக்க முடியாது. படைப்பாளி படைக்கப்பட்டவராக ஆவதே இந்த கேள்வி அறிவுப்பூர்வமானது அல்ல என்பதற்கான சான்றாகும்.
விதியும் உங்களின் முந்தைய கேள்வி போன்றது தான். விதி பற்றிய சர்ச்சை கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.
‘நாங்கள் விதியைப் பற்றி சர்ச்சை செய்து கொண்டிருந்த போது எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அவர்களின் முகம் சிவக்குமளவுக்கு – அவர்களின் கன்னங்களில் மாதுளை பிழிந்தது போல் – கோபமடைந்தார்கள். ‘இப்படித்தான் நீங்கள் கட்டளையிடப் பட்டுள்ளீர்களா? இதைத்தான் நான் உங்களிடம் தூதுச் செய்தியாகக் கொண்டுவந்திருக்கிறேனா? இந்த விஷயத்தில் சர்ச்சை செய்ததன் காரணமாகவே உங்களுக்கு முன்னிருந்தோர் அழிந்தனர். நீங்கள் இது விஷயத்தில் சர்ச்சை செய்யக் கூடாது என்று நான் வலியுறுத்துகிறேன்’ என்று அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதி 2216)
விதியைப் பற்றி சர்ச்சை செய்வதற்காக குரைஷிகளில் உள்ள இணைவைப்பவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது ‘முகம் குப்புற அவர்கள் நரகத்தில் தள்ளப்படும் நாளில் ஸகர் எனும் நரக வேதனையைச் சுவையுங்கள் (எனக் கூறப்படும்.) நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும் (அதற்குரிய) விதியுடன் படைத்திருக்கிறோம்’ (54:48,49) என்ற வசனம் இறங்கியது என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், இப்னுமாஜா, திர்மிதி 2246)
விதியைப் பற்றி சர்ச்சை செய்தால் எந்த முன்னேற்றமும் இல்லாமல் எந்த இடத்தில் சர்ச்சையை ஆரம்பித்தார்களோ அதே இடத்திற்கு மீண்டும் வந்து நிற்பார்கள்.
விதி எப்படிப்பட்டது என்பதை விளங்கிக் கொள்வதும் அவசியமாகும்.
‘….அல்லாஹ் முதலில் படைத்தது எழுது கோலைத் தான். எழுது எனக் கட்டளையிட்டான். எதை நான் எழுத? என்று அது கேட்டது. விதியை எழுது! இனி நடக்க இருப்பவை அனைத்தையும் எழுது என்று இறைவன் கூறினான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: அபூதாவூது, திர்மிதி 2244)
உங்களின் கேள்வியே நபி (ஸல்) அவர்கள் காலத்தில் கேட்கப்பட்டது, அதற்கு நபி (ஸல்) அவர்கள் கொடுத்த பதிலே உங்கள் கேள்விக்குரிய பதிலாகும். ‘ஒவ்வொருவரும் எதற்காகப் படைக்கப்பட்டுள்ளனரோ அதற்கு வாய்ப்பளிக்கப் பட்டுள்ளனர்’ என்ற வசனத்தை சற்று ஊன்றி கவனியுங்கள்.
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் தரையைக் கிளறிக் கொண்டிருந்தார்கள். திடீரெனத் தலையை வானத்தை நோக்கி உயர்த்தி, ‘உங்களில் எவராக இருந்தாலும் சொர்க்கத்தில் அவருக்குள்ள இடமும், நரகத்தில் அவருக்குள்ள இடமும் பதிவு செய்யப்படாமல் இருப்பதில்லை’ என்று கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் ‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் செயல்படாமல் இருக்கலாம் அல்லவா?’ என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘கூடாது! நீங்கள் செயல்படுங்கள்! ஒவ்வொருவரும் எதற்காகப் படைக்கப்பட்டுள்ளனரோ அதற்கு வாய்ப்பளிக்கப் பட்டுள்ளனர்’ என்று விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: அலி (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி 2219)
1. ஒருவருக்கு ஏற்படும் நன்மையும் தீமையும் விதிப்படி தான் நடக்கிறது,
2. ஒவ்வொருவருக்கும் நன்மையையும் தீமையையும் தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனால் தான் அவனுக்கு தண்டனையோ நற்கூலியோ வழங்கப்படுகிறது. ஆனாலும் அதுவும் விதிப்படி தான் நடக்கிறது. இது இறைவனின் நியதி, இதுபற்றி அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
3. நமது விதி எவ்வாறு இருக்கிறது என்பது ஒவ்வொருவருக்கும் தெரியாது, அது மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அதனால் தான் நாம் செயல்படுமாறு ஏவப்பட்டுள்ளோம்.
4. வாய்ப்பு வழங்கப்பட்ட நாம் எதை தேர்வு செய்யப் போகிறோம் என்பது கூட அந்த விதியின் படிதான் செய்கிறோம். நாம் எதை தேர்வு செய்யப்போகிறோம் என்பது அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும். இல்லையேல் அவன் இறைவனாக இருக்க தகுதியற்றவன்.
5. உலகில் அனைத்தும் விதிப்படி நடக்கிறது என்பதை நாம் நம்ப வேண்டும், விதியை நாம் பொருந்திக் கொள்ள வேண்டும்.
6. ஒருவருக்கு தனது விதி அல்லது தனது முடிவு தெரிந்து விட்டால் அவரால் நிம்மதியாக இருக்க முடியாது. விதி மறைத்து வைக்கபட்டுள்ளதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
விதியை நம்பி அதை பொருந்திக் கொள்வதில் கவனம் செலுத்துவதோடு விதி பற்றிய சர்ச்சையிலிருந்து நாம் விலகிக் கொள்வோமாக.
பெண்கங் அவ்லியாக்களின் ஜிஹாரத்களுக்கு சென்று ஜிஹாரத் செய்வது ஆகுமான காரியமா?
பின்னூட்டம் by இஸ்மத் — ஜூன்30, 2009 @ 12.24
இஸ்லாமிய தளங்களின் கவணத்தை போலிவேசத்திற்கு பயன்படுத்தி குறுக்கு வ்ழியில் செல்லாமல் அல்லாஹ் சொன்னதை ஏற்று முதலில் உண்மையான முஸ்லிமாக நீங்கள் வாழுங்கள். பிரமதங்களை விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ளவும். உலக மக்கள் அனைவருக்கும்தான் குர்ஆன் அருளப்பெற்றது இதை முதலில் நீங்கள் ஏற்றுக் கொள்ளுகள், குர்ஆனை விளங்கிக்கொள்ளகூடிய சக்தியை அல்லாஹ் உலகமக்களுக்கு வ்ழங்கியுள்ளான். நீங்கள் கவலைப்படவேண்டியதில்லை. மறுமையில் மற்றவர்களைப்பற்றி கேள்வி கேற்கும்போது உங்களிடமோ, நபி(ஸல்)அவர்களிடமோ கேட்கமாட்டான். http/jumma.co.cc
பின்னூட்டம் by balapiti-aroos — ஒக்ரோபர்17, 2010 @ 12.24