இஸ்லாம்தளம்

கேள்வி பதில்-45

சூரத்துல் ஃபாத்திஹா ஓதாதவருக்கு தொழுகையில்லை என்பதன் விளக்கம் என்ன?

45 கேள்வி: இமாம் சூரத்துல் பாத்திஹா ஓதி முடித்து இரண்டாவதாக துணை சூரா ஓதும் போது ஒருவர் ஜமாத்தோடு இணைந்து கொள்கிறார், அவர் வஜ்ஜஹ்து உட்பட ஒன்றும் ஓதக்கூடாது என்கிறீர்களா? விளக்குக. உம்முல்குர்ஆனை ஓதாதவருக்கு தொழுகை நிறைவற்றதாகும் என்ற முஸ்லிமின் ஹதீஸின் பொருள் என்ன? (முஆஃபா, muafaa@yahoo.co.uk மெயில் மூலமாக)

இந்தக் கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன் ஓர் அடிப்படை விஷயத்தை விளங்கி விட்டு கேள்விக்கு வருவோம்.

அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்:

وَأَنْزَلْنَا اِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ اِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ

(நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம். (அல்குர்ஆன் 16:44)

மனிதர்களுக்கு வேதத்தை விளக்குவது தூதரின் வேலை என்பதை இந்த வசனம் சொல்கிறது. திருக்குர்ஆனும் நபிகளாரின் ஹதீஸ்களும் தான் மார்க்கமாகும். திருக்குர்ஆனுக்கு ஹதீஸ்கள் விளக்கமாகும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்து ஓர் ஹதீஸைப் பார்ப்போம்:

أَلاَ ﺇِنِّى اُوتِيْتُ الكِتَابَ وَمِثْلَهُ مَعَهُ

‘அறிந்து கொள்ளுங்கள்! எனக்கு வேதமும் அது போன்ற ஒன்றும் கொடுக்கப்பட்டிருக்கிறது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அல்மிக்தாம் பின் மக்தீகரீப் (ரலி), நூல்: அபூதாவூது 4587)

வேதம் என்பது எவ்வாறு இறைவனிடமிருந்து வந்த வஹீயோ அது போன்றே ஹதீஸ்களும் இறைவனிடமிருந்து வந்ததேயாகும். சட்டம் எடுக்கும் போது இரண்டையும் சம நிலையில் வைக்க வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது.

ஆகவே ஒரு சட்டம் எடுக்கும் போது அல்லாஹ்வின் வேதத்திற்கு முதலிடம் உண்டு என்று நினைத்து சட்டம் வகுத்தால் நபி (ஸல்) அவர்களின் விளக்கம் இல்லாத ஒருதலைப்பட்சமான சட்டமாக அமைந்து விடும். இதை கவனத்தில் வைத்துக் கொண்டு நமது கேள்விக்குரிய பதிலுக்குச் செல்வோம்.

மஃமூம்கள் ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓத வேண்டும்:

ஆதாரம் எண்: 1

صَلَّى رَسُوْلُ الله صَلى الله عَليه وسلم الصبحَ ، فَثَقُلَتْ عَلَيْهِ القِرَاءةُ ، فَلَمَّا اِنصَرَفَ قَالَ : إِنِّي أَراَكُمْ تَقْرَؤن وَراءَ إِمَامِكُم؟ قَالَ : قُلْنَا : يَارَسُوْل اللهِ ، إِى واللهِ ، قَالَ فَلاَ تَفْعَلُوْا إِلاَّ بِأُمِّ القُرآن ، فَإِنَّهُ لاَصَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِهَا

நபி (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகை நடத்தினார்கள். ஓதுவதற்கு அவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. தொழுது முடிந்ததும், ‘நீங்கள் உங்கள் இமாமுக்குப் பின்னால் ஓதுகிறீர்கள் என்று நான் கருதுகிறேன்’ என்றார்கள். அதற்கு நாங்கள், ‘ஆம்! அல்லாஹ்வின் தூதரே!’ என்றோம். ‘(உம்முல் குர்ஆன் எனும்) ஃபாத்திஹாவைத் தவிர வேறு எதையும் ஓதாதீர்கள்! ஏனெனில் அதை ஓதாதவருக்கு தொழுகை இல்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உபாதா இப்னு ஸாமித் (ரலி), நூல்: திர்மிதி 310)

ஃபாத்திஹாவைத் தவிர வேறு எதையும் ஓதாதீர்கள்! ஏனெனில் அதை ஓதாதவருக்கு தொழுகை இல்லை’ என்ற இந்த வாசகம் இமாம் சப்தமிட்டு ஓதினாலும் ஃபாத்திஹா அத்தியாயம் கண்டிப்பாக ஓதப்பட வேண்டும் என்பதைச் சொல்கிறது.

ஆதாரம் எண்: 2

بَعْضُ الصَلَوَاتِ الَّتِيْ يُجْهَرُ فِيْهَا بِالْقِرَاءَةِ فَقَالَ : لاَ يَقْرَأَنَّ اَحَدٌ مِنْكُمْ اِذَا جَهَرْتُ بِالْقِرَاةِ اِلاَّ بِأُمُّ القُرْآنِ

சப்தமிட்டு ஓதப்படும் ஒரு தொழுகையை நபி (ஸல்) அவர்கள் தொழவைத்தார்கள். (தொழுது முடித்ததும்) ‘நான் சப்தமிட்டு ஓதும் போது உங்களில் எவரும் அல்ஹம்து அத்தியாயம் தவிர வேறெதனையும் ஓதாதீர்கள்’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்: நஸயி 905)

இந்த ஹதீஸும் இமாம் சப்தமிட்டு ஓதினாலும் பின்பற்றித் தொழுவோர் ஃபாத்திஹா அத்தியாயத்தை அவசியம் ஓத வேண்டும் என்பதை சொல்கிறது.

ஆதாரம் எண்: 3

مَنْ صَلَّى صَلاَةً لَمْ يَقْرَأْ فِيْهَا بِأُمُّ القُرْآنِ فَهِيَ خِدَاجٌ ثَالاَثًا ، غَيْرُ تَمَامٍ .

அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘குர்ஆனின் அன்னை (எனப்படும் அல் ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாமல் தொழுதவரின் தொழுகை குறையுள்ள தொழுகையாகும், நிறைவு பெறாததாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அறிவித்தார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்களிடம், ‘நாங்கள் இமாமுக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கிறோம் (அப்போதும் ஓத வேண்டுமா)?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் (பின் வருமாறு) பதிலளித்தார்கள், اِقْرَأْ بِهَا فِيْ نَفْسَكَ ‘அதை உங்களுடைய மனதுக்குள் ஓதிக் கொள்ளுங்கள்’.

ஏனெளில் அல்லாஹ் கூறுவதாக பின்வரும் செய்தியை நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.

‘தொழுகையை (அதில் ஓதுவதை) நான் எனக்கும் என் அடியானுக்குமாக இரண்டு பகுதிகளாக பிரித்துள்ளேன். ஒரு பகுதி எனக்குரியது. இன்னொரு பகுதி என் அடியானுக்குரியது. என் அடியான் கேட்டது அவனுக்கு உண்டு’ என்று அல்லாஹ் கூறுகிறான்.

அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்று அடியான் கூறும்போது என் அடியான் என்னைப் புகழ்கிறான் என்று அல்லாஹ் கூறுகிறான்.

அர்ரஹ்மானிர்ரஹீம் என்று கூறும் போது என்னை என் அடியான் பாராட்டி விட்டான் என்று இறைவன் கூறுகிறான்.

மாலிகி எவ்மித்தீன் என்று அடியான் கூறும் போது என் அடியான் என்னை மகத்துவப்படுத்தி விட்டான் என்று இறைவன் கூறுகிறான்.

இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தயீன் என்று கூறும் போது இது எனக்கும் என் அடியானுக்கும் உள்ள உறவாகும், என் அடியான் கேட்டது அவனுக்கு உண்டு என்று இறைவன் கூறுகிறான்.

இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம், சிராதல்லதீன அன்அம்த அலைஹிம், கைரில் மக்லூபி அலைஹிம் வலள்ளால்லீன் என்று அடியான் கூறும் போது இவையாவும் என் அடியானுக்கு உரியதாகும். அவன் கேட்டது அவனுக்கு உண்டு என்று இறைவன் கூறுகிறான்.

இதை அபுஸ்ஸாயிப் என்பார் அறிவிக்கிறார். (நூல்கள்: முஸ்லிம் 655, நஸயி 895)

இந்த ஹதீஸில் அபூஹுரைரா (ரலி) அவர்களும் ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதுமாறு கூறுகிறார்கள். ஆனாலும் அதை மனதுக்குள் ஓதிக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். அதாவது இங்கே அவர்கள் சப்தமின்றி ஓதுங்கள் என்று கூறுவதாக பொருள் கொள்ள வேண்டும்.ஓர் அடியான் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதும் போது அதற்கு அல்லாஹ் பதில் சொல்வதாக இந்த ஹதீஸில் வருகிறது. இந்த பதில் ஓதினால் தான் கிடைக்கும். இதற்காகவே சூரத்துல் ஃபாத்திஹா ஒதப்பட வேண்டும்.

ஆதாரம் எண்: 4

لاَ صَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الكِتَابِ

ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதாதவருக்கு தொழுகை இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உபாதா இப்னு ஸாமித் (ரலி), நூல்கள்: புகாரி 756, முஸ்லிம் 651, அபூதாவூது 821, நஸயி 896)

ஆதாரம் எண்: 5

நாபிஃ பின் மஹ்மூத் பின் அல்ரபீஃ அல்அன்ஸாரி கூறுகிறார்.

உபாதா பின் ஸாமித் சுப்ஹு தொழுகையை தொழுவிக்க தாமதமாக வந்தார்கள். முஅத்தினான அபூநுஐம் அவர்கள் தக்பீர் கூறி மக்களுக்கு தொழுகை நடத்தினார்கள். அப்போது உபாதா பின் ஸாமித் அவர்கள் வந்தார்கள், அவர்களோடு நானும் இருந்தேன். நாங்கள் அபூநுஐமுக்கு பின்னால் வரிசையில் சேர்ந்து கொண்டோம். அப்போது அபூநுஐம் அவர்கள் குர்ஆனை சப்தமிட்டு ஓதிக் கொண்டிருந்தார்கள். அப்போது உபாதா பின் ஸாமித் அவர்கள் உம்முல் குர்ஆனை ஓத ஆரம்பித்தார்கள். (தொழுகை) முடிந்ததும் உபாதா அவர்களிடம் நான், ‘அபூநுஐம் அவர்கள் குர்ஆனை சப்தமாக ஓதிக் கொண்டிருந்த போது நீங்கள் உம்முல் குர்ஆனை ஓதக் கேட்டேன்’ என்றேன். அப்போது அவர்கள், ‘ஆம்’ என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு தொழுகை நடத்தும் போது குர்ஆன் சப்தமாக ஓதப்பட்டது. அதனால் அவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. அவர்கள் தொழுது முடித்ததும் எங்களைப் பார்த்து, ‘நான் குர்ஆனை சப்தமாக ஓதும் போது நீங்களும் ஓதினீர்களா? என்று கேட்டார்கள். எங்களில் சிலர், ‘ஆம்’ என்றனர். ‘எனது குர்ஆன் ஓதுதலில் என்னை எது குழப்புகிறது என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். நான் சப்தமிட்டு ஓதும் போது உம்முல் குர்ஆனைத் தவிர குர்ஆனில் வேறு எதனையும் ஓதாதீர்கள்’ என்றார்கள். (நூல்: அபூதாவூது 823)

இமாமசப்தமிட்டஓதக்கூடிய ரக்அத்துக்களிலபின்பற்றுவோரஎதையுமஓதக்கூடாத:

ஆதாரம் எண்: 1

وَإِذَا قُرِئَ الْقُرْءَانُ فَاسْتَمِعُوْا لَهُ ، وَأَنْصِتُوْا لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ

‘குர்ஆன் ஓதப்படும்போது அதனை நீங்கள் செவிதாழ்த்தி (கவனமாகக்) கேளுங்கள்; அப்பொழுது நிசப்தமாக இருங்கள் – (இதனால்) நீங்கள் கிருபை செய்யப்படுவீர்கள்’. (அல்குர்ஆன் 7:204)

ஆதாரம் எண்: 2

இப்னு மஸ்வூது (ரலி) அவர்கள் தொழவைத்த போது இமாமுடன் மக்களும் ஓதுவதை செவியுற்றார்கள். தொழுது முடிந்த பின் ‘குர்ஆன் ஓதப்பட்டால் செவிதாழ்த்திக் கேளுங்கள்! வாய் மூடி இருங்கள்’ என்ற குர்ஆன் வசனத்தை நீங்கள் விளங்க வேண்டாமா? அதை சிந்திக்க வேண்டாமா? என்று கேட்டார்கள். (அறிவிப்பவர்: பஷீர் இப்னு ஜாபிர், நூல்: தபரி)

ஆதாரம் எண்: 3

நஸயியில் மற்றொரு ஹதீஸ் இந்த வசனத்திற்கு விளக்கமாக இருக்கிறது.

‘இமாம் ஏற்படுத்தப்பட்டிருப்பது அவரைப் பின்பற்றுவதற்காகவே, எனவே அவர் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள்! அவர் ஓதினால் வாய் மூடி இருங்கள்! அவர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறும் போது, அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹம்து! எனக் கூறுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: நஸயி 906)

ஆதாரம் எண்: 4

நபி (ஸல்) அவர்கள் சப்தமிட்டு ஓதப்படும் ஒரு தொழுகையை முடித்தார்கள். ‘என்னுடன் சேர்ந்து உங்களில் எவரும் சற்று முன் ஓதினீர்களா? என்று கேட்டார்கள். ஒரு மனிதர், ‘அல்லாஹ்வின் தூதரே! ஆம்’ என்றார். ‘(இதனால்) குர்ஆன் ஓதுவதில் எனக்கு குழப்பம் ஏற்படுகிறது என்று நான் கூறுகிறேன்’ என்று கூறினார்கள். இதை செவியுற்றதும் நபி (ஸல்) அவர்கள் சப்தமிட்டு ஓதும் ரக்அத்துகளில் மக்கள் ஓதுவதை விட்டு விட்டனர் என்று அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்கள்: அபூதாவூது, திர்மிதி, முஅத்தா, அஹ்மத், இப்னுமாஜா, இப்னு ஹிப்பான்)

விளக்கம்:

இமாம் சப்தமிட்டு ஓதக்கூடிய ரக்அத்துக்களில் பின்பற்றித் தொழுவோர் இமாம் ஓதுவதை கேட்க வேண்டும், நிசப்தமாக இருக்க வேண்டும் என்று வரக்கூடிய குர்ஆன் வசனத்திற்கும் ஹதீஸ்களுக்கும் விளக்கம் என்பது சூரத்துல் ‘பாத்திஹா தவிர மற்ற குர்ஆன் வசனங்களை ஓதாதீர்கள், ஓதுவதை செவிதாழ்த்திக் கேளுங்கள், நிசப்தமாக இருங்கள்’ என்று பொருள் கொண்டால் எதையும் நிராகரித்தவர்களாக ஆக மாட்டோம். இரண்டு வகையான கருத்துக்களும் இணைந்து கொள்வதைப் பார்க்கலாம்.

மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு வகையான ஆதாரங்களை வைத்து இவ்வாறு தான் பொருள் கொள்ள வேண்டும். இல்லையேல் ஒன்றை ஏற்று, மற்றதை புறக்கணிக்கும் நிலை ஏற்படும்.

ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் வேதத்தை விளக்குவதற்காக வந்தவர்கள், அவர்களின் விளக்கத்தையும் இணைத்தே பொருள் கொள்ள வேண்டும் என்பதை முன்னர் நாம் எடுத்துக் காட்டிய குர்ஆன் வசனமும் ஹதீஸும் தெளிவாக சொல்வதையும் பார்க்கலாம்.

ஓதினால் வாய் மூடி இருங்கள் என்று பொதுவாக சொல்லப்பட்டிருப்பதும், ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதினால் வாய் மூடி இருங்கள் என்று சொல்லப்படாமல் இருப்பதும் மேற்கண்ட முடிவு எடுப்பதற்குரிய துணைக் காரணமாகும்.

இமாம் சப்தமின்றி ஓதும் ரக்அத்துக்களில் இடையில் வந்து சேர்ந்து கொள்ள நேர்ந்தால் அவர் சூரத்துல் பாத்திஹாவை ஓத வேண்டும். அவ்வாறு அதை ஓத வில்லையென்றால் அது ரக்அத்தாக கணிக்கப்படாது என்பது அந்த ஹதீஸின் விளக்கமாகும்.

இன்னும் ஒரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இமாம் ருகூவில் இருக்கும் போது ருகூவை அடைந்து கொண்டவருக்கு அது ரக்அத்தாக ஆகிவிடும். ஏனென்றால், ‘ருகூவை அடைந்து கொண்டவர் ரக்அத்தை அடைந்து கொண்டார்’ என்று ஹதீஸ் இருப்பது தான் காரணம்.

நீங்கள் தொழுகைக்கு வந்து, நாங்கள் ஸஜ்தாவில் உள்ளதைக் கண்டால் (ஸஜ்தாவில் இணைந்து) ஸஜ்தா செய்யுங்கள். அதை (ஒரு ரக்அத் என) கணக்கில் எடுக்காதீர்கள். ருகூவை அடைந்தவரே தொழுகை(யில் ஒரு ரக்அத்தை) அடைந்தவராவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: அபூதாவூது 892, இப்னுகுஸைமா, ஹாகிம்)

இதன் படி இமாம் சப்தமின்றி ஓதும் ரக்அத்துக்களில் அவர் நிற்கும் நிலையில் அடைந்து கொண்டவர் சூரத்துல் பாத்திஹா ஓதிவிட்டுத்தான் ருகூவிற்கு செல்ல வேண்டும். இமாமை விட சிறிது தாமதமாக பின் தொடர்வதால் தவறேதும் இல்லை. இமாமை முந்துவது தான் தடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதிவிட்டு ருகூவுக்கு செல்வதை கடினமானதாக காண்பவர்கள் ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதாமல் ருகூவுக்கு சென்று விட்டு, இமாம் ஸலாம் கொடுத்த பின்பு ஃபாத்திஹா அத்தியாயத்தை நிதானமாக ஓதி, அந்த ரக்அத்தை தொழுது முழுமைப்படுத்த வேண்டும்.

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: