இஸ்லாம்தளம்

கேள்வி பதில்-44

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது உண்மையா?

44. நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக நம்பலாமா? நம்பக்கூடாது என்பதற்கான ஆதாரங்களை இணைத்துள்ளேன். பதில் தாருங்கள். (முஹம்மது நஸீம், அராம்கோ டாட் காம் மூலமாக)

நீங்கள் கேட்ட கேள்விக்குரிய பதிலை கலாநிதி உமர் சுலைமான் அல் அஷ்கர் அவர்கள் கூறி இருக்கிறார்கள். அதை மௌலவி இப்னு மஸ்ஊத் ஸலஃபி அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து உள்ளார்கள். அதை மீண்டும் அப்படியே தருகிறோம். உங்களின் கேள்விக்கும் ஆதாரங்களுக்கும் இதில் பதில் இருக்கிறது.

நபி (ஸல்) அவர்களுக்கசூனியமசெய்யப்பட்டதஉண்மையா?

‘நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. தாம் செய்யாததைச் செய்ததாக அவர்கள் நினைக்கும் அளவுக்கு அதன் விளைவு இருந்தது. ஒரு நாள் அவர்கள் (அல்லாஹ்விடம்) பிரார்த்தனை செய்தார்கள். மீண்டும் பிரார்த்தனை செய்தார்கள். பின்னர் என்னிடம், ‘நான் விளக்கம் கேட்ட விஷயத்தில் இறைவன் விளக்கம் தந்து விட்டான். என்னிடம் இருவர் வந்து, ஒருவர் தலைமாட்டிலும் மற்றவர் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். ‘இவருக்கு என்ன நேர்ந்துள்ளது?’ என்று ஒருவர் கேட்டார். ‘சூனியம் செய்யப்பட்டுள்ளது’ என்று மற்றவர் கூறினார். ‘சூனியம் செய்தவன் யார்?’ என ஒருவர் கேட்க, ‘லபீத் பின் அல்அஃஸம்’ என மற்றவர் விடையளித்தார். ‘எதில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது’ என ஒருவர் கேட்க, ‘சீப்பு உதிர்ந்த தலைமுடி, ஆண் பேரீச்சை மரத்தின் பாளை ஆகியவற்றில் வைக்கப்பட்டுள்ளது’ என்று மற்றவர் கூறினார். ‘எந்த இடத்தில்?’ என்று ஒருவர் கேட்க, ‘தர்வான் எனும் கிணற்றுக்குள்’ என்று மற்றவர் கூறினார்’ என்று கூறினார்கள். பின்னர் அங்கே புறப்பட்டுச் சென்று பின்னர் திரும்பி வந்தனர். அங்குள்ள பேரீச்சை மரங்களின் மேற்பகுதி ஷைத்தானின் தலையைப் போல் இருப்பதாகவும் கூறினார்கள். ‘அதை வெளியேற்றி விட்டீர்களா?’ என்று நான் கேட்டேன். ‘இல்லை, அல்லாஹ் எனக்கு நிவாரணம் தந்து விட்டான். மக்கள் மத்தியில் தீமைகள் பரவுவதை நான் அஞ்சுகிறேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என்று ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புகாரி – 3268, முஸ்லிம் – 2189, வேறுசில மாற்றங்களுடன் புகாரி – 5763, 5765, 5766, 6063, 6391 ஆகிய எண்களில் இடம் பெற்றுள்ளது)

இந்த ஹதீஸ் நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது உண்மை என்பதை தெட்டத் தெளிவாக கூறுகிறது. இருப்பினும் சிலர் இன்று தமது அறியாமையின் காரணமாக இதனை மறுத்துப் பிரச்சாரம் செய்து வருவதை அவதானிக்க முடிகிறது. இந்த வழிகேடான சிந்தனையின் பின்னால் கண்மூடித்தனமாக மக்கள் செல்வதை தடுக்கும் முகமாக கலாநிதி உமர் சுலைமான் அல் அஷ்கர் அவர்கள் தமது ஆலமுஸ் ஸிஹ்ரி வஷ்ஷஃவதா என்ற நூலில் இந்த ஹதீஸ் பற்றி எழுதிய பகுதி இங்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. (மொ-ர்)

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது உண்மை தான் என்பதைச் சொல்லும் ஹதீஸை மறுக்கக்கூடியவர்களின் வாதங்கள் சுருக்கமாக பின்வருமாறு அமைந்திருக்கின்றன:

1. குறிப்பிட்ட ஹதீஸ் பொய்யானது. இட்டுக்கட்டப்பட்டது.
2. அதன் அறிவிப்பாளர் வரிசையில் கோளாறு உள்ளது.
3. இது ‘ஆஹாத்’ என்ற பிரிவைச் சேர்ந்த ஹதீஸ். எனவே இது உறுதியான கருத்தைத் தரமாட்டாது.
4. சூனியம் செய்வது ஷைத்தானுடைய வேலை. ஷைத்தான்கள் நபிமார்கள் மீது எந்த ஆற்றலும் பெறமாட்டார்கள்.
‘எனது அடியார்களில் உன்னைப் பின்பற்றிய வழிகேடர்களைத் தவிர மற்றவர்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை’ (என்று இப்லீசுக்கு அல்லாஹ் கூறினான்). அல்குர்ஆன் 15:42)
5. நபி (ஸல்) அவர்கள் தம்மை இறைத்தூதர் எனக் கூறிய போது அதை ஏற்க மறுத்தவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறினர்.
‘சூனியம் செய்யப்ட்ட மனிதரையே நீங்கள் பின்பற்றுகிறீர்கள் என்று அநியாயக்காரர்கள் கூறுகின்றனர்’. (அல்குர்ஆன் 17:47)

இந்த ஹதீஸை ஏற்றுக் கொண்டால் அவர்களது கூற்று உண்மையாகி விடும்.

இவர்களுக்கு மறுப்பு:

இவர்களுக்கு மறுப்பு பல கோணங்களில் அமையும்.

1. இந்த ஹதீஸ் பொய்யானது, இட்டுக்கட்டப்பட்டது என்ற அவர்களது வாதம் அர்த்தமற்றது. ஏனெனில் இந்த ஹதீஸை இமாம்களான புகாரி, முஸ்லிம் ஆகிய இருவரும் ஒன்று சேர்ந்து அறிவித்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து அறிவிக்கும் செய்திகள் மிக ஆதாரப்பூர்வமானவைகளாகும். இவர்கள் இருவரும் சேர்ந்து அறிவிக்கும் ஹதீஸ்களில் யாரேனும் குறை காண்பார்களாக இருந்தால் ஹதீஸ் துறையில் அவர் அறிவு குறைந்தவர் என்பதையே அது காட்டும்.

2. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் கோளாறு உள்ளது என்ற அவர்களது வாதம் ஆதாரமற்றது. புகாரியின் விளக்கவுரை நூலாகிய பத்ஹுல் பாரி, இமாம் நவவியின் முஸ்லிமிற்கான விளக்கம் போன்ற நூற்களில் இந்த ஹதீஸ் பற்றிய விளக்கத்தைப் பார்க்கும் போது, இந்த ஹதீஸிலோ அல்லது அதன் அறிவிப்பாளர் வரிசையிலோ கோளாறுகள் இருப்பதாக எந்த அறிஞரும் சுட்டிக்காட்டியதாகக் காணப்பட வில்லை.
இந்த ஹதீஸை பல ஸஹாபாக்கள் அறிவித்துள்ளார்கள். அவர்களிடமிருந்து நம்பகமான பலர் அறிவித்துள்ளனர். உறுதியான ஒரு விஷயத்தில் தெளிவான சான்றுகள் ஏதுமின்றி எடுத்து வைக்கப்படும் வாதங்கள் செல்லுபடியற்றதாகி விடும்.

3. இந்த ஹதீஸ் ‘ஆஹாத்’ என்ற வகையைச் சேர்ந்தது, அகீதா விஷயத்தில் ஆஹாதான ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற அவர்களது வாதமும் தவறானது.
ஆஹாதான ஹதீஸ்களை அமல்கள் விஷயத்தில் ஏற்றுக் கொள்வது போன்று அகீதா விஷயத்திலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே சரியான முடிவாகும். இதற்கு மாற்றமான கருத்தைச் சொல்வோர் அவர்களது கூற்றுக்கு வலுவான எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை.
அத்துடன் அகீதா விஷயத்தில் ஆஹாதான ஹதீஸ்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்ற கருத்து அண்மைக்காலத்தில் தோற்றம் பெற்ற புதிய கருத்தேயாகும். (இது சம்பந்தமாக மேலதிக விபரங்களை அறிய விரும்புவோர் ‘அஸ்லுல் இஃதிகாத்’ என்ற எனது நூலைப் பார்க்கவும்)
மேலும் நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதைச் சொல்லும் இந்த ஹதீஸ் உறுதியான அறிவைத் தரக்கூடியது. ஒன்றுக்கு மேற்பட்ட ஸஹாபாக்கள் இதனை அறிவித்திருக்கிறார்கள். அவர்களைத் தொட்டும் நினைவாற்றலிலும், நம்பகத் தன்மையிலும் உயர்ந்த கண்ணியமிக்க உலமாக்கள் பலர் அறிவித்திருக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் உறுதியானது என்பதை உணர்த்தும் துணை ஆதாரங்கள் (முதாபஆத், ஷவாஹித்) நிறையக் காணப்படுகிறது. அத்துடன் அது ஸஹீஹான ஹதீஸ் என்பதை உலக முஸ்லிம்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
ஹதீஸ் கலை அறிஞர்களில் எவரும் இந்த ஹதீஸின் நம்பகத்தன்மை பற்றி எந்தவித விமர்சனங்களும் செய்யவில்லை. முஸ்லிம் உம்மத் ஒருபோதும் வழிகேட்டில் ஒன்று சேர மாட்டாது. இமாம்களான புகாரி, முஸ்லிம் ஆகிய இருவரும் இதனை அறிவித்திருப்பதே இது ஏற்றுக் கொள்ளத் தக்க ஹதீஸ் என்பதற்குப் போதுமான சான்றாகும்.

4. நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது உண்மை என்று கூறும் இந்த ஹதீஸ் நபித்துவத்தைப் பாதிக்கிறது. நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள பாதுகாப்பு (இஸ்மத்து)க்கு முரண்படுகிறது என்ற அவர்களது வாதம் பொருத்தமானது அல்ல.
எத்தி வைப்பதிலும், மார்க்கத்தைச் சொல்வதிலும் தவறுகள் ஏற்படாமல் நபி (ஸல்) அவர்கள் பாதுகாக்கப் பட்டுள்ளார்கள் என்பது எல்லோராலும் ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். அதேவேளை மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய நோய் நொம்பலங்கள் போன்ற குறைகள் நபிமார்களுக்கும் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் அவர்களும் மனிதர்களே!
‘நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் தாம். ஆயினும் தனது அடியார்களில் தான் நாடியவர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான் என்று அவர்களின் தூதர்கள் கூறினர்’ (அல்குர்ஆன் 14:11)
சூனியம் செய்யப்பட்ட விஷயம் உண்மையானால் அது நபித்துவத்தைப் பாதிக்கும் என்ற சந்தேகத்திற்கு அதிகமான உலமாக்கள் விளக்கம் தந்துள்ளனர்.
இமாம் மாஸிரி (ரஹ்) அவர்கள் கூறுவதாக இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்:
சில பித்அத்வாதிகள் இந்த ஹதீஸை மறுக்கின்றனர். இது நபித்துவத்தைப் பாதிப்பதாகவும் அதில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் இவர்கள் கருதுகின்றனர். இந்த நிலைக்கு இட்டுச் செல்லக்கூடிய கருத்தைத் தரக்கூடிய எல்லாம் பொய்யானவை என்றும் இவர்கள் கூறுகின்றனர். மேலும் இவ்வாறு நடந்திருந்தால் நபி (ஸல்) அவர்கள் (இக்காலப்பகுதியில்) சொன்ன மார்க்க விஷயங்கள் அனைத்தும் சந்தேகத்திற்குறியதாகி விடும். நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களைச் சந்தித்தது போன்று உணர்வார்கள். ஆனால் வஹீ வந்திருக்க மாட்டாது என்றும் இவர்கள் வாதிடுகின்றனர்.
உண்மையில் இவை அனைத்தும் ஏற்றுக் கொள்ள முடியாத வாதங்களாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடமிருந்து பெற்று அறிவிக்கின்ற செய்திகளில் உண்மையாளர் என்பதை உணர்த்தும் ஆதாரங்கள் மிகத் தெளிவாக உள்ளன. அவ்வாறே அவர்கள் எத்தி வைத்த விஷங்களில் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய பாதுகாப்பு (இஸ்மத்) இருக்கிறது என்பதும் ஆதாரங்களின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டதாகும். அவர்களுக்கு நடந்த அற்புதங்கள் (முஃஜிஸா) அவர்கள் உண்மையாளர் என்பதற்கு சாட்சியாக இருக்கின்றன.
சில உலக விவகாரங்களைப் பொறுத்த வரை நபி (ஸல்) அவர்கள் அதற்காக அனுப்பப்பட்டவர்கள் அல்ல. ஏனைய மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய அனைத்தும் நபியவர்களுக்கும் ஏற்படலாம். எனவே உலக விவகாரங்களில் ஏதாவது ஒன்று நடந்து அதற்கு மாற்றமாக அவர்களுக்குத் தோன்றுவதில் எந்த ஆச்சரியமுமில்லை. மார்க்க விவகாரங்களில் இவ்வாறு அவர்களுக்கு நடக்காது. ஏனெனில் அவர்களுக்கு அதில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
வேறு சில அறிஞர்கள் இவ்வாறு கூறுவர்: அதாவது இந்த ஹதீஸில் வரும் ‘தாம் செய்யாததைச் செய்ததாக அவர்கள் நினைத்தார்கள்’ என்பதன் விளக்கம் – தாம் தமது மனைவியருடன் உறவு கொண்டதாக நினைப்பார்கள், ஆனால் உண்மையில் அவ்வாறு நடந்திருக்காது.
ஒரு மனிதன் தூக்கத்தில் இருக்கும் போது இவ்வாறு நிறைய நடக்கிறது. அவ்வாறே விளித்துக் கொண்டிருக்கும் போது நடப்பதிலும் எந்த ஆச்சரியமுமில்லை.
இது மிகத் தெளிவாக இப்னு உயைனாவுடைய அறிவிப்பிலும் ஹுமைதியுடைய அறிவிப்பிலும் இடம் பெற்றுள்ளது.
காழி இயாழ் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு வைக்கப்பட்ட சூனியம் அவர்களது சிந்தனையையோ பிரித்தறியும் ஆற்றலையோ பாதிக்கவில்லை. மாறாக அவர்களது உடல் நிலையையே அது பாதித்தது என்பது தெளிவாகிறது.
‘இவர் நபியாக இருந்தால் இது பற்றி அறிவிப்பார். இன்றேல் இது அவரது புத்தியைப் போக்கி விடும்’ என்று லபீத்தின் சகோதரி சொன்னாள் என்ற செய்தியை இப்னு சஃது பதிவு செய்துள்ளார். இவ்வறிவிப்பில் உள்ளது போல் நபி (ஸல்) அவர்கள் இது பற்றி அறிவித்தார்கள் என்பதை மேற்க்குறிப்பிட்ட ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
இன்னும் சில உலமாக்கள் இவ்வாறு கூறுகிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் தாம் செய்யாததைச் செய்ததாக நினைத்தார்கள் என்பது எப்படிப்பட்ட செயலைச் செய்ததாக நினைத்தார்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டுமென்பதை வேண்டி நிற்காது. மாறாக அது உள்ளத்தில் உதித்த ஒரு எண்ணமே தவிர வேறில்லை என்று தான் புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஹதீஸை மறுக்கக் கூடியவர்களுக்கு இதில் எந்த ஆதாரமும் இல்லை.
காழி இயாழ் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்:
செய்யாததைச் செய்ததாக நினைத்தார்கள் என்பதன் அர்த்தம் ஏற்கனவே அவர்கள் செய்து வந்த – மனைவியருடன் இல்லறத்தில் ஈடுபடல் என்ற – விஷயத்தில் ஈடுபடச் செல்வார்கள். மனைவியரை நெருங்கியதும் அவர்களால் அது முடியாமல் போய்விடும்.
வேறு ஓர் அறிவிப்பில் ‘அவர்களது பார்வையை அவர்களால் நம்ப முடியவில்லை’ என்றுள்ளது.
அதாவது ஒன்றை அவர்கள் பார்த்தால் அதன் உண்மை நிலைக்கு மாற்றமாகத் தென்படும். அதை உற்று நோக்கினார்களாக இருந்தால் அதன் உண்மை நிலை என்ன என்பதைப் புரிந்து கொள்வார்கள். இவை எல்லாவற்றையும் உறுதிப்படுத்தக் கூடிய விஷயம் என்னவென்றால், சூனியம் வைக்கப்பட்ட காலப்பகுதியில் அவர்கள் ஏதாவது ஒன்றைச் சொல்லி அதற்கு மாற்றமாக எதுவும் நடந்ததாக எந்த ஆதாரமும் கிடையாது.
முஹல்லப் என்ற அறிஞர் பின்வருமாறு கூறுகிறார்:
ஷைத்தான்களை விட்டு நபி (ஸல்) அவர்கள் பாதுகாக்கபட்டுள்ளனர் என்பது ஷைத்தான்கள் அவர்களுக்குச் சதி செய்ய முயற்சிப்பார்கள் என்பதை மறுக்காது. நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது ஷைத்தான் அவர்களது தொழுகையை வீணாக்க முயற்சி செய்தான் என்ற ஸஹீஹான ஹதீஸ் இதனை உறுதி செய்கிறது. அவ்வாறு தான் சூனியத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்களுக்குச் செய்யப்பட்ட சூனியம் அவர்களது பணிக்கு எந்த விதத்திலும் இடையூறாக அமைய வில்லை. ஏனைய நோய்களைப் போன்றே அதுவும் இருந்தது. சூனியத்தின் காரணமாக ஒன்றைச் சொல்வது அல்லது செய்வது சிரமமாக இருந்தது அல்லது சொற்ப நேரத்திற்கு ஏதாவது ஒன்று நடப்பது போன்றிருக்கும். உடனே அந்த உணர்வு மாறிவிடும். ஷைத்தான்களின் சதிகளை அல்லாஹ் செயலிளக்கச் செய்து விடுவான்.
நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டது ஒருவகை நோயேயன்றி வேறில்லை என்று இப்னுல் கஸ்ஸார் என்ற அறிஞர் குறிப்பிடுகிறார். அதற்கு ஆதாரமாக ‘என்னைப் பொறுத்த வரை அல்லாஹ் எனக்கு சுகத்தைத் தந்து விட்டான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதைச் சுட்டிக் காட்டுகிறார்.
ஆனால் இவர் எடுத்து வைக்கும் ஆதாரம் அவ்வளவு வலுவானதாகத் தென்படவில்லை. எனினும் அவரது கூற்றுக்குப் பின்வரும் செய்தியை ஆதாரமாகக் குறிப்பிடலாம்.
‘நபி (ஸல்) அவர்கள் சுற்றி வருவார்கள். ஆனால் என்ன வருத்தம் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை’ என ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (பைஹகீ)
‘நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். மனைவியர், உணவு, பானம் என்பவற்றில் நாட்டம் இல்லாமல் இருந்தார்கள். அப்போது அவர்களிடம் இரண்டு மலக்குகள் வந்தார்கள்’ என்று இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கிறார்கள் (இப்னு ஸஃது) (ஃபத்ஹுல் பாரி 10-227)
நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது நபித்துவத்தைப் பாதிக்கும் என்ற பித்அத்வாதிகளின் சந்தேகத்திற்குப் பல உலமாக்கள் மறுப்புக் கூறியுள்ளனர். அவர்களில் காழி இயாழும் ஒருவர் அவர் பின்வருமாறு கூறுகிறார்:
அறிந்து கொள்ளுங்கள்! இந்த ஹதீஸ் ஸஹீஹானது. இமாம்களான புகாரி, முஸ்லிம் இருவரும் சேர்ந்து இதனை அறிவித்திருக்கிறார்கள். வழிகேடர்கள் இந்த ஹதீஸில் குறை காண்கின்றனர். அவர்களது வழிகெட்ட சிந்தனையால் மார்க்கத்தில் சந்தேகத்தை உண்டு பண்ணப் பார்க்கிறார்கள்.
எந்த குழப்பங்களும் இல்லாமல் அல்லாஹ் மார்க்கத்தைத் தூய்மைப் படுத்தியுள்ளான். அவ்வாறே நபி (ஸல்) அவர்களையும் குழப்பங்களிலிருந்து அல்லாஹ் தூய்மைப்படுத்தியுள்ளான்.
சூனியம் ஒரு நோயே தவிர வேறில்லை. ஏனைய நோய்கள் போன்று இதுவும் நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்படுவதில் எந்த தடையுமில்லை. அது அவர்களது நபித்துவத்தை எந்தவகையிலும் பாதிக்காது.
நபி (ஸல்) அவர்கள் தாம் செய்யாததைச் செய்ததாக நினைத்தார்கள் என்பது அவர்களது பணியில் எந்தக் களங்கத்தையும் ஏற்படுத்தாது. அதனால் அவர்களது நம்பகத்தன்மையும் பாதிக்கப்பட மாட்டாது. ஏனெனில் இந்த விஷயங்களில் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய பாதுகாப்பு இருக்கிறது என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. அத்துடன் முஸ்லிம் உம்மத்தும் இந்த விஷயத்தில் ஏகோபித்த முடிவுடன் இருக்கிறது. உலக விவகாரங்களில் அவர்களுக்கு ஏதும் ஏற்படுவது என்பது ஏனைய மனிதர்களைப் போல் சாதாரணமான ஒன்றாகும். ஏனெனில் உலக விவகாரங்களை வைத்து அவர்கள் சிறப்பிக்கப் படவுமில்லை. அதற்காக அனுப்பப்படவுமில்லை.
யதார்த்தத்திற்கு மாற்றமாக அவர்கள் ஒன்றை நினைத்து பின்னர் அதன் உண்மை நிலை அவர்களுக்குத் தெரிய வருவது என்பது ஆச்சரியமான ஒன்றல்ல…. (ஷரஹுஸ் ஷிஃபா 4-439)

5. சூனியம் ஷைத்தானுடைய வேலை. அல்லாஹ்வுடைய அடியார்கள் மீது அவன் ஆற்றல் பெற மாட்டான் என்ற அவர்களது வாதத்திற்குப் பின்வருமாறு பதில் கூறலாம்.
அல் ஹிஜ்ர் 42 ம் வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுவதன் அர்த்தம் அவர்களை வழிகெடுக்க அவன் ஆற்றல் பெறமாட்டான் என்பதைத் தான்.
இதற்குச் சான்றாக பின்வரும் வசனம் காணப்படுகிறது. ‘உனது கண்ணியத்தின் மீது ஆணையாக தேர்ந்தெடுக்கப்பட்ட தூய்மையான உனது அடியார்களைத் தவிர அவர்கள் அனைவரையும் வழி கெடுப்பான், என்று (ஷைத்தான்) கூறினான்’. (38:82,83)
அஃதல்லாமல் அவர்களது உடல் நிலையில் பாதிப்பை ஏற்படுத்துதல் என்பதை இந்த வசனங்கள் மறுக்காது. மாறாக இது சாத்தியமானதே என்பதை உறுதிப்படுத்தக் கூடிய பல வசனங்கள் அல்குர்ஆனில் காணப்படுகின்றன.
ஐயூப் (அலை) அவர்கள் பிரார்த்திக்கும் போது, ‘ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான்’ (38:41) என்று கூறினார்கள்.
மூஸா (அலை) அவர்கள் கிப்தியைக் கொலை செய்த பின்னர், ‘இது ஷைத்தானின் வேலை …’ (28:16) என்று கூறினார்கள்.
மூஸா (அலை) அவர்களுக்கு பிர்அவ்னுடைய சூனியக்காரர்கள் செய்ததை அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
‘உடனே அவர்களின் கயிறுகளும் கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போன்று அவருக்குத் தோற்றமளித்தது’ (20:66)

6. இந்த ஹதீஸ் அல்குர்ஆனுடன் முரண்படுகிறது. இது இணைவைப்பாளர்களின் கூற்றை உண்மைப்படுத்துவதாக உள்ளது என்ற அவர்களின் வாதத்திற்கு நாம் கூறும் மறுப்பு:
இந்த ஹதீஸை நிதானமாக அவர்கள் சிந்திப்பார்களாக இருந்தால் இது முழுக்க முழுக்க அல்குர்ஆனுடன் ஒத்துச் செல்வதைக் காண்பார்கள்.
பிர்அவ்னுடைய சூனியக்காரர்கள் கயிறுகளைப் போட்ட நேரத்தில் அவை சீறுவது போன்று திட உறுதி பூண்ட ரசூல்களில் ஒருவராகிய மூஸா (அலை) அவர்களுக்குத் தோற்றமளித்தது.
‘(அவ்வேளையில்) மூஸா தமக்குள் அச்சத்தை உணர்ந்தார்’ (20:67)
சூனியம் நபிமார்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அல்குர்ஆன் மிகத் தெளிவாகக் கூறுகிறது.
இதனால் நபி (ஸல்) அவர்களது மனோ நிலை பாதிக்கப்பட்டது என்ற அவர்களது வாதம் ஏற்றுக் கொள்ள முடியாதது. ஏனெனில் நிலமை அந்த அளவுக்குச் செல்ல வில்லை. அத்துடன் வஹீக்கு அதனால் எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை. ஏனெனில் நபி (ஸல்) அவர்களுக்கு இந்த விஷயத்தில் அல்லாஹ்விடமிருந்து உத்திரவாதமும் பாதுகாப்பும் உள்ளது என்பதை அல்குர்ஆனும் ஹதீஸும் உணர்த்தி நிற்கின்றன.
‘சூனியம் செய்யப்பட்ட மனிதரையே நீங்கள் பின்பற்றுகிறீர்கள்’ (17:47) என்று இணைவைப்போர் நபி (ஸல்) அவர்கள் பற்றிக் கூறியது என்னவெனில், நபி (ஸல்) அவர்களது சொல் செயல் அனைத்துமே பைத்தியத்தின் கற்பனையின் அடிப்பமையில் அமைந்ததே என்பதாகும். மேலும் அவர்கள் அல்லாஹ்வுடைய தூதர் அல்ல. அவர்களுக்கு வஹீ அறிவிக்கப்படவுமில்லை என்பது தான் அவர்கள் கூறியதன் அர்த்தம்.
நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்ற விஷயம் இணைவைப்போரின் இந்தக் கூற்றை எந்த வகையிலும் உண்மைப் படுத்துவதாகவோ அதனோடு ஒத்துச் செல்வதாகவோ இல்லை.

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: