ஹில்ரு (அலை) அவர்கள் பற்றிய விபரங்கள் என்ன?
41 கேள்வி : ஹில்ரு (அலை) பற்றி எழுதுங்கள். (ஷேக் மைதீன் யாகூ டாட் காம் மெயில் மூலமாக)
1. ஹில்ரு (அலை) யார்?
ஹில்ரு (அலை) அவர்கள் களிர் (அலை) என்றும் அழைக்கப்படுகிறார். அவர் இறைவனின் அடியார்களில் ஒருவர் என்று குர்ஆனும் ஹதீஸும் கூறுகிறது. ஆனால் அவர் நபியா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. ஆனாலும் கீழ்காணும் திருக்குர்ஆன் வசனங்கள் அவர் நபி என்பதை உறுதி செய்கிறது.
‘(இவ்வாறு) அவ்விருவரும் நம் அடியார்களில் ஒருவரைக் கண்டார்கள்; நாம் அவருக்கு நம்மிடமிருந்து கிருபை அருளியிருந்தோம்;, இன்னும் நாம் அவருக்கு நம்மிடமிருந்து கல்வி ஞானத்தையும் கற்றுக் கொடுத்திருந்தோம்’ (அல்குர்ஆன் 18:65)
ஹதீஸில் காணப்படுகின்ற அதே களிர் (அலை) அவர்களின் சம்பவத்தை திருக்குர்ஆனில் சொல்லும் போது பெயர் குறிப்பிடாமல் சொல்லப்படுகிறது. நமது அடியார்களில் ஒருவர் என்றும், நமது கிருபை அளிக்கப்பட்டவர் என்றும், நமது கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர் என்றும் சொல்வது, அவர் நபி என்பதை உறுதி செய்கிறது.
அதோடு இதே அத்தியாயத்தில் வரும் வேறொரு வசனமும் இதே கருத்தை உறுதி செய்வதைப் பார்க்கலாம்.
‘(இவையெல்லாம்) உம் இறைவனுடைய ரஹ்மத்தில் நின்றும் உள்ளவை என் விருப்பு, வெறுப்பின்படி எந்தக் காரியத்தையும் செய்யவில்லை எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ அதன் விளக்கம் இது தான்’ என்று கூறினார்’ (அல்குர்ஆன் 18:82)
அவர் செய்தவைகளை தனது விருப்பு வெறுப்பின்படி செய்யவில்லை, இறை விருப்பத்தின் படியே செய்ததாக களிர் (அலை) அவர்கள் சொல்கிறார்கள். அவர்களுக்கு இறைச் செய்தி எனும் வஹீ வருகிறது, இல்லையேல் இறைவிருப்பம் எது என்பதை அவரால் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்?. அதனால் அவர் நபி தான் என்பதில் சந்தேகம் இல்லை.
2. களிர் (அலை) அவர்களின் பெயர்க்காரணம்:
களிர் (அலை) அவர்கள் ஒரு காய்ந்த பொட்டல் பூமியின் மீது அமர்ந்தார்கள். உடனே அவர்களுக்குப் பின்னே அது பசுமையான (கதிர்களுடைய)தாக (உயிர் பெற்று) அசையலாயிற்று. அதனால் தான் அவர்களுக்கு களிர் (பசுமையானவர்) என்று பெயரிடப்பட்டது. ( அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புஹாரி 3402, திர்மிதி 3198)
3. மூஸா (அலை) அவர்கள் களிர் (அலை) அவர்களை ஏன் சந்தித்தார்கள்?
பனூஇஸ்ராயீலைச் சார்ந்த ஒருவர் கேட்ட கேள்விக்கு மூஸா (அலை) அவர்கள் தவறான பதிலைத் தந்ததால் களிர் (அலை) அவர்களை சந்தித்து பாடம் பெறும் படி அல்லாஹ் அனுப்பினான்.
ஹதீஸின் இதற்கான பாகத்தை மட்டும் இங்கே குறிப்பிடுகிறோம்.
‘(ஒரு முறை) மூஸா (அலை) அவர்கள் பனூ இஸ்ராயீல்களிடையே எழுந்து நின்று உரையாற்றினார்கள். அப்போது அவர்களிடம், மக்களிடையே மிகவும் அறிந்தவர் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘நான் தான்’ என்று பதிலளித்து விட்டார்கள். ஆகவே அல்லாஹ் அவர்களைக் கண்டித்தான். ஏனென்றால் மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வே அறிந்தவன் என்று சொல்லாமல் விட்டு விட்டார்கள். ஆகவே அல்லாஹ் மூஸா (அலை) அவர்களிடம், ‘இல்லை, இருகடல்கள் சங்கமிக்கும் இடத்தில் என் அடியார் ஒருவர் இருக்கிறார். அவர் உங்களை விட அதிகமாக அறிந்தவர் என்று கூறினான்’. (நூல்கள்: புஹாரி 3401, முஸ்லிம் 5864, அஹ்மத், திர்மிதி 3196)
4. மூஸா (அலை) அவர்கள் களிர் (அலை) அவர்களை எவ்வாறு சந்தித்தார்கள்?
களிர் (அலை) அவர்களை எவ்வாறு சந்திப்பது என்ற விஷயத்தை அல்லாஹ்விடமே கேட்டு தெரிந்து கொண்டார்கள். அதற்கான அடையாளங்களை அல்லாஹ் விவரித்தான். அதற்கான ஹதீஸின் பகுதி இதோ!
மூஸா (அலை) அவர்கள், என் இறைவா! அவரை நான் சந்திப்பதற்கு யார் (வழி காட்டுவார்) என்று கேட்டார். அதற்கு அல்லாஹ், ‘நீங்கள் ஒரு மீனை எடுத்து அதை ஒரு கூடையில் போட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் எங்கே அந்த மீனைத் தவறவிடுகிறீர்களோ அங்கே தான் அவர் இருப்பார்’ என்று சொன்னான். அதன்படியே மூஸா (அலை) அவர்களும் அவர்களுடைய உதவியாளர் யூஷஉ பின் நூன் அவர்களும் ஒரு மீனை எடுத்துக் கொண்டு கூடையில் போட்டுக் கொண்டு நடந்தார்கள். அவர்கள் ஒரு பறையருகே சென்று சேர்ந்த போது அங்கே படுத்து ஓய்வெடுத்தார்கள். உடனே மூஸா (அலை) அவர்கள் தூங்கி விட்டார்கள். மீன் குதித்து வெளியேறி கடலில் விழுந்தது. அது கடலில் (சுரங்கம் போல) வழியமைத்துக் கொண்டு (செல்லத் தொடங்கி) விட்டது. மீனின் வழியில் குறுக்கிடாதவாறு நீரோட்டத்தை அல்லாஹ் தடுத்துவிட (மீனைச் சுற்றி) ஒரு வளையம் போல் தண்ணீர் ஆகிவிட்டது.
மீதமிருந்த இரவும் பகலும் அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். இறுதியில் அடுத்த நாள் வந்த போது தம் உதவியாளரை நோக்கி நமது காலைச் சிற்றுண்டியைக் கொண்டுவா, நாம் நமது இந்தப் பயணத்தால் மிகவும் களைப்படைந்து விட்டோம் என்று மூஸா (அலை) சொன்னார்கள். அல்லாஹ் கட்டளையிட்ட இடத்தை மூஸா (அலை) அவர்கள் தாண்டிச் செல்லும் வரை அவர்களுக்குக் களைப்பு ஏற்படவில்லை. அவர்களின் உதவியாளர் அவர்களிடம் நாம் அந்தப் பாறையில் ஓய்வெடுக்கத் தங்கினோமே பார்த்தீர்களா, அங்கே தான் நான் மீனை மறந்து (தவறவிட்டு)விட்டேன். (அதை நினைவில் வைத்திருக்காதபடி) ஷைத்தான் எனக்கு அதை மறக்கடித்து விட்டான். அது வியப்பான முறையில் கடலில் வழியமைத்துக் கொண்டு (சென்று) விட்டது என்று சொன்னார். மீனுக்கு அது (தப்பிக்க) வழியாகவும் அவ்விருவருக்கும் அது வியப்பாகவும் அமைந்தது. மூஸா (அலை) அவர்கள் அந்த உதவியாளரிடம் அது தான் நாம் தேடிக் கொண்டிருந்த இடம் என்று சொன்னார்கள். உடனே அவர்கள் இருவரும் வந்த வழியே திரும்பிச் சென்றார்கள். இறுதியில் அந்தப் பாறையை அடைந்தார்கள். அங்கே ஒரு மனிதர் தம்மை முழுவதுமாக ஆடையால் போர்த்திக் கொண்டு (அமர்ந்து) இருந்தார். (நூல்கள்: புஹாரி 3401, முஸ்லிம் 5864, அஹ்மத், திர்மிதி 3196)
5. களிர் (அலை) அவர்களுக்கு சலாம் சொன்ன மூஸா (அலை):
மூஸா (அலை) அவர்கள் அவருக்கு சலாம் கூற அம்மனிதர் அவர்களுக்கு பதில் சலாம் சொன்னார். பிறகு உங்களுடைய (இந்தப்) பகுதியில் (அறியப்படாத) சலாம் (உங்களுக்கு மட்டும்) எப்படி (வந்தது, நீங்கள் யார்) என்று களிர் வினவினார். மூஸா (ரலி) அவர்கள் நான் தான் மூஸா என்று பதிலளித்தார்கள். அதற்கு அம்மனிதர் பனூ இஸ்ராயீல்களின் (இறைத்தூதரான) மூஸாவா என்று கேட்டார். மூஸா (அலை) அவர்கள், ‘ஆம்’ என்றார்கள். (நூல்கள்: புஹாரி 3401, முஸ்லிம் 5864, அஹ்மத், திர்மிதி 3196)
6. மூஸா (அலை) அவர்கள் வைத்த வேண்டுகோள்:
மூஸா (அலை) அவர்கள், ‘உங்களுக்கு கற்றுத் தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கும் (சிறிது) நீங்கள் கற்றுத் தருவதற்காக நான் உங்களிடம் வந்திருக்கின்றேன்’ என்ற சொன்னார்கள். அதற்கு அவர்கள் மூஸாவே அல்லாஹ் எனக்கு கற்றுத் தந்த ஓர் அறிவு என்னிடம் உள்ளது. அதை நீங்கள் அறியமாட்டீர்கள், அல்லாஹ் உங்களுக்கு கற்றுத் தந்த ஓர் அறிவு உங்களிடம் உள்ளது. அதை நான் அறிய மாட்டேன் என்று சொன்னார். மூஸா (அலை) அவர்கள், நான் உங்களைத் தொடர்ந்து வரட்டுமா? என்று கேட்டார்கள். அவர், உங்களால் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது. நீங்கள் அறியாத விஷயத்தை எப்படிச் சகித்துக் கொண்டிருப்பீர்கள் என்று கேட்டார். அதற்கு மூஸா (அலை) அவர்கள் இன்ஷா அல்லாஹ்…இறைவன் நாடினால் நீங்கள் என்னைப் பொறுமையாளராகப் காண்பீர்கள். எந்த விவகாரத்திலும் உங்களுக்கு நான் மாறு செய்யமாட்டேன் என்று சொன்னார்கள். (நூல்கள்: புஹாரி 3401, முஸ்லிம் 5864, அஹ்மத், திர்மிதி 3196)
7. மரக்கலத்தில் பயணம்:
இருவரும் கடற்கரையோரத்தில் நடந்து சென்றார்கள். அப்போது மரக்கலம் ஒன்று அவர்களைக் கடந்து சென்றது. அதன் உரிமையாளரர்(களான ஏழைத் தொழிலாளர்)களிடம் தங்களை ஏற்றிச் செல்லும் படி பேசினார்கள். அவர்கள் களிர் (அலை) அவர்களை அடையாளம் தெரிந்து கொண்டு அவர்களை வாடகை கேட்காமல் ஏற்றிச் சென்றார்கள். அவர்கள் இருவரும் அம்மரக்கலம் ஏறிய போது சிட்டுக் குருவி ஒன்று வந்து மரக்கலத்தின் விளிம்பின் மீது விழுந்தது. பிறகு அது (தனது அலகால்) கடலில் ஒருமுறை அல்லது இருமுறை கொத்தி (நீர் அருந்தி)யது. உடனே மூஸா (அலை) அவர்களிடம் களிர் (அலை) மூஸாவே இந்தச் சிட்டுக் குருவி தன் அலகால் (நீரருந்தியதால்) இந்தக் கடலிலிருந்து எவ்வளவு (நீரை) எடுத்திருக்குமோ அந்த அளவுதான் என் அறிவும் உங்கள் அறிவும் அல்லாஹ்வின் அறிவிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறினார்கள்.
அப்போது களிர் (அலை) ஒரு கோடாரியை எடுத்து மரக்கலத்தின் (அடித்தளப்) பலகையைக் கழற்றி விட்டார்கள். களிர் (அலை) அவர்கள் வாய்ச்சியின் உதவியால் (மரக்கலத்தின்) பலகையைக் கழற்றிய பின்புதான் மூஸா (அலை) அவர்களுக்குத் தெரிய வந்தது. உடனே மூஸா (அலை) அவர்கள் என்ன காரியம் செய்து விட்டீர்கள், வாடகையில்லாமல் நம்மை ஏற்றி வந்தவர்களின் மரக்கலத்தை வேண்டுமென்றே ஓட்டையாக்கி விட்டீர்களே அதில் சவாரி செய்பவர்களை மூழ்கடிக்கவா (இப்படிச் செய்தீர்கள்), நீங்கள் மிகப்பெரும் (கொடுஞ்) செயலைச் செய்து விட்டீர்கள் என்று சொன்னார்கள். களிர் (அலை) அவர்கள் உங்களால் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா என்றார்கள். மூஸா (அலை) அவர்கள் நான் மறந்து விட்டதை வைத்து என்னை தண்டித்து (போகச் சொல்லி) விடாதீர்கள். என் விஷயத்தில் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள் என்று சொன்னார்கள். ஆக, மூஸா (அலை) அவர்கள் முதல் தடவையாகப் பொறுமையிழந்தது அவர்கள் மறந்து போனதால் தான். (நூல்கள்: புஹாரி 3401, முஸ்லிம் 5864, அஹ்மத், திர்மிதி 3196)
8. சிறுவனின் கொலை:
கடலிலிருந்து அவர்கள் வெளியேறிய போது சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனைக் கடந்து சென்றார்கள். களிர் (அலை) அவர்கள் அச்சிறுவனின் தலையைப் பிடித்துத் தம் கையால் இப்படிப் பிடுங்கி (தனியே எடுத்து) விட்டார்கள். இந்த இடத்தில் அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரலி) அவர்கள் தம் விரல் நுனிகளை எதையோ பறிப்பதைப் போல் காட்டி சைகை செய்தார்கள். அப்போது மூஸா (ரலி) அவர்கள் களிர் (அலை) அவர்களிடம் ஒரு பாவமும் அறியாத ஒரு (பச்சிளம்) உயிரையா நீங்கள் கொன்று விட்டீர்கள், அவன் வேறெந்த உயிரையும் பறிக்கவில்லையே, நீங்கள் மிகவும் தீய செயயைச் செய்து விட்டீர்கள் என்று கூறினார்கள். அதற்கு களிர் (அலை) அவர்கள் நீங்கள் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது என்று நான் (முன்பே) சொல்லவில்லையா, என்று சொன்னார்கள். மூஸா (அலை) அவர்கள் இதற்குப் பின்னால் நான் உங்களிடம் ஏதாவது (விளக்கம்) கேட்டால் என்னை உங்களுடன் வைத்திருக்காதீர்கள். என்னிடமிருந்து (பிரிந்து செல்ல) உங்களுக்குத் தக்க காரணம் கிடைத்து விட்டது என்றார்கள். (நூல்கள்: புஹாரி 3401, முஸ்லிம் 5864, அஹ்மத், திர்மிதி 3196)
9. இடிந்து விழ இருந்த சுவர்:
மீண்டும் இருவரும் நடந்தார்கள். இறுதியில் ஓர் ஊருக்கு வந்தார்கள். அந்த ஊர் மக்களிடம் உணவு கேட்டார்கள். ஆனால் அவர்கள் அவ்விருவரையும் உபசரிக்க மறுத்து விட்டார்கள். அந்த ஊரில் சாய்ந்தபடி கீழே விழ இருந்த சுவர் ஒன்றை இருவரும் கண்டார்கள். (இதைக் கண்ட) உடனே களிர் (அலை) அவர்கள் (இந்தச் சுவரை நிலை நிறுத்துவோம் என்பதற்கு அடையாளமாக) தம் கையால் இப்படி சைகை செய்தார்கள்.
மூஸா (அலை) அவர்கள் இந்த சமுதாயத்தினரிடம் நாம் வந்து (உணவு கேட்டு)ம் அவர்கள் நமக்கு உணவளிக்கவும் இல்லை விருந்துபசாரம் செய்யவும் இல்லை, (அவ்வாறிருந்தும்) வேண்டுமென்றே நீங்கள் அவர்களுடைய சுவரைச் செப்பனிட்டுள்ளீர்கள். நீங்கள் விரும்பியிருந்தால் அதற்குக் கூலி வாங்கிக் கொண்டிருக்கலாம் என்றார்கள். களிர் (அலை) அவர்கள் இதுதான் நானும் நீங்களும் பிரிய வேண்டிய நேரம் என்று கூறினார்கள். (நூல்கள்: புஹாரி 3401, முஸ்லிம் 5864, அஹ்மத், திர்மிதி 3196)
10. களிர் (அலை) அவர்களின் விளக்கம்:
உங்களால் பொறுமையாக இருக்க முடியாத விஷயங்களின் விளக்கத்தை நான் உங்களுக்கு (இப்போது) அறிவித்து விடுகிறேன் என்று கூறினார்கள். அவர்களுக்கு முன்னே ஒரு மன்னன் ஆளும் பகுதி இருந்தது. அவன் ஒவ்வொரு பழுதில்லாத ஒழுங்கான மரக்கலத்தையும் நிர்பந்தமாக அபகரித்துக் கொண்டிருந்தான். மேலும் அந்தச் சிறுவனுடைய விஷயம் என்னவெனில் அவன் இறை மறுப்பாளனாக இருந்தான். (நூல்கள்: புஹாரி 3401, முஸ்லிம் 5864, அஹ்மத், திர்மிதி 3196)
‘களிர் (அலை) அவர்கள் கொலை செய்த சிறுவன் படைக்கப்படும் போதே காபிராகப் படைக்கப்பட்டான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உபைபின் கஃப் (ரலி), நூல்: திர்மிதி 3197)
‘அந்த சிறுவனுடைய தாய், தந்தையர் இருவரும் முஃமின்களாக இருக்கிறார்கள்; அவன் (வாலிபனாகி) அவ்விருவரையும் வழிகேட்டிலும், குஃப்ரிலும் சேர்த்து விடுவான் என்று நாம் பயந்தோம்’. (அல்குர்ஆன் 18:80)
‘இன்னும், அவ்விருவருக்கும், பரிசத்தத்திலும் (பெற்றோரிடம்) அன்பு செலுத்துவதிலும் சிறந்திருக்கக் கூடிய (ஒரு மகனை) அவ்விருவருடைய இறைவன் (கொலையுண்டவனுக்குப்) பதிலாக கொடுப்பதை நாம் விரும்பினோம்’ (அல்குர்ஆன் 18:81)
‘இனி; (நான் நிமிர்த்து வைத்த) அந்த சுவர் அந்தப் பட்டிணத்திலுள்ள அநாதைச் சிறுவர் இருவருக்குரியது, அதன் அடியில் அவ்விருவருக்கும் சொந்தாமான புதையல் உள்ளது, அவ்விருவருடைய தந்தை (ஸாலிஹான) நல்ல மனிதராக இருந்தார் எனவே, அவ்விருவரும் தக்க பிராயமடைந்த தம்மிருவரின் புதையலையும் வெளிப்படுத்தி (எடுத்துக்) கொள்ள வேண்டும் என உம்முடைய இறைவன் நாடினான். (இவையெல்லாம்) உம் இறைவனுடைய ரஹ்மத்தில் நின்றும் உள்ளவை என் விருப்பு, வெறுப்பின்படி எந்தக் காரியத்தையும் செய்யவில்லை எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ அதன் விளக்கம் இது தான்’ என்று கூறினார். (அல்குர்ஆன் 18:82)
11. அறிவின் தத்துவம்:
அவர்கள் இருவரும் அம்மரக்கலம் ஏறிய போது சிட்டுக் குருவி ஒன்று வந்து மரக்கலத்தின் விளிம்பின் மீது விழுந்தது. பிறகு அது (தனது அலகால்) கடலில் ஒருமுறை அல்லது இருமுறை கொத்தி (நீர் அருந்தி)யது. உடனே மூஸா (அலை) அவர்களிடம் களிர் (அலை) மூஸாவே இந்தச் சிட்டுக் குருவி தன் அலகால் (நீரருந்தியதால்) இந்தக் கடலிலிருந்து எவ்வளவு (நீரை) எடுத்திருக்குமோ அந்த அளவுதான் என் அறிவும் உங்கள் அறிவும் அல்லாஹ்வின் அறிவிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறினார்கள். (நூல்கள்: புஹாரி 3401, முஸ்லிம் 5864, அஹ்மத், திர்மிதி 3196)
மறுமொழியொன்றை இடுங்கள்