இஸ்லாம்தளம்

கேள்வி பதில்-40

கண்ணேறு உண்டா? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

40 கேள்வி : கண்திருஷ்டி உண்டா? யாரால், எதனால், எப்படி வரும்? வந்தால் அதன் பாதிப்பு எப்படி இருக்கும்? அதில் இருந்து மீள்வது எப்படி? மேலும் கண்திருஷ்டியே வராமல் பாதுகாப்பு பெறுவது எப்படி?…போன்ற கண்திருஷ்டி பற்றி விரிவான விளக்கம் தாருங்கள். (அஜீஸ் மன்சூர் யாகூ டாட் காம் மெயில் மூலமாக)

1. கண்திருஷ்டி என்றால் என்ன?

தீங்கை ஏற்படுத்தும் ஒருவரது பார்வைக்கு கண்திருஷ்டி அல்லது கண்ணேறு என்று கூறுவார்கள்.
நபி (ஸல்) அவர்கள், ‘கண்ணேறு (ஏற்படுவது) உண்மையே’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி), நூல்: புஹாரி 5740, 5944, இப்னுமாஜா 3506)

‘ஆந்தையினால் ஏதும் இல்லை, (ஆந்தை அலறுவதால் ஏதும் இல்லை) கண்ணேறு உண்மையாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஹாபிஸ் அத்தைமீமி (ரலி), நூல்: திர்மிதி 2140)

2. கண்திருஷ்டி எவ்வாறு ஏற்படுகிறது?

கண்திருஷ்டி கெட்டவர்களினால் ஏற்படுகிறது, அதற்கு நபி (ஸல்) அவர்களின் இந்த ஹதீஸ் ஆதாரமாகும்.

கண்ணேறு பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, ‘அது ஷைத்தானின் வேலையாகும்’ என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: அபூதாவூது 3859)

3. கண்திருஷ்டியின் பாதிப்புகள் எவ்வாறு இருக்கும்?

கண்ணேறு முகத்தில் கருஞ்சிவப்பான படர்தாமரையை உண்டாக்கும். அதற்கான ஆதாரம்.

நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் ஒரு சிறுமியைப் பார்த்தார்கள். அவளுடைய முகத்தில் கருஞ்சிவப்பான படர்தாமரை ஒன்று இருந்தது. நபி (ஸல்) அவர்கள் இவளுக்கு ஓதிப்பாருங்கள். ஏனெனில் இவள் மீது கண்ணேறு பட்டிருக்கிறது என்று சொன்னார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புஹாரி 5739)

கண்திருஷ்டியினால் வியாதிகள், சுகவீனம் உண்டாகும் என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து விளங்கிக் கொள்ள முடிகிறது.

விதியை மாற்றுவதை மாற்றும் வலிமை வாய்ந்தது. அதற்கான ஆதாரம்.

‘அல்லாஹ்வின் தூதரே! ஜஃபரின் குழந்தைகளுக்கு அடிக்கடி கண்பட்டு விடுகிறது. அவர்களுக்காக நான் மந்திரிக்கலாமா? என்று அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஆம்! விதியை வென்று விடக்கூடிய ஒன்று இருக்குமானால் கண்ணேறு அதை வென்றுவிடும்’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உபைத் பின் ரிபாஆ அஸ்ஸுரகீ (ரலி), நூல்கள்: அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா 3510, திர்மிதி 2136)

விதியை எதுவும் மாற்றாது, மாற்ற முடியாது. அப்படி ஏதாவது ஒன்று இருந்திருந்தால் அதை (அந்த ஒன்றை) இந்தக் கண்ணேறு மாற்றும், விதியை மாற்றாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

4. கண்திருஷ்டியிலிருந்து மீள்வது எப்படி?

எளிமையான ஒரே வழி ஃபலக், நாஸ் என்ற அல்குர்ஆனின் கடைசி இரண்டு அத்தியாங்களை ஓதுவது தான்.

‘ஃபலக், நாஸ் அத்தியாயங்கள் இறங்கும் வரை கண்ணேறு, ஷைத்தான் ஆகியவற்றிலிருந்து நபி (ஸல்) அவர்கள் பாதுகாப்புத் தேடிக் கொண்டிருந்தார்கள். அவ்விரு வசனங்களும் இறங்கிய பின் அதை எடுத்துக் கொண்டு மற்றவைகளை விட்டு விட்டார்கள்’ என்று அபூஸயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்கள்: நஸயீ, இப்னுமாஜா 3511, திர்மிதி 2135)

மேற்கண்ட அத்தியாயங்களை ஓதுவதே கண்திருஷ்டி ஏற்படாமல் இருக்க வழியுமாகும்.

5. ஓதிப்பார்த்தல்:

கண்திருஷ்டியிலிருந்து மீள்வதற்கு ஓதிப்பார்க்க அனுமதி உண்டு. அதற்குரிய ஆதாரங்கள்.

‘விஷகடி, கண்ணேறு, சிரங்கு ஆகியவற்றுக்காக மந்திரிக்க நபி (ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள்’ என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: திர்மிதி 2132)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்ணேறுவி(ன் தீய விளைவி)லிருந்து விடுபட ஓதிப்பார்த்துக் கொள்ளும்படி கட்டளையிட்டார்கள் அல்லது எனக்குக் கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புஹாரி 5738, இப்னுமாஜா 3512)

‘சிரங்கு, கண்ணேறு ஆகியவற்றுக்குத் தவிர மந்திரித்தல் கிடையாது’ நபிமொழி. (அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி), நூல்: திர்மிதி 2134)

மந்திரித்தல் ஓதிப்பார்த்தல் இரண்டும் ஒரே பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

நபி (ஸல்) அவர்கள் அனுமதித்த முறையில் ஓதிப்பார்ப்பது அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும். அதுவல்லாத முறையில் ஓதிப்பார்ப்பது தடுக்கப்பட்டதாகும். அதற்குரிய ஆதாரங்கள்.

‘யார் சூடுபோட்டுக் கொள்கிறாரோ அல்லது மந்திரிக்கிறாரோ அவர் தவக்குலில் (உறுதியான நம்பிக்கையில்) இருந்து நீங்கி விட்டார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி), நூல்கள்: அஹ்மது, நஸயீ, இப்னுமாஜா, இப்னுஹிப்பான், ஹாகிம், திர்மிதி 2131)

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் கண்திருஷ்டியை கழிப்பதற்காக கட்டப்பட்ட கயிற்றை அறுக்குமாறு கட்டளையிட்டார்கள். மிருகங்களுக்கு கூட கறுப்புக் கயிறு கட்ட நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்க வில்லை. மனிதர்களுக்கு எப்படி அதை கட்ட முடியும்.

நான் அல்;லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய பிரயாணம் ஒன்றில் அவர்களுடன் இருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தூதுவர் ஒருவரை அனுப்பி எந்த ஒட்டகத்தின் கழுத்திலும் (ஒட்டக வாரினால் ஆன கண் திருஷ்டி கழிவதற்காக கட்டப்படுகின்ற) கயிற்று மாலையோ அல்லது (காற்று கருப்பை விரட்டுவதற்காக கட்டப்படுகின்ற) வேறெந்த மாலையோ இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் கட்டாயம் அதைத் துண்டித்து விட வேண்டும் என்று (பொது மக்களிடையே) அறிவிப்புச் செய்தார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் அப்போது மக்கள் தங்கள் உறங்கும் இடத்தில் இருந்தார்கள் என்று அபூபஷீர் (ரலி) அவர்கள் கூறியதாக நான் எண்ணுகிறேன் என்று கூறுகிறார்கள். (நூல்: புஹாரி 3005)

‘எந்த வித விசாரணையும் இன்றி சொர்க்கம் செல்லும் எழுபதினாயிரம் பேர் ஓதிப் பார்க்காது, இறைவனையே சார்ந்திருப்பவர்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி 5705)
இங்கே ஓதிப்பார்ப்பது என்பது நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த முறையில் அமையாததை குறிக்கும். நபி (ஸல்) அவர்கள் தனக்குத் தானே ஓதிப்பார்த்திருக்கிறார்கள் என்பதிலிருந்தும் அனுமதிக்கப்பட்ட முறையில் ஓதிப்பார்க்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

6. ஓதிப்பார்க்கும் முறை:

நபி (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வொரு இரவிலும் தமது உள்ளங்கைகளை இணைத்து அதில் குல்ஹுவல்லாஹுஅஹத், குல்அவூது பிரப்பில் ஃபலக், குல்அவூது பிரப்பின் னாஸ் ஆகிய (112,113,114) அத்தியாயங்களை ஓதி ஊதிக் கொள்வார்கள். பிறகு தம் இரு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தமது உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து பிறகு முகம் பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி), நூல்: புஹாரி 5017)

7. நடை முறை:

நடை முறையில் கண்திருஷ்டியை கழிக்க ‘தலைசுற்றிப் போடுதல்’ என்ற முறை உள்ளது. இது மாற்றுமத சமூகத்திலிருந்து முஸ்லிம் சமுதாயத்தில் நுழைந்து விட்ட வழக்கமாகும். பட்ட மிளகாய், உப்பு, முச்சந்தி மண், வீட்டுக் கூறையின் ஓலை இவை போன்றவற்றை கண்திருஷ்டி பட்டவரின் தலையை மூன்று முறை சுற்றி நெருப்பில் போட்டு விடுவார்கள். இன்னும் இது போன்ற வழக்கங்களும் நடைமுறையில் உள்ளன.

இம்முறைகள் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டிய மூடப்பழக்கமாகும். இதனால் கண்திருஷ்டி குணமாகாது.

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: