4 கேள்வி : தொழுகையில் இறுதி இருப்பு இருக்கும் போது இரண்டு ரக்அத்துகளாக இருந்தால் இரு கால்களையும் நேராக வைக்க வேண்டும் என்றும் (ஃபஜ்ர் மற்றும் சுன்னத்துகள்) மூன்று அல்லது நான்கு ரக்அத்துகளாக இருந்தால் இடது காலை மடித்து வலது காலின் உள்ளே செலுத்தி வலது காலின் பாதத்தை நட்டு வைக்க வேண்டும் என சிலர் கூறுகின்றார்களே விளக்கவும். (இது வரை நான் அனைத்து தொழுகையின் இறுதி இருப்பிலுமே ஒரு காலை மடக்கிதான் தொழுவேன்) (அப்துல் குத்தூஸ் அராம்கோ மெயில் மூலமாக)
நீங்கள் கேள்விப்பட்டது ஓரளவு உண்மை என்றாலும் அதில் தவறுகளும் உள்ளன. அது சம்பந்தமான ஹதீஸ்களை நாம் பார்ப்போம்.
முஹம்மது பின் அம்ரு கூறியதாவது.
‘நான் சில நபித்தோழர்களுடன் அமர்ந்திருந்தேன். நபி (ஸல்) அவர்களின் தொழுகையைப் பற்றி அப்போது பேசிக் கொண்டோம். அங்கிருந்த அபூஹுமைத் அஸ்ஸாயிதீ (ரலி) அவர்கள் ‘நபி (ஸல்) அவர்களின் தொழுகையைப் பற்றி உங்களில் நான் மிகவும் அறிந்திருக்கிறேன். நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறும் போது தனது இரு கைகளையும் தமது தோள் புஜங்களுக்கு நேராக உயர்த்துவார்கள். ருகூவு செய்யும் போது இரு கைகளையும் மூட்டுக்கால்களின் மீது படியச் செய்வார்கள். பின்னர் தமது முதுகை (வளைவு இன்றி) நேராக்குவார்கள். (ருகூவிலிருந்து) தலையை உயர்த்தும் போது ஒவ்வொரு மூட்டும் அதனுடைய இடத்திற்கு வரும் அளவுக்கு நிமிர்வார்கள். அவர்கள் சஜ்தா செய்யும் போது தமது கைகளை விரிக்காமலும் மூடிக் கொள்ளாமலும் வைப்பார்கள். தமது கால் விரல்களின் முனைகளைக் கிப்லாவை நோக்கச் செய்வார்கள். இரண்டாவது ரக்அத்தில் அமரும் போது இடது கால் மீது அமர்ந்து வலது காலை நட்டி வைப்பார்கள். கடைசி ரக்அத்தில் உட்காரும் போது இடது காலை வலப்புறமாகக் கொண்டு வந்து வலது காலை நட்டி வைத்துத் தமது இருப்பிடம் தரையில் படியுமாறு உட்காருவார்கள்’ எனக் கூறினார். (நூல்: புகாரி – 828)
புகாரியில் இடம் பெற்றிருக்கும் இந்த ஹதீஸ் தெளிவாகவே இரண்டாவது ரக்அத்திலும் கடைசி ரக்அத்திலும் நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு அமர்ந்துள்ளார்கள் என்பதை விளக்குகிறது.
இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் சொன்னால் நன்றாக இருக்கும் நான்கு ரக்அத்துத் தொழுகையாக இருந்தால் மேலே குறிப்பிட்ட ஹதீஸில் சொல்லப்பட்டவாறு எளிதாக செய்து விடுவோம். அதேநேரம் இரண்டு ரக்அத்துத் தொழுகையாக இருந்தால் (உதாரணமாக ஃபஜ்ரின் பர்லு இரண்டு ரக்அத்துக்கள்) எவ்வாறு கால்களை வைப்பது? இடது காலின் மீது அமர்ந்து வலது காலை நட்டி வைப்பதா? அல்லது இடது காலை வலப்புறமாகக் கொண்டு வந்து வலது காலை நட்டி வைத்து இருப்பிடம் தரையில் படியுமாறு அமர்வதா?
இந்த கேள்விக்கு விடை மேற்க்கண்ட ஹதீஸின் ‘கடைசி ரக்அத்தில்’ என்ற வார்த்தையை சிந்தித்தாலே விடை கிடைத்து விடும். இரண்டு ரக்அத்தின் கடைசி ரக்அத்தாக இருந்தாலும் நான்கு ரக்அத்தின் கடைசி ரக்அத்தாக இருந்தாலும் இடது காலை வலப்புறமாகக் கொண்டு வந்து வலது காலை நட்டி வைத்து இருப்பிடம் தரையில் படியுமாறு அமர வேண்டும். இதுவே தான் இரண்டு ரக்அத்துக்களான சுன்னத் தொழுகைக்கும் பொருந்தும்.
இதே கருத்தை மேலும் வலியுறுத்தும் விதமாக திர்மிதியில் இடம் பெற்ற ஹதீஸின் கடைசிப் பகுதியைப் பாருங்கள்.
‘….இவ்வாறு செய்து விட்டு எந்த ரக்அத்துடன் அவர்களின் தொழுகை முடியுமோ அந்த ரக்அத்தில் இடது காலை வெளிக்கொணர்ந்து இருப்பிடம் தரையில் படுமாறு உட்கார்ந்து பிறகு ஸலாம் கொடுப்பார்கள்’ என்று அபூஹுமைத் (ரலி) குறிப்பிட்டார்கள். (நூல்கள்: திர்மிதி – 303, அபூதாவூத், தாரிமீ, இப்னுமாஜா)
மறுமொழியொன்றை இடுங்கள்