ஆண் டாக்டர்கள் பிரசவம் பார்ப்பதை இஸ்லாம் அனுமதிக்கிறதா?
39 கேள்வி : பெண்களுக்கு ஆண் டாக்டர்கள் பிரசவம் பார்க்க இஸ்லாம் அனுமதிக்கிறதா? மார்க்க அடிப்படையில் விளக்கம் கூறவும். (ஹாஜா குத்புத்தீன் ஹாட்மெயில் டாட் காம் மூலமாக)
பெண்களுக்கு ஆண் டாக்டர்கள் பிரசவம் பார்க்கும் போது பெண்களின் பிறப்பு உறுப்பை பார்க்கும் நிலை ஏற்படுகிறது. இதை இஸ்லாம் அனுமதிக்க வில்லை.
‘(நபியே!) முஃமினான ஆண்களுக்கு கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளட்டும். அவர்களின் வெட்கத்தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ளட்டும்…’ (அல்குர்ஆன் 24:30)
‘முஃமினான பெண்ணுக்குச் சொல்வீராக! அவர்களும் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும். அவர்களது வெட்கத்தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ளட்டும்…’ (அல்குர்ஆன் 24:31)
ஒவ்வொருவரும் அனுமதிக்கப்படாவைகளை பார்ப்பதை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும். பிறர் பார்க்கும் அளவுக்கு தனது அங்கங்களை வெளிப்படுத்தவும் கூடாது என்பதை இந்த வசனங்களிலிருந்து விளங்கலாம்.
திருக்குர்ஆனில் இன்னும் சில வசனங்கள் இதே கருத்தைக் கூறுகின்றன.
இதிலிருந்து பெண்களுக்கு பிரசவம் பார்க்க ஆண் டாக்டர்களை இஸ்லாம் அனுமதிக்க வில்லை என்பதை விளங்கலாம். முன்பே திட்டமிட்டு கைனகாலஜி படித்த பெண் டாக்டர்களை பிரசவத்திற்கு ஏற்பாடு செய்வதே நல்லது.
வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இருவருடைய கப்றுகளைக் கடந்து நபி (ஸல்) அவர்கள் சென்ற போது, ‘இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள், ஆனால் மிகப் பெரும் பாவத்திற்காக வேதனை செய்யப்படவில்லை. ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது மறைக்காதவர். இன்னொருவர் கோள் சொல்லித் திரிந்தவர்’ எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புஹாரி 1361)
இந்த ஹதீஸில் சிறுநீர் கழிக்கும் போது மறைக்காதவர் கப்ரில் வேதனை செய்யப்படுகிறார் என்பதிலிருந்து பொதுவாக வெட்கத்தலங்களை பிறரிடமிருந்து மறைக்க வேண்டும் என்பதை கூறினாலும் பெண்கள் ஆண்களிலிருந்தும் ஆண்கள் பெண்களிலிருந்தும் மறைக்க வேண்டும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த குர்ஆன் வசனங்களும் ஹதீஸும் சாதாரண நிலையில் நடந்து கொள்ள வேண்டிய விதத்தைச் சொல்கிறது. ஆனால் பிரசவம் போன்ற அசாதாரண நிலைக்கு இது பொருந்துமா? என்ற கேள்வி எழாமல் இல்லை.
இது பிரசவம் போன்ற அசாதாரண நிலைக்கும் பொருந்தும் பொதுவான கட்டளையாகும், என்றாலும் சில தவிர்க்க முடியாத நிலையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பிரசவம் சிரமானதாக இருக்கும் போது அல்லது அறுவை சிகிச்சையாக ஆகும் போது ஆண் டாக்டர்களின் உதவி தேவைப்படும். அப்போது நாம் ஆண் டாக்டர்களை அனுமதிப்பது தான் சிறந்தது. இல்லையேல் தாய் சேயின் உயிருக்கு ஆபத்தாக ஆகிவிடும்.
அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்:
‘எந்த ஒரு ஆத்மாவையும் கொல்லாதீர்கள்’ (அல்குர்ஆன் 6:151)
‘நாம் எந்த ஒரு ஆத்மாவையும் அதன் சக்தி மீறி கஷ்டப்படுத்துவதில்லை’ (அல்குர்ஆன் 6:152)
உயிருக்கு ஆபத்தான நேரத்தில், மாற்று வழி இல்லாத போது ஆண் டாக்டர்களை பிரசவம் பார்க்க அனுமதிக்கலாம் என்பதற்கு இந்த வசனங்கள் ஆதாரங்களாகும்.
மேலும், நிர்பந்தத்தின் போது ஹராமாக்கப்பட்ட பொருள் கூட உண்ண அனுமதிக்கும் குர்ஆன் வசனம் கூட இதற்கு ஆதாரமாகும்.
‘(நபியே!) நீர் கூறும்; ”தானாக இறந்தவைகளையும் வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை” – ஏனெனில் இவை நிச்சயமாக அசுத்தமாக இருக்கின்றன. அல்லது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டது பாவமாயிருப்பதனால் – (அதுவும் தடுக்கப்பட்டுள்ளது) – ஆனால் எவரேனும் நிர்ப்பந்திக்கபட்டு, வரம்பை மீறாமலும் பாவம் செய்ய நினைக்காமலும் புசித்துவிட்டால் – (அவர்மீது குற்றமாகாது ஏனெனில்) நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க மன்னிப்போனாகவும், பெருங் கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்’ (அல்குர்ஆன் 6:145)
சுருக்கமாக சொல்வதென்றால், பிரசவத்திற்கு பெண் டாக்டர்களையே ஏற்பாடு செய்ய வேண்டும். நமது முயற்சிக்குரிய நற்கூலியை அல்லாஹ் தர போதுமானவன். முடியாத பட்சத்திலோ அல்லது ஆபத்தான சூழ்நிலையிலோ ஆண் டாக்டர்களை அனுமதிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.
மறுமொழியொன்றை இடுங்கள்