தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்?
32 கேள்வி : கண்ணுக்கு கண், காதுக்கு காது, மூக்குக்கு மூக்கு, காயத்துக்கு காயம் என்று குர்ஆனில் உள்ளது. காயத்துக்கு காயம் என்றால் ஒருவருக்கு நாம் சிறிய காயம் ஏற்படுத்தி விட்டால் அதற்கு பதிலாக அவர் எப்படி அதே அளவு காயம் ஏற்படுத்த முடியும்? சற்று பெரியதாகி விட்டால் என்ன செய்வார். விளக்கவும். (அல்புரூனி, ஹாட் மெயில் மூலமாக)
அவர்களுக்கு நாம் அதில், ‘உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும், காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்’ எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும். எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கடடளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்களே! (அல்குர்ஆன் 5:45)
இது தான் நீங்கள் குறிப்பிடும் வசனமாகும். இந்த வசனம் குற்றவியல் சட்டம் பற்றிய வசனமாகும். இது ஒரு அரசாங்கம் எவ்வாறு தங்களது குடிமக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்பதைச் சொல்கிறது. ஒரு தனிமனிதன் இன்னொரு மனிதனுக்கு உடனடியாக இந்த தண்டனையை வழங்க முடியாது. இதை ‘எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கடடளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ’ என்ற வரியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
யார் மன்னித்து விடுகின்றாரோ அவருக்கு அது அவரது பாவத்திற்குரிய பரிகாரமாக அமைந்து விடும்.
அரசாங்கமும் கூட, ஒருவருக்கு எந்த அளவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதோ அதே அளவு தான் காயம் உண்டாக்க முடியும். அதற்கு அதிகமாக காயம் ஏற்படுத்தக் கூடாது. இதற்கு ஆதாரமாக வேறு வசனத்தை சொல்ல முடியும்.
‘ஆகவே, எவனாவது (அம்மாதத்தில்) உங்களுக்கு எதிராக வரம்பு கடந்து நடந்தால், உங்கள் மேல் அவன் எவ்வளவு வரம்பு மீறியுள்ளானோ அதே அளவு நீங்கள் அவன் மேல் வரம்வு மீறுங்கள். அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்’. (அல்குர்ஆன் 2:194)
ஒருவன் வரம்பு மீறி நடந்தால் அதே அளவு தான் வரம்பு மீற மற்றவனுக்கு அனுமதியுண்டு, என்றிருக்கும் போது தண்டனைச் சட்டத்திலும் அளவுக்கு அதிகமாக காயம் ஏற்படுத்தக் கூடாது என்பது தெளிவாகிறது.
அறிவியலில் உச்ச நிலையை அடைந்து விட்ட இன்றைக்கு எந்த அளவு காயம் ஏற்படுத்த முடியுமோ அந்த அளவு டாக்டர்களை வைத்து காயத்தின் அளவு இம்மி அளவு கூடாமல் பார்த்துக் கொள்ள முடியும். ஆனால் முந்தைய காலங்களில் இதற்கு சாத்தியம் குறைவு தான். அப்படிப்பட்ட காலகட்டத்தில் காயத்தின் அளவு கூடி விட்டால் அதை சரிசெய்யும் விதத்தில் எதிராளிக்கும் வழங்குவது தான் சரியான தீர்ப்பாக இருக்க முடியும். அல்லாஹ் மிக அறிந்தவன்.
மறுமொழியொன்றை இடுங்கள்