இஸ்லாமியப் பத்திரிக்கை நடத்துவது பித்அத் ஆகுமா?
31 கேள்வி : பித்அத் என்பது நன்மை கருதி மார்க்க விஷயத்தில் புதியவை சேர்த்தல். ‘நாம் சொல்லாத செய்யாத ஒன்றை எவர் செய்தாலும் அது நிராகரிக்கப்படும்’ என்பது நபிமொழி. நன்மை கருதி மார்க்க இதழ் நடத்துவது பித்அத் ஆகுமா? (அல்புரூனி, யாகூ மெயில் மூலமாக)
நபி (ஸல்) அவர்கள் சொல்லாதவை செய்யாதவை அங்கீகரிக்காதவை பித்அத் என்று சுருக்கமாக நம்மால் சொல்ல முடியும். இதை கீழ் வரும் நபிமொழிகள் கூறுகின்றன.
நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யார் செய்கிறாரோ அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம்)
நமது மார்க்கத்தில் யார் புதிதாக உண்டுபண்ணுகிறாரோ அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
மார்க்க இதழ் நடத்துவதற்கு நபி (ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரத்தில் ஆதாரம் கிடைத்து விட்டால் போதும். அது கூடும் என்ற முடிவுக்கு வந்துவிட முடியும்.
1. நபி (ஸல்) அவர்கள் மூலம் எந்தச் செய்தி கிடைத்தாலும் அதனை பிறருக்கு எத்தி வைக்க வேண்டும். அதாவது மார்க்கப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற கருத்தைச் சொல்லும் கீழ் வரும் ஹதீஸைப் பாருங்கள்.
‘என்னிடமிருந்து ஒரு செய்தி கிடைத்தாலும் அதை பிறருக்கு எத்தி வைத்து விடுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி 3461)
மற்றொரு ஹதீஸில்,
‘இங்கு வந்தருப்பவர்கள் வராதவர்களுக்கு இந்த செய்திகளை எத்தி வைத்து விடுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபீபக்ரா (ரலி), நூல்: புகாரி 5550)
இஸ்லாத்தை பிறருக்கு எத்தி வைப்பதற்காக எல்லா வகையான முயற்சிகளையும் உள்ளடக்கக் கூடிய இந்த ஹதீஸ்களே பத்திரிக்கை நடத்த போதுமான ஆதாரங்களாகும்.
2. நபி (ஸல்) அவர்களின் வழிமுறைப்படி எழுத்து மூலம் இஸ்லாத்தை சொல்வது அனுமதிக்கப்பட்ட முறையாகும். நபி (ஸல்) அவர்கள் பல மன்னர்களுக்கு கடிதம் எழுதினார்கள். அதில் இஸ்லாத்தின்பால் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்கள். அதில் அஸ்லிம் வதஸ்லம் என்ற வாசகத்தை குறிப்பிடுவார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ரோமாபுரியின் சக்கரவர்த்தி) சீசருக்குக் கடிதம் எழுதினார்கள். (அதில்) நீர் (இஸ்லாமிய அழைப்பைப்) புறக்கணிப்பீராயின் உம்(பாமரக்) குடிமக்கள் (இஸ்லாத்தை ஏற்காமல் போவதின்) பாவம் உம்மைச் சேரும் என்று கூறியிருந்தார்கள். (புகாரி 2936,2940)
நேரடியாக நபி (ஸல்) அவர்கள் பத்திரிக்கை நடத்தா விட்டாலும், பத்திரிக்கை மூலம் செய்யும் வேலையை கடிதம் மூலம் செய்துள்ளார்கள். அதில் இஸ்லாத்தை பிறருக்கு சொல்லியுள்ளார்கள்.
அதனால் இஸ்லாத்தை சொல்வதற்கு கடிதம் எழுதலாம், பத்திரிக்கை நடத்தலாம், வெப்சைட் மூலம் கூட இஸ்லாத்தை சொல்லலாம், சேட்டலைட் டிவி, இன்னும் இனிமேல் கண்டு பிடிக்கப்பட இருக்கிற தொலைத் தொடர்பு நவீன கருவிகள் என்னெ;னவோ அதன் மூலமும் இஸ்லாத்தை சொல்ல முடியும். அவற்றை பித்அத் என்று சொல்ல முடியாது.
மறுமொழியொன்றை இடுங்கள்