மாதவிடாய்காரியை நெருங்காதீர் என்பதன் பொருள் என்ன?
30 கேள்வி : மாதவிலக்கு சம்பந்தமாக ஸுனன் இப்னுமாஜாவில் உள்ள 264, 265, 267, 269 ஹதீஸ்கள் அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடும் ‘மாதவிடாயின் போது அவர்களை நெருங்கவும் வேண்டாம்’ எனும் வசனத்துடன் முரண்பட வில்லையா? விளக்கம் தேவை. (முகம்மது நஸான் (சிரிலங்கா), யாகூ மெயில் மூலமாக)
நீங்கள் குறிப்பிடுவது போன்ற ஹீதீஸ் இப்னுமாஜாவில் இந்த எண்களில் இடம்பெற்றிருக்க வில்லை, மாறாக அவை அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது. அந்த ஹதீஸ்களை அப்படியே தருகிறோம்.
‘யார் தனது மனைவி மாதவிலக்காக இருக்கும் போது உடலுறவு கொள்கிறாரோ அவர் ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்வாராக!’ என்று அண்ணல் நபி (ஸல்) சொன்னார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: அபூதாவூது 264)
ஒருவர் தன் மனைவியை மாதவிடாய் துவக்கத்தில் உடலுறவு கொண்டால் ஒரு தீனார்! அவளை மாதவிடாய் நின்று போகும் போது உடலுறவு கொண்டால் அரை தீனார்! (தர்மம் செய்ய வேண்டும்) என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். (அறிவிப்பவர்: மிக்ஸம் அவர்கள், நூல்: அபூதாவூது 265)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தனது மனைவியர்களில் மாதவிலக்காகி இருக்கும் மனைவியை அவர் மே(னியி)ல் பாதி தொடைகள் வரை அல்லது முட்டுகள் வரை மறைக்கின்ற ஆடையிருக்கும் போது கட்டி அணைப்பார்கள். (அறிவிப்பவர்: மைமூனா (ரலி), நூல்: அபூதாவூது 267)
நான் மாதவிலக்காகி இருக்கும் போது நானும், அல்லாஹ்வுடைய திருத்தூதர் (ஸல்) அவர்களும் (இடுப்பாடை அல்லாத) ஒரே மேலாடையில் (இருவரும் படுத்து) இரவைக் கழிப்போம். என்னிடமிருந்து எதுவும் (இரத்தம்) அதில் (அவ்வாடையில்) பட்டு விடும்போது அதனுடைய இடத்தை (மட்டும்) அ(து பட்ட இடத்)தை மட்டும் அவர்கள் கழுவுவார்கள். பிறகு அதை அணிந்தவாறு தொழுது கொள்வார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி), நூல்: அபூதாவூது 269)
நீங்கள் சொல்லும் குர்ஆன் வசனத்தை அப்படியே தருகின்றோம்:
‘…ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள், அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்…’ (அல்குர்ஆன் 2:222)
மேலே உள்ள குர்ஆன் வசனமும் அபூதாவூது 267,269 ஹதீஸ்களும் முரண்படுவது போல் தோன்றினாலும் வேறு சில ஹதீஸ்கள் இதற்கு விளக்கமாக அமைந்துள்ளன. கீழே வரும் ஹதீஸ் இந்த குர்ஆன் வசனம் இறங்குவதற்குரிய காரணத்தையும் விளக்குகிறது.
அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
யூதர்கள் மாதவிடாய்க்காரியுடன் வீட்டில் சேர்ந்து அமர மாட்டார்கள், பருக மாட்டார்கள். இது பற்றி நபி (ஸல்) அவர்களிடமும் கூறப்பட்டது. அப்போது, ‘மாதவிடாய் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். அது தொல்லை தரும் தீட்டு ஆகும். எனவே மாதவிடாய் சமயத்தில் பெண்களை விட்டு விலகி இருங்கள்’ என்ற 2:222 வசனம் இறங்கியது. அதை நபி (ஸல்) அவர்கள் விளக்கும் போது, ‘உடலுறவைத் தவிர மற்ற அனைத்தையும் செய்து கொள்ளுங்கள்’ என்றார்கள். (நூல்கள்: முஸ்லிம், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அபூதாவூது)
‘மாதவிடாய் பெண்களை விட்டு விலகியிருங்கள், அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்’ என்ற வாசகம் நேரடியாக உடலுறவைக் குறிப்பதாக நபி (ஸல்) அவர்களின் விளக்கம் அமைந்துள்ளதால் இந்த விஷயத்தில் எந்த முரண்பாடும் இல்லை.
மாதவிடாய் நேரத்தில் உடலுறவில் ஈடுபடுவது குற்றம். அபூதாவூது 264,265 ஹதீஸ்கள் மறந்தோ அல்லது தன்னைத்தானே கட்டுப்படுத்த முடியாத நிலையிலோ மாதவிடாய் சமயத்தில் உடலுறவில் ஈடுபட நேர்ந்தால் அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்பதைக் கூறுகிறது. ஒரு தீனார் என்பது நாலரை கிராம் எடையுள்ள தங்க நாணயமாகும். அதையோ அல்லது கிரயத்தையோ தர்மம் செய்தாக வேண்டும். இந்த ஹதீஸ்கள் அந்த வசனத்தோடு முரண்படவே இல்லை.
இது கடமையான நோன்பிருக்கும் ஒருவர் உடலுறவில் ஈடுபட்டு விட்டால் அதற்கு பரிகாரமாக 60 நோன்பு வைக்க வேண்டும் அல்லது 60 ஏழைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்ற குற்றப்பரிகாரத்தைப் போன்றது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
மறுமொழியொன்றை இடுங்கள்