துல்ஹஜ் மாதத்தின் 9 நோன்புகள் நோற்க வேண்டுமா?
3 கேள்வி : துல்ஹஜ் மாதத்தில் அரஃபாவுடைய தினத்தில் ஹாஜியல்லாதவர்கள் நோன்பு நோற்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், புதிதாக துல்ஹஜ் மாதத்தில் 9 நோன்புகள் வைக்க வேண்டும் எனவும் அதை தொடர்சியாகவோ அல்லது விட்டுவிட்டோ வைக்கலாம் எனவும், அதுவும் ஹாஜிகள் 8 நோன்புகளும் ஹாஜியல்லாதோர் 9 நோன்புகளும் வைக்க வேண்டும் எனவும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒரு பேச்சாளர் கூறியதாக எனது நண்பர் ஒருவர் கூறினார். ஆதாரம் திர்மிதியிலிருந்து எடுத்ததாகவும் கூறினார். இது எந்த அளவிற்கு உண்மை என விளக்கவும். (அப்துல் குத்தூஸ் – ரஹீமா, சவூதி அரேபியா. அராம்கோ.காம் ஈமெயில் மூலமாக)
துல்ஹஜ் மாதம் 9 நோன்புகள் வைப்பதற்க்கு போதுமான நேரடியான ஆதாரங்கள் இருக்கத்தான் செய்கின்றன, அதன் விளக்கத்தைப் பார்ப்போம்.
முதலில் திர்மிதியில் இடம் பெற்ற ஓரு ஹதீஸைப் பார்ப்போம்.
‘இந்தப் பத்து நாட்கள் வணக்கத்தில் ஈடுபடுவது வேறு நாட்கள் வணக்கத்தில் ஈடுபடுவதை விட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும். ஒவ்வொரு நாள் நோன்பும் ஓராண்டு நோன்புக்கு நிகரானதாகும். ஒவ்வொரு இரவும் வணங்குவது லைலதுல் கத்ர் எனும் இரவில் நின்று வணங்குவதற்கு நிகரானதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: திர்மிதி 689)
நஹ்ஹாஸ் பின் கஹ்ம் என்ற அறிவிப்பாளரின் நினைவாற்றல் குறித்து யஹ்யா பின் ஸயீத் குறைகூறியுள்ளார் என்று திர்மிதி இமாம் கூறுகிறார்கள்.
மூன்றாவது அறிவிப்பாளர் நஹ்ஹாஸ் பின் கஹ்ம் என்பாரும் நான்காவது அறிவிப்பாளர் மஸ்வூத் பின் வாஸில் என்பாரும் பலவீனமானவர்கள் என்பதை இந்த ஹதீஸின் மொழிபெயர்ப்பாளர் தெளிவுபடுத்துகிறார்.
ஆக இந்த ஹதீஸின் படி செயல்பட முடியாது.
கீழ் வரும் ஹதீஸைப் பாருங்கள்.
‘இந்தப் பத்து நாட்கள் நல்லறங்கள் செய்வது ஏனைய நாட்களில் அவற்றைச் செய்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும்’ என்று நபி (ஸல்) கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், ‘அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா?’ என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதைவிடவும் சிறந்தது தான், ஆயினும் யார் தனது உயிருடனும் தனது செல்வத்துடனும் புறப்பட்டுச் சென்று அவ்விரண்டில் எதையும் திரும்பக் கொண்டு வராத போராளியைத்தவிர’ (அதாவது அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதாக ஆனவரைத் தவிர) என்று விடையளித்ததாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(நூல்கள்: புஹாரி, அபூதாவூது, இப்னுமாஜா, திர்மிதி – 688)
நல்லறங்கள் புரியுமாறு நபி (ஸல்) ஆர்வமூட்டியுள்ளார்கள். நோன்பும் நல்லறம் தானே! இந்த அடிப்படையில் நோன்பு நோற்பதை யாரும் தடுக்க முடியாது.
கீழே வரக்கூடிய அடுத்த ஹதீஸைப் பாருங்கள்.
‘துல்ஹஜ் மாதம் முதல் 9 நாட்களிலும் ஆஷுரா தினத்திலும் ஒவ்வொரு மாதத்தின் மூன்று நாட்களிலும் அதாவது மாதத்தின் முதல் திங்கள் மற்றும் வியாழன் நாட்களிலும் நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்’ என்று நபி (ஸல்) அவர்களின் மனைவியருள் ஒருவர் கூறியதாக ஹுனைதா பின் காலித் என்பவர் தனது மனைவி மூலமாக அறிவிக்கிறார்.
நூல்: அபூதாவூது – 2431, நஸயீ, அஹ்மது
(இமாம் நவவி (ரஹ்) அவர்கள் இந்த நாட்களில் நோன்பு வைப்பது மிகவும் விரும்பத்தக்கது என்று கூறியுள்ளார்கள்)
துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்களில் நபி (ஸல்) நோன்பு வைக்கவில்லை என்று நேரடியாகவே வேறொரு ஹதீஸ் வருகிறது.
‘(துல்ஹஜ் மாதம்) பத்து நாட்கள் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்று நான் கண்டதில்லை’ என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதி 687, முஸ்லிம், அபூதாவூது ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது)
நபி (ஸல்) அவர்கள் இந்தப் பத்து நாட்களில் நோன்பு வைக்கவில்லை என்று இந்த ஹதீஸும் நோன்பு வைத்தார்கள் என்று மற்றொரு ஹதீஸும் வந்திருப்பது முரண்பாடாக தோன்றலாம். இதற்கு விடையை எளிதாக கண்டு விட முடியும்.
1. நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைத்திருந்ததை ஆயிஷா (ரலி) அவர்கள் அறியாதவர்களாக இருந்திருக்கலாம். ஆயிஷா(ரலி) அவர்களுக்கு தெரியவில்லை என்பதற்க்காக நபி (ஸல்) அவர்கள் அந்த நாட்களில் நோன்பு வைக்கவே இல்லை என்று முடிவுக்கு வர இயலாது.
2. நபி (ஸல்) அவர்கள் பிரயாணத்தினாலோ அல்லது நோயினாலோ நோன்பை விட்டிருக்கலாம்.
3. இந்த நாட்களின் முக்கியத்துவத்தை சொன்ன நபி (ஸல்) அவர்களுக்கு நோன்பு வைக்க சந்தர்ப்பம் கிடைக்காமல் இருந்திருக்கலாம்.
ஆக துல்ஹஜ் மாதம் முதல் 8 நாட்கள் நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைத்திருக்கிறார்கள்.
பிரயாணத்தில் இருப்பவர்களுக்கு ஃபர்ளான நோன்பிற்கே சலுகை உண்டு என்பதையும், இது சுன்னத்தான நோன்பு தான் என்பதையும் பிரயாணிகளான ஹாஜிகள் இந்த நோன்பை வைக்க சாத்தியப்படுமா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முதல் 8 நாட்கள் வைப்பது தான் சுன்னத் என்பதையும் அந்த நாட்களுக்குள் வைத்தால் அதற்குறிய கூலியை அல்லாஹ் வழங்க போதுமானவன் இன்ஷா அல்லாஹ். இந்த நோன்பை, வசதி கருதி விட்டுவிட்டு வைத்தால், வைத்த நோன்புகளுக்கு மட்டுமே கூலி கிடைக்கும்.
மறுமொழியொன்றை இடுங்கள்