நேர்ச்சை வைத்தவர் நேர்ச்சை இறைச்சியை சாப்பிடலாமா?
28 கேள்வி : நேர்ச்சை வைத்தவர் நேர்ச்சை இறைச்சி சாப்பிடுவது பற்றி விளக்கம் தேவை. (முகம்மது நஸான் (சிரிலங்கா), யாகூ மெயில் மூலமாக)
முதலாவதாக, கடமையல்லாத ஒன்றை தம் மீது கடமையாக்கிக் கொள்வது தான் நேர்ச்சையாகும். நேர்ச்சையின் போது எவ்வாறு நேர்ச்சை செய்தார் என்பதைப் பொறுத்து அந்த நேர்ச்சையை நிறைவு செய்வது அமைய வேண்டும்.
அதாவது நான் பரீட்சையில் வெற்றி பெற்றுவிட்டால் ஒரு ஆட்டை அறுத்து தர்மம் செய்வேன் என்று நேர்ச்சை செய்திருந்தால் முழு ஆட்டையும் தர்மம் செய்தாக வேண்டும். அதிலிருந்து சிறிது கூட தனக்காக எடுத்துக் கொள்ளக் கூடாது. முழு ஆட்டையும் அறுத்து தர்மம் செய்வதாக நேர்ச்சை செய்து விட்டு அதிலிருந்து தானும் உண்பது நேர்ச்சையை நிறைவேற்றுவதில் குறைவை ஏற்படுத்தும்.
ஒருவர் 10 கிலோ ஆட்டிறைச்சியை மட்டும் தர்மம் செய்வேன் என்று நேர்ச்சை செய்திருந்தால் 10 கிலோ இறைச்சியை தர்மம் செய்வது அவர் அவராகவே தன் மீது ஏற்படுத்திக் கொண்ட கடமையாகும். அதை நிறைவேற்றுவது அவர் மீது இப்போது கடமையாகி விட்டது. அந்த ஆடு 20 கிலோ ஆடாக இருந்தாலும் 10 கிலோ மட்டும் தர்மம் செய்வது அவர் மீது கடமை. மீதமுள்ள 10 கிலோவை அவர் விரும்பியவாறு உபயோகித்துக் கொள்ளலாம்.
ஆனால் குர்பானியின் சட்டம் அதிலிருந்து வேறுபட்டதாகும். குர்பானியின் மாமிசத்தை தானும் உண்ணலாம்.
உள்ஹிய்யா கொடுப்பவர் அதன் இறைச்சியைத் தான் உண்பதுடன் உறவினர்கள், அண்டைவீட்டார், ஏழைகள் ஆகியோருக்கு வழங்குவதும் நபிவழியாகும். (திர்மிதி 1546)
‘அவற்றிலிருந்து நீங்கள் உண்ணுங்கள்! தேவையுடையோருக்கும் உண்ணக் கொடுங்கள்’ (அல்குர்ஆன் 22:28)
‘அவற்றிலிருந்து நீங்களும் புசியுங்கள்! இருப்பதைக் கொண்டு திருப்தி அடைவோருக்கும் தேவையுள்ளோருக்கும் உண்ணக் கொடுங்கள்!’ (அல்குர்ஆன் 22:36)
மேற்கூறிய வசனங்கள் குர்பானியைக் குறிக்கும் வசனங்களாகும். குர்பானியின் இறைச்சியை குர்பானி கொடுப்பவர் சாப்பிட அல்லாஹ்வும் அவனது தூதரும் அனுமதித்துள்ளார்கள். குர்பானியின் இறைச்சி, நேர்ச்சைக்கான இறைச்சி இவை இரண்டும் வௌ;வேறானவை என்பதை புரிந்து கொண்டால் குழப்பம் இருக்காது.
இரண்டாவதாக, தர்மம் செய்வதை தூண்டுவதற்காகவே நேர்ச்சையை இஸ்லாம் அங்கீகரித்துள்ளது என்பதை கீழ்காணும் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
‘…நேர்ச்சை மூலம் கஞ்சனிடமிருந்து இறைவன் (செல்வத்தை) வெளிக்கொணர்கிறான்…’ என்பது நபிமொழி (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 6694)
தர்மம் செய்ய நினைப்பதற்கும் நேர்ச்சை செய்வதற்கும் முக்கியமான வித்தியாசம் இருப்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஒருவர் 10 ரூபாயை தர்மம் செய்ய நினைக்கிறார். ஆனால் 5 ரூபாய் தான் தர்மம் செய்கிறார். அவருக்கு 5 ரூபாய் தர்மத்திற்கான நன்மை அவருக்கு கிடைத்து விடும். 10 ரூபாயிலிருந்து 5 ரூபாயாக குறைத்ததற்காக தண்டிக்கப்பட மாட்டார். ஏனென்றால் அவர் தர்மம் செய்வதை தன் மீது கடமையாக்கிக் கொள்ள வில்லை. உபரி வணக்கமான தர்மத்தை செய்கிறார்.
ஆனால் நேர்ச்சையில் 10 ரூபாய் தர்மம் என்பது கடமையாக்கப்பட்ட நிலையில் 10 ரூபாயை தர்மம் செய்தாக வேண்டும். இல்லையேல் அவர் தண்டிக்கப்படுவார்.
மறுமொழியொன்றை இடுங்கள்