1 கேள்வி : மக்காவுக்கு ஹஜ் உம்ரா செய்யச் செல்லும் போது, மதீனா ஜியாரத் செய்வது அவசியமா? (இக்பால் – ரஹீமா, சவூதி அரேபியா)
ஹஜ் உம்ராவுக்குறிய செயல்கள் அத்தனையும் மக்கா மற்றும் மக்காவைச் சுற்றியுள்ள இடங்களுக்குள்ளேயே முடிந்து விடும். ஹஜ் உம்ராவுக்காக மதீனா செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
ஹஜ் உம்ராவுக்காக மக்கா செல்லக் கூடியவர்கள் பொதுவாக மதீனாவுக்கும் செல்வதினால் தான் அங்கே செல்வதும் ஹஜ் உம்ராவைச் சேர்ந்த செயலோ என்று எண்ணி விட்டீர்கள். ஹஜ் உம்ராவுக்கும் மதீனாவுக்கும் எந்த விதத்திலும் சம்பந்தமே இல்லை.
ஆனால் மக்காவுக்கு செல்லக்கூடியவர்கள் மதீனாவுக்கும் செல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
முதலாவதாக,
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : மஸ்ஜிதுல் ஹரம், மஸ்ஜிதுன்னபவி, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிகளைத் தவிர (எந்தப் பள்ளிக்கும்) பயணம் மேற்கொள்ளக் கூடாது.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புஹாரி – எண் 1189)
இந்த ஹதீஸின் படி மற்ற இரு பள்ளிகளைப் போன்று மஸ்ஜிதுன்னபவி (மதீனா பள்ளி) க்கு ஜியாரத் செய்யலாம் என்று தெரிகிறது.
இரண்டாவதாக,
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட மஸ்ஜித் ஹராம் மற்றும் எனது பள்ளி (மதீனா பள்ளி) யில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புஹாரி – எண் 1190)
அதிகமான நன்மைகளைப் பெற அங்கே சென்று தொழலாம் என்று தெரிகிறது.
மூன்றாவதாக,
பல ஆயிரங்களை செலவு செய்து மக்கா வரை சென்ற பிறகு மதீனா சென்று தொழுது விட்டு வருவோமே என்று மக்கள் நினைப்பதும் ஒரு காரணம்.
இந்த இடத்தில் ஒரு எச்சரிக்கையையும் விடுவது எம் மீது கடமை.
மதீனாவிற்கு செல்லக் கூடியவர்கள் மதீனாவில் அடங்கியுள்ள நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் செல்கிறார்கள். இது தவறாகும். மேலே சுட்டிக் காட்டிய ஹதீஸ்களே இக்கருத்துக்கு போதுமான சான்றாகும். மதீனாவில் தொழுவதையே நோக்கமாக கொண்டு அங்கே சென்ற பிறகு நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்தால் தவறாகாது. அவரவர்களின் எண்ணங்களுக்கேற்ப கூலி கொடுக்கப்படுவார்கள் இன்ஷா அல்லாஹ்.
நம் ஊர் மையவாடிக்கு நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த முறைப்படி ஜியாரத் செய்தால் என்ன நன்மை கிடைக்குமோ அதே நன்மை தான் நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்யும் போதும் கிடைக்கப் போகிறது. நமது உயிரினும் இனிய நபி (ஸல்) அவர்களின் கப்ரு என்பதற்காக அதிகமான நன்மை ஏதும் கிடைக்கப் போவதில்லை. கிடைக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
அங்கே செல்லக்கூடியவர்களில் ஒரு சிலர் அல்லது ஒரு பிரிவினர் தவறான புரிதலின் காரணமாக நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தராத, இஸ்லாத்திற்கு முரணான காரியங்களைச் செய்கிறார்கள், அப்போது அவர்களெல்லாம் செய்கிறார்களே! நாமும் செய்தால் என்ன என்று எண்ணி, செய்யத்துணிந்து விடுகிறோம்.
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை தான். இருந்தாலும் அல்லாஹ்வுக்கு சமமாக அல்லது அல்லாஹ்வின் பிரத்தியேக பண்புகளுக்கு சமமாக எந்தச் சந்தர்ப்பத்திலும் நபி (ஸல்) அவர்களை ஆக்கிவிடக் கூடாது. இதை நபி (ஸல்) அவர்கள் கூட வெறுத்தார்கள்.
‘யூத கிருத்தவர்களை அல்லாஹ் சபிப்பானாக, அவர்கள் தங்கள் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக மாற்றிவிட்டார்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : அபூதாவூத் – எண் 3221)
‘எனது கப்ரை விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கி விடாதீர்கள்! உங்களது வீடுகளையும் கப்ருகளாக ஆக்கிவிடாதீர்கள்! நீங்கள் எங்கிருந்த போதிலும் எனக்காக ஸலவாத்துச் சொல்லுங்கள். நீங்கள் சொல்லும் ஸலவாத்து எனக்கு எத்தி வைக்கப்படுகிறது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்கள் : அபூதாவூத் – எண் 2037, அஹ்மத்)
வேறொரு ஹதீஸில் நாம் நபி (ஸல்) அவர்களுக்கு சொல்லும் ஸலாம் கூட அவர்களுக்கு எத்தி வைக்கப்படுகிறது. நம் ஸலாத்தை அவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக வானவர்கள் கூட நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
ஸலவாத்தும் ஸலாமும் எங்கிருந்து கொண்டும் நபி (ஸல்) அவர்களுக்கு சொல்ல முடியும் என்பது இதிலிருந்து தெரிகிறது.
மேற்கண்ட ஹதீஸிலிருந்து நபி (ஸல்) அவர்களின் கப்ரை பிரத்தியேகமாக ஜியாரத் செய்வதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. மாறாக நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை தான் நமக்காக காத்திருக்கிறது.
நபி (ஸல்) அவர்களின் கப்ரை நோக்கி கையேந்துவது, கப்ரை நோக்கித் தொழுவது, கப்ருக்கு அருகில் இருந்து கொண்டு யாசீன் ஓதுவது, பாத்திஹா ஓதுவது, முண்டியடித்துக் கொண்டு கப்ரை பார்க்க செல்வது போன்ற செயல்களிலிருந்து தவ்ஹீதை புரிந்து கொண்டவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
tawaaf seyya vanthavargal yel
ziyaarat sayya villaiyaanaal avan hajj allathu umra muzhumai adaiyaa thu enru nabi alaihissalaam avarkal kooriyavaaru hadis ninaivilvanthau atuthan naan ippodu unnkaludan marumozhindain
பின்னூட்டம் by rahil — ஒக்ரோபர்10, 2009 @ 12.24