இஸ்லாம்தளம்

காபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா? பகுதி-2

மக்காவில் அமைந்திருக்கும் காபாவை, உலக முஸ்லிம்கள் புனித ஆலயமாகத் தமது வணக்க வழிபாட்டை அதை நோக்கி அமைத்துக் கொள்கிறார்கள். காபா ஆலயத்தை வன்முறை நோக்கத்தோடு தாக்கி அழிப்பதற்கு எவரேனும் முயன்றால் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என்பதை திருக்குர்ஆன் 105வது அத்தியாயம் கூறுகிறது. அதற்கான வரலாற்று சான்றுகளை பகுதி- 1ல் காணலாம்.

மேலும்,

”ஒரு படை காபாவின் மீது படையெடுக்கும், அப்படையை பூமி விழுங்கிவிடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி) காபாவை வன்முறையால் அழிக்கவருபவர்களை இறைவன் அழித்து விடுவான் என்பதை மேற்காணும் நபிமொழி உறுதிப்படுத்துகிறது. அப்படியானால் காபாவை எவராலும் இடித்து அழித்துவிட முடியாதா? என்றால் இஸ்லாம் அப்படிச் சொல்லவில்லை!

”அபிசீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால்களைக் கொண்ட மனிதர்கள் காபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

”(வெளிப்பக்கமாக) வளைந்த கால்களையுடைய, கருப்பு நிறத்தவர்கள் ஒவ்வொரு கல்லாகப் பிடுங்கி காபாவை உடைப்பதை நான் பார்ப்பது போன்று இருக்கிறது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

காபாவை இடித்து அழிக்க வருபவர்கள் அழிக்கப்படுவார்கள் என்று கூறும் இஸ்லாம், காபாவை வளைந்த, மெலிந்த கால்களையுடையர்கள் உடைத்து பாழ்படுத்தி விடுவார்கள் என்றும் கூறுகிறது. ஒரு காலகட்டம் வரை காபாவை எவராலும் அழிக்க முடியாது. ஒரு காலத்தில் காபாவை இடித்துப் பாழ்படுத்தி விடுவார்கள். முஸ்லிம்களாலும் அவர்களைத் தடுக்க இயலாமல் போகலாம். அப்போது காபாவை இடித்துப் பாழ்படுத்துபவர்களை இறைவனும் தடுக்கமாட்டான். (இது இறுதி நாளுக்கு நெருக்கமாக நடக்கும் நிகழ்வாக இருக்கலாம். அல்லாஹ் மிக அறிந்தவன்)

”யாஃஜூஜ், மாஃஜூஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இவ்வாலயத்தில் ஹஜ்ஜும் செய்யப்படும், உம்ராவும் செய்யப்படும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

யாஃஜூஜ், மாஃஜூஜ் கூட்டத்தாரின் வருகைக்குப் பிறகும் காபா ஆலயம் இருக்கும் என்பது நபியின் வாக்கு!

இஸ்ரேலியத்தனம்

காபா ஆலயத்தை சில தடவைகள் இடித்துவிட்டு மீண்டும் கட்டியிருக்கிறார்கள். அதனால் காபாவை இடிப்பதை அல்லாஹ் எந்த நேரமும் தடுத்துக்கொண்டிருக்க மாட்டான். என்று சிலர் புரியாமல் விளங்கி வைத்திருக்கிறார்கள். ஒன்றை இல்லாமல் அழித்து நாசப்படுத்துவதற்கும், அதையே அழகான முறையில் செப்பனிடுவதற்காக அகற்றி மீண்டும் கட்டுவதற்கும், எண்ணத்தாலும், செயலாலும் வேறுபாடுகள் இருக்கிறது.

வரலாற்றுக் காலங்களை குறிப்பிட்டு சொல்ல முடியாத மிகப் பழமையான காபா, ஆலயமான வடிவத்தை இழந்து, அடித்தளம் மட்டுமே எஞ்சியிருந்தது எனத் திருக்குர்ஆன், 002:127 வசனம் கூறுகிறது. அங்கு ஏற்கெனவே மனிதர்கள் வாழ்ந்து, பிறகு மக்கள் எவரும் அங்கு வசித்திருக்கவில்லை. காபா ஆலயம் பராமரிப்பு இல்லாத நிலையில் இயற்கையின் கால மாறுபாட்டால் சிதிலத்திற்குள்ளாகி ஆலயத்தின் கட்டிடம் தரைமட்டமாகியிருந்தது. (இந்த அழிவை இறைவன் ஏன் தடுக்கவில்லை? என்ற கேள்வியெழாமல் இருக்க) மனிதர்கள் வசிக்காத பிரதேசத்தில் ஆலயம் அவசியமில்லை. மேலும், காபா ஆலயம் புதுப்பித்துக் கட்டப்படும் காலத்தை இறைவனே நன்கு அறிந்தவன்.

ஒரிறைக் கொள்கைப் பிரச்சாரம் துவக்கப்பட்டு, இஸ்லாத்தில் தொழுகை கடமையாக்கப்பட்டது. முஸ்லிம்கள் தொழும் கிப்லா – முன்னோக்கும் திசை பைத்துல் மக்திஸை – மஸ்ஜித் அல்-அக்ஸாவை நோக்கி இருந்தது. அப்போது முஸ்லிம்களின் கிப்லா யூதர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இவ்வாறு பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைத்துல் மக்திஸை முன்னோக்கியே, – இந்த உம்மத்தின் முதல் முஸ்லிமாகிய நபி (ஸல்) அவர்களும் மற்ற முஸ்லிம்களும் – தொழுது வந்தனர். இந்த கிப்லா மாற்றப்பட வேண்டும், முஸ்லிம்களின் தொழுகையின் கிப்லாவாக – முன்னோக்கும் திசையாக காபாவை நோக்கித் திருப்பப்பட வேண்டும் என்பதே அண்ணல் நபியவர்களின் விருப்பமாக இருந்தது, நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் இதற்காக அடிக்கடி பிரார்த்தனை செய்து கொண்டும், பணிந்து வேண்டிக்கொண்டும் இருந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பிராத்தனைக்கேற்ப கிப்லா மாற்றம் தொடர்பான இறையுத்தரவு வந்தது. இது இறவைனிடமிருந்து வந்த உண்மையாகும் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க: அல்குர்ஆன், 002:144, 149, 150)

இந்தக் கிப்லா மாற்றம் நிகழ்ந்தபோது நயவஞ்சகமும், சந்தேகமும் கொண்ட சிலருக்கும், யூத இறைமறுப்பாளர்களுக்கும் ஐயமும், தடுமாற்றமும் ஏற்பட்டன. முஸ்லிம்களை நோக்கி, ”ஏற்கெனவே இருந்த அவர்களின் கிப்லாவிலிருந்து அவர்களைத் திருப்பியது எது?” என்று கேட்பவர்களுக்கு பதிலடியாக:

மனிதர்களில் சில மதியீனர்கள், ”ஏற்கெனவே (முஸ்லிம்கள் முன்னோக்கித் தொழுதுகொண்டு) இருந்த அவர்களது ‘கிப்லா’ விலிருந்து (வேறு திசைக்கு) அவர்களைத் திருப்பியது எது?” என்று கேட்பார்கள். ”கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான்” என்று (நபியே) கூறுவீராக! (அல்குர்ஆன், 002:142) என்ற இறைவசனம் அருளப்பட்டது.

காபாவை முன்னோக்கி கிப்லா திருப்பப்பட்டதும், புனித இறையில்லமான காபாவைப் பற்றி இங்கு தொடங்கிய விஷமத்தனமான, யூதத்தன அவதூறு விமர்சனங்கள் இன்றும் இஸ்ரேலியத்தனமாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

குறைஷியர் காபாவைக் கட்டியது.நபித்துவ வாழ்விற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு புனித காபாவைக் குறைஷியர்கள் புதுப்பித்துக் கட்டுவதற்கு ஏகமனதாக முன் வந்தனர். இதன் காரணம்: காபா நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் காலத்திலிருந்து மேல் முகடு இல்லாமல் ஒன்பது முழங்கள் கொண்டதாக இருந்தது. அதன் சுவரும் – கட்டடங்களும் சிதிலமடைந்து இருந்தன. காபாவினுள் வைக்கப்பட்டிருந்த பொக்கிஷங்களை ஒரு கூட்டம் திருடிச் சென்றது. இந்நிலையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் காபாவின் கட்டடம் மேலும் பாதிப்படைந்தது. காபாவின் மீது கொண்ட மரியாதையின் காரணமாக குரைஷியர் அதைப் புதுப்பிக்கும் நிலைக்கு ஆளாயினர்.

”குறைஷிக் குலத்தாரே! காபாவின் கட்டுமானப் பணிக்காக உங்கள் வருமானத்தில் தூய்மையானவற்றைத் தவிர வேறெதையும் ஈடுபடுத்தாதீர்கள். விபச்சாரத்தின் வருமானமோ, வட்டிப் பணமோ, மக்கள் எவரிடமிருந்தாவது அக்கிரமமாகப் பெறப்பட்ட பொருளோ சேரக்கூடாது” என்று சொல்லிக்கொண்டு, குறைஷியர் ஒவ்வொரு குலத்தாரும் தங்களுக்கிடையே அந்தப் பணியைப் பிரித்துக் கொண்டனர்.

பின்னர் குறைஷியரில் உள்ள பல கோத்திரத்தாரும் காபாவைக் கட்டுவதற்காகக் கற்களைச் சேகரித்தினர். பின்னர் அவற்றைப் பயன்படுத்தி ‘ஹஜருல் அஸ்வத்’ – கருப்புக் கல் இருக்கும் மூலைவரை காபாவைக் கட்டினார்கள். கருப்புக் கல்லை அதற்குரிய இடத்தில் பதிப்பது யார்? என்பது தொடர்பாக அவர்களிடையே சர்ச்சை ஏற்பட்டது. அந்தக் கல்லை அதற்குரிய இடத்தில் தாமே தூக்கி வைக்க வேண்டும் வேறு யாரும் அதைச் செய்துவிடக் கூடாது என்று ஒவ்வொரு கோத்திரத்தினரும் நினைத்தார்கள்.

குறைஷியர்கள் இதற்காக சண்டையிட்டுக் கொள்வதற்கும் தயாராயினர். இதே நிலையில் நான்கைந்து நாட்கள் நகர்ந்தன. அப்போது குறைஷியர்களிலேயே மூத்த வயதினரான அபூஉமய்யா பின் அல்முஃகீரா மக்ஸுமி என்பவர், குறைஷிக் குலத்தாரே! யார் இந்த ஆலயத்தின் வாசல் வழியாக அதிகாலையில் முதன்முதலில் நுழைகிறாரோ அவரை இந்தப் பிரச்சனையில் நடுவராக ஆக்கிக் கொள்ளுங்கள். அவர் உங்களிடையே தீர்ப்பளிப்பார்” என்று கூறினார். குறைஷிகள் அவ்வாறே செய்வதாகக் கூறி, கலைந்து சென்றனர்.

மறுநாள் அதிகாலையில் ஆலயத்தின் வாசல் வழியாக முதன்முதலில் உள்ளே நுழைந்தவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்தாம். (இது நபித்துவத்திற்கு முன்பு நடந்தது. ஆனாலும் இது அனைவரும் அறிந்த பிரபலமான செய்தி.) நபி (ஸல்) அவர்களைக் கண்ட குறைஷியர், இதோ முஹம்மது வந்துள்ளார், நம்பத்தகுந்தவரான இவரை நாங்கள் முழு மனதுடன் ஏற்கிறோம் என்றனர்.

(இங்கே குறைஷியருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைப் பார்த்தால் நபித்துவ வாழ்விற்கு முன்பு நபியவர்களின் மீது குறைஷியர்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பதை நமக்குக் காட்டுகிறது. குறைஷியர் ஒவ்வொரு குலத்தாரும் மற்ற குலத்தாருக்கு எதிரும் புதிருமாக இருந்து வந்தனர். இந்த நிலையில் தமக்கு வேண்டாத குலத்தார் யாராவது ஆலயத்திற்குள் முதலில் வந்திருந்தால் அது மற்ற குலத்தாருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முதன்முதலில் ஆலயத்தின் வாசல் வழியாக நுழைந்தது குறைஷியர் அனைத்து குலத்தாருக்கும் திருப்திகரமாக இருந்தது. அந்த அளவுக்கு எல்லா மக்களிடமும் நற்பெயர் பெற்றிருந்தார்கள். நபியவர்களை ”அல்அமீன்” நம்பிக்கைக்குரியவர் என்று ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.)

நபி (ஸல்) அவர்கள் வந்ததும் அந்த மக்கள் செய்தியைத் தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘என்னிடம் ஒரு துணியைக் கொண்டு வாருங்கள்’ என்றார்கள். அது கொண்டு வரப்பட்டது. கருப்புக் கல்லைத் தமது கையால் அந்தத் துணியில் வைத்த நபி (ஸல்) அவர்கள், ”இந்தத் துணியின் ஒவ்வொரு ஓரத்தையும் ஒவ்வொரு கோத்திரத்தாரும் பிடித்துக்கொண்டு அனைவருமாகச் சேர்ந்து அதைத் தூக்கிக் கொடுங்கள்” என்றார்கள். அவ்வாறே அவர்கள் தூக்கித் தர, அந்தக் கல் அதற்குரிய இடத்திற்கு வந்தபோது தமது கையால் அதை உரிய இடத்தில் பதித்துப் பூசினார்கள். (அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் அவர்கள் மீது மறுமை நாள்வரை என்றென்றும் உண்டாகட்டும்)

நபித்துவ வாழ்விற்கு முன், குறைஷியர் காபாவைப் புதுப்பித்துக் கட்டிய அந்த அறப்பணியில், நபி (ஸல்) அவர்களும் கலந்து கொண்டு கல் சுமந்திருக்கிறார்கள். நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் புதுப்பித்துக்கட்டிய காபாவின் சுவர்கள் பலவீனப்பட்டதால் குறைஷியர் காபாவை இடித்து விட்டு மீண்டும் புதுப்பித்துக் கட்டினார்கள். ஆனால் இப்ராஹீம்(அலை) அவர்கள் எழுப்பிய காபாவின் அளவை சுருக்கி விட்டார்கள். இதற்குக் காரணம் குறைஷியரிடம் பொருளாதாரம் இல்லாமலிருந்ததேயாகும்.

(மீண்டும் இறுதிப் பகுதியில், இறைவன் நாடட்டும்)

அன்புடன்,
அபூ முஹை

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: