இன, பிரதேச வேறுபாடுணர்ச்சிகள்
இக்காலப்பிரிவில் மற்றொரு தீமை தலைதூக்கியது. இது இஸ்லாமிய உலகின் ஐக்கியத்தையே சிதறடிக்கக் கூடிய ஆபத்தாக மாறியது. அது முஸ்லிம் நாடுகளில் வளர்ந்த பிரதேசவாதமும் இனவாதமுமாகும். இஸ்லாமியக் கொள்கையில் மனிதத் தன்மைக்கு ஒரு முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. மனித இனம் இறைவனின் குடும்பம் என்றும், அதன் ஒவ்வோர் உறுப்பினரும் மற்றவர்கள் அனைவரதும் நல்வாழ்வுக்குப் பொறுப்பாளராவார் என்றும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அருளியுள்ளார்கள்.
முஸ்லிம் சகோதரத்துவத்தின் ஒருமைப் பாட்டினை இஸ்லாம் வற்புறுத்துகிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் முஸ்லிம் சகோதரத்துவம் என்பது தனியாக ஒதுங்கி நிற்கும் கதவடைத்த ஒரு வட்டமல்ல. அது முழு மனித இனத்தையும் உள்ளடக்கத்தக்கதான விரிவடைந்து கொண்டேயிருக்கும் ஓர் உறவு நிலையாகும். இஸ்லாம் ஓர் உலகப் பொது நோக்கினை அபிவிருத்தி செய்யுமாறு முஸ்லிம்களுக்கு அறிவுரை வழங்கியது. அத்துடன் தம் சொந்த, பிரதேச நலன்களை முஸ்லிம் சமுதாயத்தின் நலன்களுக்கு உட்பட்டனவாய் ஆக்கிக் கொள்ளுமாறு கட்டளையும் பிறப்பித்தது. இன, நிற பேதங்களை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
ஓர் இனம் மற்றோர் இனத்தை விட உயர்ந்தது எனக்கோர எவ்வினத்திற்கும் உரிமை கிடையாது என்பதை இஸ்லாம் ஆணித்தரமாகப் பிரகடனப்படுத்திற்று. முடியாட்சிக் காலத்தில் இவ்வுன்னத போதனை மறக்கப்பட்டு மக்கள் தம் சொந்த மொழி, இனம், கலாச்சாரம், பிரதேசம் ஆகியவை குறித்துப் பெருமைப் படத் தொடங்கினர். இத்தவறான கருத்துக்களின் வளர்ச்சி முஸ்லிம் சமுதாயத்தின் ஐக்கியத்தைக் குலைத்தது. இக்காலப் பிரிவில் தோற்றுவிக்கப் பட்ட இப்பிரிவினைச் சக்திகள் இன்னும் செயல்படுகின்றன. ஒன்றுக்கொன்று முரணான இன, சாதி, பிரதேச பற்றுகளினால் ஏற்படும் மோதல்கள் முஸ்லிம் சமுதாயத்தின் சக்தியை உறிஞ்சிக்குடிக்கின்றன. முஸ்லிம் அரசுகள் இப்பிரிவினைகளால் தமக்குள்ளேயே பிரிந்து பிளவுபட்டு வலுவிழந்து விட்டன.
இதன் காரணமாக சீர்திருத்த திட்டங்களையோ, அபிவிருத்தித் திட்டங்களையோ வகுத்துச் செயல்படுத்த முடியாத நிலையில் அவை உள்ளன. சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கிடையே நிலவும் அமைதியற்ற நிலை அரசின் வளங்களை விரயமாக்குகின்றது. தேசிய செல்வத்தில் தனக்குரியதை விட அதிகமான பங்கு தனக்கு வேண்டும் என்று ஒவ்வொரு பிரிவும் உரிமை கோருகின்றது. ஒவ்வொரு கோஷ்டியும் மற்ற கோஷ்டியின் மீது தனி ஆதிக்கம் செலுத்தி தனது நலனையே நோக்காகக் கொண்டு ஆட்சி செலுத்த முனைகிறது. தாம் அனைவரும் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்ற பொதுப் படையான உணர்ச்சியை விட தாம் குறிப்பிட்ட இந்த நாட்டை அல்லது அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற குறுகிய உணர்ச்சியே மக்களிடையே மேலோங்கி நிற்கிறது.
அவர்கள் தாம் முஸ்லிம் சகோதரத்துவத்தைச் சார்ந்தவர்கள் எனச் சிந்திப்பதில்லை. மாறாக குறிப்பிட்ட ஒரு பூகோளப் பிரிவை அல்லது இனத்தைச் சார்ந்தவர்கள் என்ற எண்ணமே மக்கள் உள்ளங்களில் வேறோடியுள்ளது. அவ்வாறே அவர்கள் சிந்திக்கின்றனர். முஸ்லிம்களின் வாழ்க்கையில் இஸ்லாம் எந்த அளவிற்கு செல்வாக்கு இழந்திருக்கிறது என்பதற்கு, இப்பிரதேச, இன உணர்ச்சிகளின் சமீபகால வளர்ச்சி தக்கதொரு அளவுகோலாகும். மிக அவசரமாகப் பரிகாரம் செய்ய வேண்டிய அளவுக்கு இந்நோய் பரவியுள்ளது. இஸ்லாம் என்னும் அருட்புனலின் பால் நாம் மீண்டும் செல்வதைக் கொண்டே இப்பிணியை அகற்ற முடியும். அந்த ஒரு வழியினால் தான் நாம் எமது சன்மார்க்கத்திற்கு மீண்டும் புத்துயிரளித்து, இன, கலாச்சாரச் சுவர்களைக் கடந்து நிற்க முடியும்.
மறுமொழியொன்றை இடுங்கள்