حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ ثَنَا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ ثَنَا سَعِيْدُ بْنُ بَشِيْرٍ عَنْ قَتَادَةَ عَنْ أَبِي قِلاَبَةَ عَنْ أَبِي أُسْمَاءَ الرَّحَبِيّ عَنْ ثَوْبَانَ أَنَّ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم قَالَ لاَ يَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي عَلَى الْحَقِّ مَنْصُورِيْنَ لاَ يَضُرُّهُمْ مَنْ خَالَفَهُمْ حَتىَّ يَأْتِيَ أَمْرُ اللهِ عَزَّ وَجَلَّ
‘எனது சமுதாயத்தில் ஒரு பிரிவினர் சத்தியத்திற்காக உதவி செய்யப்பட்டவர் களாக இருந்து கொண்டே இருப்பார்கள். அல்லாஹ்வின் கட்டளை வரும் வரை அவர்களை எதிர்ப்பவர்களால் அவர்களுக்கு ஒரு தீங்கும் செய்து விட முடியாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: இந்த ஹதீஸ் முஸ்லிம் 3883 நூலிலும் இடம் பெற்றுள்ளது.)
விளக்கம்:
நபி (ஸல்) அவர்களது உம்மத்தில் ஒரு கூட்டம் சத்தியத்தின் மீது நிலைத்திருப்பார்கள், அவர்களுக்கு அல்லாஹ் உதவி செய்து கொண்டேயிருப்பான். அவர்களின் எதிரிகள் அவர்களை ஒன்றும் செய்து விட முடியாது என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்கலாம்.
இப்னுமாஜா ஹதீஸ் எண் 6 போன்றதே இந்த ஹதீஸும். ஆதலால் ஹதீஸ் எண் 6க்குரிய விளக்கமும் இதற்கு பொருந்தும்.
சத்தியத்திற்காக போராட்டம்:
‘என் சமுதாயத்தில் ஒரு குழுவினர் இறுதிநாள் வரை உண்மைக்கு ஆதரவாகப் போராடிக் கொண்டே இருப்பார்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் 3886)
மறுமை நிகழும் வரை சத்தியத்திற்கான போராட்டம்:
‘இந்த மார்க்கத்திற்காக முஸ்லிம்களில் ஒரு குழுவினர் போராடிக் கொண்டு இருக்கும் நிலையிலேயே மறுமை நிகழும். அதுவரை இந்த மார்க்கம் நிலைத்திருக்கும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் பின் சமுரா (ரலி), நூல்: முஸ்லிம் 3885)
சத்தியத்தை மறுப்பவர்களை மிகைக்கும் கூட்டம்:
‘என் சமுதாயத்தில் ஒரு குழுவினர் (உண்மையை மறுக்கும்) மக்களை மிகைத்தவர்களாகவே இருந்து கொண்டிருப்பார்கள். இறுதியில் அவர்கள் மிகைத்தவர்களாக இருக்கும் போதே அவர்களிடம் இறைக்கட்டளை (மறுமைக்கு நெருக்கமான நிலை) வந்து விடும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: முஃகீரா பின் ஷுஅபா (ரலி), நூல்: முஸ்லிம் 3884)
சத்திய சோதனை:
‘என் சமுதாயத்தினரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் ஆணை (இறுதி நாள்) தம்மிடம் வரும் வரை (சத்தியப் பதையில் சோதனைகளை) வென்று நிலைத்திருப்பார்கள். (இறுதி நாள் வரும்) அந்த நேரத்தில் அவர்கள் மேலோங்கியவர்களாகவே இருப்பார்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: முஃகீரா பின் ஷுஅபா (ரலி), நூல்: புஹாரி 3640, 7459)
இந்த ஹதீஸ்களும் அதனோடு தொடர்புடைய ஹதீஸ்கள் என்பதால் இவைகளும் அந்த ஹதீஸின் விளக்கங்களாகும்.
மறுமொழியொன்றை இடுங்கள்