இஸ்லாம்தளம்

எவ்வாறு இறைவனை நிரந்தரமாக நெருங்கி இருப்பது?

‘(நபியே!) உம் மனதுக்குள் பணிவாகவும் அச்சத்தோடும் உரத்த சப்தமின்றியும் காலையிலும் மாலையிலும் உமதிறைவனை திக்ரு செய்வீராக! அவனை மறந்து விட்டிருப்போரில் ஒருவராக இருக்க வேண்டாம்’. (அல்குர்ஆன் 7:205)

‘உம்முடைய இறைவனிடத்தில் இருப்பவர்கள் அவனை வணங்குவதை விட்டும் பெருமை அடிப்பதில்லை, அவர்கள் அவனை துதித்துக் கொண்டும் சிரம் தாழ்த்திக் கொண்டும் இருக்கிறார்கள்’. (அல்குர்ஆன் 7:206)

‘நாம் ஒவ்வொருவரும் பகற்பொழுதின் துவக்கத்திலும் இறுதியிலும் இறைவனை துதிக்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுவது போன்று அவ்விரு நேரங்களில் நாம் அவனை அடிக்கடி துதிக்க, நினைக்க வேண்டும் என்ற இந்த பொதுவான கட்டளையை இங்கே இறைவன் இடுகிறான்’ என்று புகழ்பெற்ற மார்க்க அறிஞரான இப்னு கதீர் தமது திருக்குர்ஆன் விரிவுரையில் சொல்கிறார். அப்போது அவர், ‘சூரிய உதயத்திற்கு முன்பும் சூரியன் அஸ்தமிக்கும் முன்பும் உமது இறைவனை புகழ்வீராக’, (அல்குர்ஆன், அத்தஹ்ர் 76:25,26) என்ற குர்ஆன் வசனத்தையும், நபி (ஸல்) அவர்களின் மிஃராஜ் இரவுப் பயணத்தில் தொழுகை கடமையாக்கப்படு முன் இதுவே வழக்கத்தில் இருந்தது என்றும் சொல்கிறார்.

இந்த வசனம் மக்காவில் அருளப்பட்டது, இதில் ‘காலையிலும் மாலையிலும் இறைவனை நினைக்க வேண்டும், இதை பணிவாகவும் அச்சத்தோடும் நமது குரலை உயர்த்தாமலும் செய்ய வேண்டும் என்று இறைவன் சொல்கிறான். சப்தமிட்டு அழைக்காதிருப்பது தான் இறைவனை நினைக்கும் சிறந்த முறையாகும்.

நபி (ஸல்) அவர்களிடம் அவர்களது தோழர்கள் கேட்டார்கள், ‘எங்களது இறைவன் மெதுவாக அழைக்கப்பட அருகில் இருக்கின்றானா? அல்லது அவனை நாங்கள் கூவி அழைக்க தூரமாக இருக்கின்றானா?’, இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்த குர்ஆன் வசனத்தை அல்லாஹ் அருளினான், ‘எனது அடியார்கள் என்னைப் பற்றி கேட்பார்களேயானால், நான் அருகில் இருக்கின்றேன், அவர்கள் என்னை அழைத்தால் அவர்களது அழைப்புக்கு பதிலளிக்கின்றேன்’ (2:186).

அபூ மூஸா அல்அஸ்;அரீ (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸை புஹாரியும் முஸ்லிமும் தனது நூல்களில் பதிவு செய்திருக்கிறார்கள்: ஒரு பயணத்தில் துஆச் செய்த போது தங்களது குரலை உயர்த்தினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள், ‘நீங்கள் செவிடனிடத்திலோ அல்லது வெகுதொலைவில் இருப்பவனிடத்திலோ துஆச் செய்ய வில்லை, உங்களால் அழைக்கப்படுபடக் கூடியவன் நீங்கள் சொல்பனவற்றையெல்லாம் கேட்கிறான், மேலும் அவன் உங்களுக்கு அருகில் இருக்கிறான். ‘நிச்சயமாக இறைவன் ஒவ்வொருவரின் பிடரி நரம்பைவிட மிக சமீபமாக இருக்கிறான்’ (50:16).

‘இறைவனை நினைவு கூற திருக்குர்ஆனை செவிமடுக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த குறிப்பிட்ட முறையை பின்பற்ற இடப்பட்டது தான் இந்தக்கட்டளை’ என்று இப்னு ஜரீரும் அத்தபரியும் மற்றும் சிலரும் தரும் விளக்கத்தை இப்னு கதீர் ஏற்றுக் கொள்ள வில்லை. இந்த நிகழ்ச்சி அந்த வசனத்தோடு ஒத்துப்போக வில்லை என்கிறார் அவர். மக்கள் இறைவனை எல்லா நேரங்களிலும் குறிப்பாக காலையிலும் மாலையிலும் நினைவு கூறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதே இங்கே குறிப்பிடப்படுகிறது. ஏனென்றால் அப்போது தான் அவர்கள் இறைவனை மறந்து விட்டிருப்போரில் ஒருவராக இருக்க மாட்டார்கள். தயக்கமின்றியும் சோர்வின்றியும் எல்லா நேரங்களிலும் வானவர்கள் இறைவனை துதிப்பதால் அவர்கள் இங்கே பாராட்டப்படுகிறார்கள். அதனால் அவர்கள் பின்வருமாறு விவரிக்கப்படுகிறார்கள்: உங்களது இறைவனிடம் நெருங்கி இருப்பவர்கள் அவனை வணங்குவதை விட்டும் பெருமை அடிப்பதில்லை. அவனை அவர்கள் புகழ்கிறார்கள். அவனுக்கு அவர்கள் சிரவணக்கம் புரிந்த வண்ணம் இருக்கிறார்கள். மக்களும் மலக்குகளை பின்பற்றி அவனை வணங்கவும் அவனுக்கு அடிபணியவும் வேண்டும் என்பதற்காகவே வானவர்களின் செயல் இங்கே குறிப்பிடப்படுகிறது.

இப்னு கதீர் சொன்னவைகளும், அவர் சுட்டிக்காட்டிய ஹதீஸ்களும், அரேபியர்கள் தங்களது படைப்பாளனைப் பற்றிய உண்மையான அறிவையும் அவர்களைச் சூழ்ந்துள்ள அண்ட சராசாரங்களைப் பற்றிய உண்மையான அறிவையும் எவ்வாறு திருக்குர்ஆன் ஹதீஸிலிருந்து பெற முடிந்தனவாக இருந்தன என்பதை தெளிவாக காட்டுகிறது. அவர்கள் கேட்ட கேள்வியிலிருந்தும் அதற்கு அளிக்கப்பட்ட பதிலிலிருந்தும் அவர்கள் திருக்குர்ஆனினாலும் நபிகளாரின் போதனைகளாலும் எந்த அளவுக்கு பக்குவம் அடைந்திருந்தார்கள் என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். அவர்கள் அவர்களது பழைய மூடப்பழக்க வழக்கங்களை விட்டு வெகுதூரம் சென்று விட்டிருந்தனர், இதில் இறைவனது அருளும் உதவியும் இருப்பதை விளங்கிக் கொண்டனர்.

இறைவனை நினைப்பது என்பது அவனது பெயரை வாயால் மொழிவது மட்டும் அல்ல, இதயத்தையும் உள்ளத்தையும் ஒன்றாக கொண்டு வரும் போது தான் உண்மையான இறைநினைவை அடைய முடியும். அது தான் இதயங்களை நடுநடுங்கச் செய்கிற, உள்ளங்களை செயல்பட வைக்கிற ஒருவகை நினைப்பாகும். அதில் அடக்கமும் பயம் கலந்த பணிவும் இணைந்திருக்க வில்லையானால் அது உண்மையான இறை நனைப்பாக ஆகாது. அது, இறைவனுக்கு செய்கிற அவமரியாதைக்கு நெருக்கமானதாக இருக்கும்.

நாம் இறைவனை நினைக்கும் போது அவனுடைய உயர்வை நினைக்க வேண்டும், அவனது தண்டனைக்கு அஞ்சி அவனது அருளில் நம்பிக்கை கொள்ள வேண்டும். இந்த ஒரு வழியில் மட்டுமே நாம் உள்ளத்தூய்மையை அடைய முடியும். அவனது உயர்வை நினைத்தபடி அவனது பெயரை உச்சரிக்கும் போது தான் நாம் நமது செயல்பாடுகளை புனிதமான வணக்கமாக ஆக்குகிறோம், அப்போது மிக தாழ்ந்த குரலிலும் பாட்டாக பாடாமலும் முகஸ்துதி இல்லாமலும் நாம் நமது பணிவை காட்ட வேண்டும்.

(நபியே!) உம் மனதுக்குள் பணிவாகவும் அச்சத்தோடும் உரத்த சப்தமின்றியும் காலையிலும் மாலையிலும் உமதிறைவனை திக்ரு செய்வீராக! பகலின் இருமுனைகளிலும் நமது இதயம் இறைவனோடு தொடர்பு கொண்டிருப்பதை இது உறுதி செய்வதாக இருக்கிறது. இறைவனை நினைப்பது என்பது இவ்விரு நேரங்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட வில்லை. நிச்சயமாக அது எல்லா நேரங்களிலும் இருக்க வேண்டும்.

நாம் பாவத்தில் விழுந்து விடாமல் இருக்க நம்மைச் சுற்றி எப்போதும் ஒரு நிலையான பாதுகாப்பு வளையம் இருக்க வேண்டும். ஆனால் இந்த குறிப்பிட்ட காலங்களில் இரவானது பகலாகவும், பகலானது இரவாகவும் மாறக்கூடிய மிகப்பெரிய தெளிவான மாற்றம் இந்த உலகில் நிகழ்வதை நம்மால் காண முடியும். ஒன்று மற்றொன்றுக்கு வழிவிட்டு இவ்வளவு பெரிய இரவு பகல் மாற்றத்தை இறைவன் எவ்வாறு நிகழ்த்துகிறான் என்பதற்கு மனிதர்களின் இதயங்கள் சாட்சியாக இருந்து கொண்டு இருப்பதையும் அவர்களைச் சூழ்ந்திருக்கும் உலகத்தோடு அவை தொடர்பு கொண்டிருப்பதையும் உணரும், இவ்விரு குறிப்பிட்ட நேரங்களில் தான் மனித இதயங்கள் ஏறத்தாழ பாதிப்புக்கு உள்ளாக்கப்படுபவையாகவும், சாதகமாக நடந்து கொள்பவையாகவும் இருக்கின்றன என்பதை அல்லாஹ் நன்கு அறிவான்.

முழுவுலகமும் மனித இதயங்களோடு தொடர்பு கொள்கிற போதும், அதனுடைய அச்சுத் தழும்புகளை இதயத்தில் இன்னும் ஆழமாக ஆக்குகிற போதும், வல்ல அல்லாஹ்வோடு தொடர்புடையதாக இருக்க அதனை தூண்டுகிற பொழுதும் அல்லாஹ்வை நினைக்குமாறும் அவனை புகழுமாறும் திருக்குர்ஆனில் திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது.

‘ஆகவே (நபியே!) அவர்கள் சொல்வதை (யெல்லாம்) நீர் பொறுத்துக் கொள்வீராக, இன்னும் சூரியன் உதிப்பதற்கு முன்னும் அது அடைவதற்கு முன்னும் இரவின் நேரங்களிலும் உம்முடைய இறைவனின் புகழைத் துதித்து தொழுவீராக, மேலும் இன்னும் பகலின் (இரு) முனைகளிலும் இவ்வாறே துதி செய்து தொழுவீராக! இதனால் (நன்மைகள் அடைந்து) நீர் திருப்தி பெறலாம்’ (திருக்குர்ஆன், தாஹா 20:130)

‘பகலின் இரு முனைகளிலும் இரவின் பகுதியிலும் நீங்கள் தொழுகையை நிலைப்படுத்துவீராக, இறைவனை நினைவு கூறுவோருக்கு இது நல்லுபதேசமாக இருக்கும்’ (திருக்குர்ஆன், ஹுது 11:114)

‘அதிகாலையிலும் சூரியன் மறையும் முன்பும் உமது இறைவனின் பெயரை துதிப்பீராக, இரவின் நடுப்பகுதியிலும் அவனை வணங்குவீராக, இரவு நெடுகிலும் அவனை துதிப்பீராக!’ (திருக்குர்ஆன், அத்தஹ்ர் 76:25,26)

இந்தக் குறிப்பிட்ட நேரத்தில் இறைவனை நினைக்குமாறு இடப்பட்டிருக்கும் கட்டளை ஐவேளைத் தொழுகை கடமையாக்கப் படுவதற்கு முன்புதான் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது இல்லை. ஏனென்றால் இந்த ஐவேளைத் தொழுகைகள் இறை நினைவை நன்கு மனதில் பதியச் செய்யும் என்பதற்காக, இது அந்தக் கட்டளையை மிகைத்து விட்டிருக்கிறது.

இந்த இறை நினைவு என்பது ஐவேளைத் தொழுகையைவிட விரிவானது என்பது தான் உண்மை. அதற்குறிய நேரமும் அதன் அமைப்பும் கடமையான தொழுகையைப் போன்று எல்லைக்கு உட்பட்டது அல்ல. அது தனிமையில் இறைவனை நினைப்பதாக இருக்கலாம் அல்லது தொழுகையின் ஒரு பகுதியாகிய வாயும் இதயமும் இணைந்த அதேவேளை எந்தவித அசைவுகளும் இல்லாத ஒன்றாகக்கூட இருக்கலாம்.

இது நிச்சயமாக அதைவிட விரிவானது என்றால் ஒருவர் தனியாக இருக்கும் போதோ அல்லது மக்களோடு இருக்கும் போதோ சிறிய அல்லது பெரிய செயலுக்கு முன்போ எதையும் செய்யத் தீர்மானிக்கும் முன்போ நினைக்கும் வல்ல இறைவனின் மாறாத நினைவை அது உள்ளடக்குகிறது.

இருப்பினும் வைகறைப் பொழுதும், சூரியன் மறையத்துவங்கும் சாயங்காலப் பொழுதும், இரவின் கடைசிப் பகுதியும் இங்கே சொல்லப்பட்டிருப்பது ஏனென்றால் இந்த நேரங்களில் தான் மனித இதயங்கள் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்க்கு உள்ளாகிறது. மனிதனைப் படைத்த இறைவன் அவனது தன்மைகளை முழுவதும் அறிந்தவனாக இருக்கிறான்.

‘அவனை மறந்து விட்டிருப்போரில் ஒருவராக இருக்க வேண்டாம்’ இந்த வசனம் இறைவனை நினைக்கத் தவறிய மக்களைக் குறிப்பிடுகிறது. இது வாயால் மட்டுமின்றி இதயத்தாலும் மனதாலும் நிகைக்க மறந்த மக்களைக் குறிப்பிடுகிறது. அந்த இறைநினைவு தான் மனித இதயத்தை உயிரோட்டம் உள்ள இதயமாக வைக்கிறது. அந்த உயிரோட்டமுள்ள இதயம் தான் எந்த ஒரு செயலை செய்யுமுன்பும் இறைவனை கவனிக்கும் மனிதனை, ‘இறைவனால் கவனிக்கப்படுகிறோம்’ என்ற குற்றவுணர்வினால் அதைச் செய்வதிலிருந்து அல்லது அதற்கு காரணமாகிற செயலை செய்வதிலிருந்து அவனை தடுக்கிறது. இப்படிப்பட்ட இறைநினைவு தான் இங்கே கட்டளையிடப்படுகிறது. இறைவனுக்கு கீழ்படியாதலிலும் அவனது கட்டளைக்கு செயல் வடிவம் கொடுக்காததிலும் கொண்டு போய் சேர்க்கும் ஒரு விசயம் உண்மையான இறைநினைவாக ஆகாது.

இறைவனை நினைப்பதை விட்டும் உங்களது செயல்களை நீங்களே கவனிப்பதை விட்டும் நீங்கள் தவறி விட வேண்டாம். மனிதன் இறைவனோடு தொடர்பு கொண்டவனாக இருந்து கொண்டே இருக்க வேண்டும் அப்போது தான் சைத்தான் அவர்களுக்கு முன்பு வைக்கக் கூடிய வீணான எண்ணங்களை எதிர்க்கும் சக்தியைப் பெற முடியும். ‘சைத்தானின் தீய எண்ணங்கள் உங்களைத் தீண்டினால் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுங்கள். அவன் எல்லாவற்றையும் கேட்பவன் அனைத்தையும் பார்ப்பவன்’ (திருக்குர்ஆன், அல்அஃராப் 7:200)

மனிதனுக்கும் சைத்தானுக்கும் இடையிலான போரின் விரிந்த காட்சியை இந்த அத்தியாயத்தின் ஆரம்பப்பகுதி காட்டியது. ஈமான் கொண்ட கூட்டத்தை ஜின்களிலும் மனிதர்களிலுமுள்ள சைத்தான்கள் வழி கெடுக்க முயற்சித்ததையும் அது காட்டியது. இறைவன் தனது அத்தாட்சிகளை எவர்களுக்கு கொடுத்தானோ அந்த மனிதன் படைக்கப்பட்ட வரலாற்றில் சைத்தானைப்பற்றி சொல்லப்படுகிறது. ஆனால் அவன் அவர்களை விட்டும் தன்னை விலக்கிக் கொள்கிறான். சைத்தான் அவர்களைப் பின் தொடர்ந்து சென்று தவறிழைப்பவர்களில் ஒருவராக அவர்களை ஆக்குகிறான். அதன் இறுதியில் அது சைத்தானின் தூண்டுதல்களைப் பற்றி சொல்கிறது. எவ்வாறு மனிதன் சைத்தானை விட்டும் விலகி எல்லாவற்றையும் அறிகிற எல்லாவற்றையும் செவிமடுக்கிற அல்லாஹ்விடம், பாதுகாவல் தேடுவதைப் பற்றி சொல்கிறது. தாழ்மையுடனும் அச்சத்துடனும் இறைவனை தியானிப்பதும் அவனை மறந்து விட்டிருப்போரில் ஒருவராக இருக்கக் கூடாது என்ற கட்டளையோடு முடிவது தான் நிலையான உறுதியான வரியாகும்.

‘(நபியே!) மன்னிப்பைக் கைக்கொள்வீராக! நன்மையைக் கடைப்பிடிக்குமாறு (மக்களை) ஏவுவீராக! மேலும் அறிவீனர்களைப் புறக்கணித்து விடும்’ (அல்குர்ஆன், அல்அஃராப் 7:199) என்ற வசனம் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிய அருள் கட்டளையின் ஒரு பகுதியாக அந்தக்கட்டளையும் வருகிறது. இவ்வாறு இது அந்த வழிநெடுகிலும் பலரும் அறியும் வண்ணம் தடயங்களை ஏற்படுத்திக் கொண்டே செல்கிறது. அந்த வழிதான் அல்லாஹ் ஏற்றுக் கொள்கிற நேர்வழி. அந்த வழிதான் அவனுடைய வழிகாட்டுதல்களை பின்பற்றுவோருக்கு அவ்வழியில் பழக்கமாகி விட்ட எல்லாக் கஷ்டங்களையும் மிகைத்து விடும் சக்தியை அவர்களுக்கு அளிக்கிறது. மிக உயர்ந்தவனின் கட்டளையை ஏற்று நடக்கும் வானவர்களின் உதாரணத்தை இறைவன் அதன் பிறகு தருகின்றான். அவர்கள் எந்த மன ஊசலாட்டத்திற்கும் சைத்தானிய எண்ணத்திற்கும் இடம் தர மாட்டார்கள். ஏனெனில் இயல்பாகவே அவர்களின் இயற்கைத் தன்மையில் சைத்தான் ஆதிக்கம் செலுத்த இயலாது.

அவர்களுக்கு மனோ இச்சையை கட்டுப்படுத்த முடியாத ஆசையே கிடையாது. மாறாக நிலையாக இறைவனைப் புகழ்ந்தவாறும் அவனை துதித்தவாறும் இருக்கிறார்கள். அவர்கள் அவனை புகழ்வதை விட்டும் பெருமை கொள்வதில்லை. இறைவனைப் புகழ, அவனை நினைக்க வணங்க மனிதனுக்கு மிகப் பெரும் முயற்சி தேவை. அவன் அடைய வேண்டிய பாதை மிகவும் கஷ்டமானது. அவன் இயற்கையாகவே சைத்தானின் ஊசலாட்டங்களுக்கு இடம் தரக்கூடியவனாக இருக்கிறான். அம்முயற்சியை செய்யத்தவறினால் அது அவரை அழிவில் கொண்டு போய் சேர்க்கும். மனிதன் ஓரளவு சக்தியைப் பெற்றிருக்கிறான். அந்த சக்தியை இறைவனை வணங்குவதாலும் அவனைப் புகழ்வதாலும் கிடைக்கிற ஊட்டத்தினால் மட்டுமே அதிகரிக்க முடியும். ‘உம்முடைய இறைவனிடத்தில் இருப்பவர்கள் அவனை வணங்குவதை விட்டும் பெருமை அடிப்பதில்லை, அவர்கள் அவனை துதித்துக் கொண்டும் சிரம் தாழ்த்திக் கொண்டும் இருக்கிறார்கள்’ (அல்குர்ஆன், அல்அஃராப் 7:206)

வணக்கமும் இறைவனை நினைப்பதும் இந்த மார்க்கத்தின் செயல்பாட்டில் ஒரு அடிப்படை அம்சமாகும். இதன் செயல்பாட்டு முறை தத்துவார்த்த அறிவையோ, அல்லது இயற்கை பற்றிய விவாதத்தையோ சாராதது. அது நடைமுறை சாத்தியமானது, அது மனித சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டது.

அது மக்களின் உள்ளத்திலும் நடத்தையிலும் உறுதியாக நிலைபெற்று விட்ட மாற்ற முடியாத சட்டதிட்டங்களைக் கொண்டது. அல்லாஹ் விரும்பியபடி மனிதர்கள் நடக்க வேண்டும் என விரும்புகிறான், அதற்கு மிகப்பெரிய விடாமுயற்சியும் எவ்வளவு பெரிய கஷ்டங்களையும் சகித்துக் கொண்டு காரியத்தில் முன்னேறும் தன்மையும் அவசியம். ஓரளவு சக்தியை மட்டும் பெற்றிருக்கக்கூடிய மனிதர்களில் ஒருவராகிய இந்த மார்க்கத்தை ஆதரிக்கக் கூடிய ஒருவர் இப்படிப்பட்ட கடினமான குறிக்கோளை எப்படி எட்ட முடியும்? அதற்கு கூடுதல் சக்தி அவரது இறைவனால் வழங்கப்பட்டால் மட்டுமே முடியும். ஒருவரது சொந்த அறிவு அந்த சக்தியை ஒரு போதும் அளிக்காது, அதற்கு முறையான வணக்கமும் இறைவனின் உதவியும் சேர்ந்திருந்தாலே தவிர அந்த சக்தியைப் பெற முடியாது.

இந்த அத்தியாயத்தின் ஆரம்பம் இறைவன் அவனது தூதரை நோக்கிச் சொல்வதாக ஆரம்பிக்கிறது. ‘(நபியே!) இதன் மூலம் நீர் எச்சரிக்கை செய்வதற்காகவும் முஃமின்களுக்கு நல்லுபதேசமாகவும் உமக்கு அருளப்பட்ட வேதமாகும் (இது). எனவே இதனால் உமது உள்ளத்தில் எந்த தயக்கமும் ஏற்பட வேண்டாம்’, (அல்குர்ஆன், அல்அஃராப் 7:02) இறைவனின் கண்ணியமிக்க தூதர்களால் வழிகாட்டப்பட்ட நம்பிக்கையாளர்களின் சுருக்கமான வரலாற்றையும், மனித ஜின் சைத்தான்களாலும் அவர்களது தோழர்களாலும் தீட்டப்பட்ட சதித்திட்டங்களையும் அவர்களது பாதையில் வைக்கப்பட்ட முட்டுக்கட்டைகளையும் மேலும் மிகப்பெரிய படைகளைக் கொண்டு போர் செய்ய முயற்சித்த மோசமான மனிதர்களையும் கொடுங்கோலர்களையும் இந்த அத்தியாயம் சொல்கிறது. இந்த அதிகாரப்பூர்வமான இறுதி கட்டளை இந்த கண்ணியமிக்க கூட்டத்தினரோடு சேர்ந்து கொள்ள விரும்புவோருக்கு அவர்களின் கடினமான வழிநெடுக சேர்ந்து கொள்ள விரும்புவோருக்கு சரியான மிகப்பெரிய தீர்வை அழுத்தம் திருத்தமாக சொல்கிறது.

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: