இஸ்லாம்தளம்

இந்தியா காஃபிர் நாடா? (பகுதி-1)

சத்தியமார்க்கம்.காம் தளத்தில், “இந்திய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்துள்ள கல்வி உதவித்தொகை” என்ற தலைப்பில் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு அரசு ஒதுக்கியுள்ள கல்வி உதவித்தொகையைக் குறித்தும் அதனை பெறும் முறையினை குறித்தும் ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் சுலைமான் என்பவர், “இந்தியா காஃபிர் நாடு என்றும், காஃபிர் நாட்டில் வாழும் முஸ்லிம்கள் இந்தியாவை விட்டு நாடு துறந்து – ஹிஜ்ரத் செல்ல வேண்டும்; அப்படிச் செல்லாதவர்கள் நரகத்தில் ஒதுங்குவார்கள்” என்றும் இந்திய அரசின் அந்த உதவித்தொகையைப் பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு எச்சரிக்கையை முஸ்லிம்களுக்கு வைத்திருந்தார். அது சரியான கருத்து தானா என்பதைக் குறித்து இங்கு காண்போம். முதலில் அவர் கூறிய கருத்து கீழே:

//முஸ்லீமான பின்னால் குஃபார் நாட்டில் வாழ்பவன் என் உம்மாவை சேர்ந்தவன் அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) தெரிவித்துள்ளார்கள். அல் வாலா அல் பாராவை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்.அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் (ஹிஜ்ரத் செய்து) நீங்கள் நாடு கடந்து போயிருக்கக்கூடாதா?’ என (மலக்குகள்) கேட்பார்கள். எனவே இத்தகையோர் ஒதுங்குமிடம் நரகம் தான் சென்றடையும் இடங்களில் அது மிகக் கெட்டதாகும். (4:97) //- சுலைமான்.

முதலில் இந்தியா ஒரு காஃபிர் நாடு என்று சொல்வது வடிகட்டிய கயமைத்தனம் ஆகும். இந்தியா ஒரு மதசார்பற்ற, ஜனநாயக நாடு. இங்கே எல்லா மதத்தவர்களும் ஆட்சியில் பங்கு வகிக்கிறார்கள். அனைத்து மதத்தினருக்கும் வணக்க, வழிபாட்டுச் சுதந்திரம் இருக்கிறது. அவரவர்களுக்கென ஒவ்வொரு மதத்தினருக்கும் தனியாக வழிபாட்டுத்தலங்களும் உண்டு.

“இந்தியாவில் குடியுரிமை உள்ள எந்த ஓர் இந்தியனுக்கும் சட்டத்தின் முன்பு சம உரிமையும், சட்டத்தின் மூலம் சமமான பாதுகாப்பையும் வழங்க அரசு மறுக்கக்கூடாது. இந்தியக் குடிமக்கள் தாம் நேசிக்கும் மதத்தைப் பின்பற்றவும், தாம் சார்ந்திருக்கும் மதம் அல்லது கொள்கை பற்றி எண்ண, எழுத, பிறருக்குப் போதிக்கவும் உரிமை பெற்றவர்கள்” என்று இந்திய அரசியல் சாசனம் கூறுகிறது. ஒருவரின் மதக் கொள்கையில் இன்னொருவர் கண்டிப்பாகக் குறுக்கிட முடியாது. இவ்வளவு வெளிப்படையான மதச் சுதந்திரம் வழங்கும் இந்திய நாட்டை ஒரு காஃபிர் நாடாகச் சித்திரிக்க முயல்வது அறியாமை மட்டுமல்லாது அயோக்கியத் தனமும் ஆகும். எந்த மதத்தையும் சாராத இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு, அதைக் காஃபிர் நாடு என்று சொல்வது கண்டிக்கத்தக்கது.

இந்தியாவிலுள்ள இஸ்லாத்தின் எதிரிகள் சிலர் இது போன்று கூறுவதுண்டு. ஆனால் இந்தியநாடு எந்த மதத்தினரினது குடும்பச் சொத்து அல்ல. எந்த ஒரு மதத்தினரும் அதைச் சொந்தம் கொண்டாட முடியாது. முஸ்லிம்கள் என்ற பெயரில் முகலாய மன்னர்கள் இந்தியாவை ஆண்ட போதும் அது மதச்சார்பற்ற நாடாகவே இருந்தது. முஸ்லிம் நாடு என்று அறிவிக்கப்படவில்லை. அதன் பிறகு வெள்ளையர்கள் ஆண்ட போதும் மதச்சார்பற்ற நாடாகவே இருந்தது. கிறிஸ்தவ நாடாக அறிவிக்கப்படவில்லை. சுதந்திர இந்தியாவும் மதசார்பற்றத் தன்மையிலிருந்து விலகி மதம் சார்ந்த நாடாக ஆகி விடவில்லை! இந்தியா காஃபிர் நாடு என்று சிலர் சொல்லி வந்தாலும் அதில் எள் முனையளவும் உண்மை இல்லை!

அவ்வாறு கூறப் படுவதை இஸ்லாத்தின் எதிரிகள் சிலரின் வஞ்சகப் பேச்சு, சூழ்ச்சி என்று கொள்க.

இனி சுலைமான் எழுதியது…

இவர், இந்தியாவில் குடியிருக்கும் முஸ்லிம்கள் காஃபிர் நாட்டில் குடியிருக்கிறார்கள் என்பதாகத் தவறாக விளங்கிக் கொண்டு, “காஃபிர் நாட்டில் குடியிருப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை” எனத் தனக்குத் தெரிந்த இஸ்லாத்தை, மற்ற முஸ்லிம்களுக்கு விளக்க வந்திருக்கிறார். – (இந்தியா காஃபிர் நாடல்ல. என்பதை மேலே விளக்கியுள்ளோம்.) – அதற்கான இஸ்லாத்தின் ஆதாரமாக திருமறைக்குர்ஆன் 004:097 வசனத்தையும், திர்மிதியில் இடம் பெற்ற ஒரு ஹதீஸையும் எடுத்தெழுதியிருக்கிறார். இருவேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக கூறப்பட்ட இந்த ஹதீஸ் மற்றும் குர்ஆன் வசனத்தை எடுத்து இஸ்லாம் கூறவராத ஒரு கருத்தை நிலைநாட்ட முயன்றுள்ளார். முதலில் திருமறைக்குர்ஆன் வசனத்தையும் அது எச்சூழலில் எதற்காக இறக்கப்பட்டது என்பதையும் பார்த்துவிட்டு பிறகு திர்மிதியில் இடம்பெறும் ஹதீஸைப் பார்ப்போம்.

தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டோரின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது “நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?” என்று கேட்பார்கள். “நாங்கள் பூமியில் பலவீனர்களாக இருந்தோம்” என்று அவர்கள் கூறுவார்கள். “அல்லாஹ்வின் பூமி விசாலாமானதாக இல்லையா? அதில் நீங்கள் ஹிஜ்ரத் செய்திருக்கக்கூடாதா?” என்று கேட்பார்கள். அவர்கள் தங்குமிடம் நரகம் அது கெட்ட தங்குமிடம். (அல்குர்ஆன், 004:097)

இந்த வசனத்தைக்காட்டி இந்தியாவில் வாழ முடியாத முஸ்லிம்கள் அனைவரும் நாடு துறந்து – ஹிஜ்ரத் செல்ல வேண்டும் என முஸ்லிம்களை இந்தியாவிலிருந்து வெளியேறச் சொல்கிறார் சுலைமான். அவர் வைத்த 004:097வது வசனத்தின் பின்னணி என்ன?

புகாரி, 4596 வது ஹதீஸ் இது பற்றி விவரிக்கிறது:

மதீனாவாசிகள் ஒரு படைப் பிரிவை அனுப்பிவிடவேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்பட்டனர். அந்தப் படைப் பிரிவில் என் பெயரும் பதிவுசெய்யப்பட்டது. அப்போதுதான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான இக்ரிமா(ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். அவர்களிடம் இதைப் பற்றித் தெரிவித்தேன். அவர்கள் என்னை வன்மையாகத் தடுத்தார்கள். பிறகு தமக்கு இப்னு அப்பாஸ்(ரலி) (பின்வருமாறு) அறிவித்ததாகக் கூறினார்கள்.

(நபி(ஸல்) அவர்களின் காலத்தில்) முஸ்லிம்களில் சிலர் இணைவைப்பாளர்களுடன் இருந்தனர். அவர்கள் (பத்ருப்போரில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கெதிராக இணைவைப்பாளர்களின் கூட்டத்தை அதிகப்படுத்தி(க் காட்டக் காரணமாக இருந்த)னர். எனவே, (முஸ்லிம்களின் அணியிலிருந்து அவர்களை நோக்கி) எய்யப்படும் அம்பு செல்லும். அது அவர்களில் ஒருவரைத் தாக்கிக் கொன்றுவிடும், அல்லது அவர் (வாளால்) அடிபட்டுக் கொல்லப்படுவார். (இது தொடர்பாகவே) அல்லாஹ் இவ்வசனத்தை (திருக்குர்ஆன் 04:97) அருளினான்: (மார்க்கக் கடமைகளைச் சரிவர நிறைவேற்ற முடியாதவாறு இறை மறுப்பாளர்களின் ஊரில் இருந்துகொண்டு) தமக்குத்தாமே அநீதி இழைத்துக்கொண்டிருந்தவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும்போது (அவர்களை நோக்கி ‘இந்த ஊரில்) நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்?’ என வினவுவார்கள். அதற்கு அவர்கள், ‘பூமியில் நாங்கள் பலவீனர்களாய் இருந்தோம்’ என பதிலளிப்பார்கள். ‘அல்லாஹ்வின் பூமி விசாலமானதாய் இருக்கவில்லையா? அதில் நீங்கள் நாட்டைத் துறந்து (ஹிஜ்ரத்) சென்றிருக்க வேண்டாமா?’ என வானவர்கள் வினவுவார்கள். இவர்களின் இருப்பிடம் நரகம் தான். மேலும், அது மோசமான இருப்பிடமாகும்.

மேற்கண்ட ஹதீஸிலுள்ள முதல் பத்திக்கான விளக்கம்: நபித்தோழர் அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) மக்காவில் ஆட்சிராக இருந்தபோது இது நடந்தது. அப்போது ஷாம் நாட்டினருக்கெதிரான போருக்காக வேண்டி மதீனாவிலிருந்து ஒரு படையை அனுப்பிவைக்க வேண்டுமென கலீஃபாவிடமிருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது (ஃபத்ஹுல் பாரி)

இரண்டாவது பத்திக்கான விளக்கம்: நபி(ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்துவிட்ட பிறகு மக்காவிலேயே தங்கிவிட்ட முஸ்லிம்களில் சிலர் எதிரிகளுக்கு அஞ்சித் தங்களை இனம் காட்டிக்கொள்ளாமல் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் பத்ருப் போர் வந்தது. மக்கா குறைஷியர் இந்த முஸ்லிம்களையும் கட்டாயப்படுத்தி பத்ருப் போருக்கு அழைத்துச் சென்று விட்டனர். பத்ரில் எதிரிகளின் எண்ணிக்கை கூடுதலாகவும், முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருப்பதைக் கண்ட இந்த முஸ்லிம்களின் உள்ளத்தில் சந்தேகம் எழ ஆரம்பித்தது. ‘குறைவான எண்ணிக்கையிலுள்ள முஸ்லிம் அணியினரை, அவர்களது மார்க்கப் பற்று ஏமாற்றிவிட்டது’ என்று இவர்கள் கூறினர்.

பின்னர் எதிரணியில் நின்ற இவர்கள் முஸ்லிம்களின் தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்தனர். இவர்களின் உயிர்களைக் கைப்பற்றிய போது வானவர்கள் கேட்ட கேள்வி மற்றும் இவர்கள் அளித்த பதில் குறித்தே (004:097) வசனம் அருளப்பட்டது. என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கினார்கள்.

உண்மையிலேயே இணைவைப்பவர்களுடன் சேர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கம் இந்த முஸ்லிம்களுக்கு இல்லாவிட்டாலும், இணைவைப்பாளர்களின் எண்ணிக்கையைப் பெரிதுபடுத்திக் காட்டுவதற்கு இவர்களும் ஒரு காரணமாகிவிட்டார்கள் என்ற அடிப்படையிலேயே அல்லாஹ் இவர்களைக் கண்டிக்கிறான்… (ஃபத்ஹுல் பாரி)

இஸ்லாம் மார்க்கத்தின் வணக்க வழிபாடுகளைச் சரிவர நிறைவேற்ற விடாமல் மக்காவின் இணைவைப்பாளர்கள் முஸ்லிம்களைத் தடுத்து தொந்தரவுபடுத்திச் சித்ரவதை செய்து வந்தனர். மார்க்கக் கடமைகளை நிறைவேற்ற முடியாதவாறு இணைவைப்பாளர்களின் ஊரில் இருக்க வேண்டாம் என முஸ்லிம்கள் மக்காவைத் துறந்து, ஹிஜ்ரத் சென்றார்கள். நபி (ஸல்) அவர்களும் நாடு துறந்து சென்றார்கள். அவர்களை அரவணைப்பதற்கு ஒரு நாடு ஆவலோடு காத்திருந்தது.

இன்னும், முஸ்லிம்களில் ஹிஜ்ரத் செல்ல இயலாதவர்கள் மக்காவிலேயே தங்கிவிட்டனர். அப்படித் தங்கிய வர்களில் ஹிஜ்ரத் செல்லச் சக்திப் பெற்றிருந்தும் அவர்கள் நாடு துறந்து செல்லாமல் இருந்தனர். நாடு துறந்து செல்லத்தடையாக அவர்களின் செல்வங்களின் மீதான ஆசையாக இருந்திருக்கலாம் (அல்லாஹ் மிக அறிந்தவன்) ஹிஜ்ரத் செல்ல சக்தியிருந்தும் செல்லாமல் இருந்தவர்களையே 004:097வது வசனத்தில் இறைவன் கண்டிக்கிறான். உண்மையில் ஹிஜ்ரத் செய்ய இயலாத பலவீனமான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மீது குற்றமில்லை. அவர்களின் பிழைகளை இறைவன் பொறுத்துக் கொள்வான் என்று இறைவன் அடுத்தடுத்த வசனங்களில் கூறுகிறான்

ஆண்களில் பலவீனமானவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களைத் தவிர- எந்த உபாயத்திறனும் அற்றவர்கள்; வெளியேறும் எந்த வழியையும் அறியமாட்டார்கள். அல்லாஹ் அவர்களது பிழைகளைப் பொறுப்பான். அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும் மன்னிப்பவனாகவும் இருக்கிறான். (திருமறைக்குர்ஆன், 004:098, 099) மேலும், இஸ்லாத்திற்காக ஹிஜ்ரத் – நாடு துறந்து செல்வதின் சிறப்புப் பற்றி 004:100வது வசனம் விளக்கமாக எடுத்துரைக்கிறது.

எனினும் மக்கா வெற்றிக்குப் பின் உலக முஸ்லிம்களுக்கு ஹிஜ்ரத் ஒன்று இல்லை. எனவே திருமறைக்குர்ஆனில் கூறப்படும் அத்தனை ஹிஜ்ரத் வசனங்களும் முஸ்லிம்களுக்கு இல்லை! அதாவது இன்றைய முஸ்லிம்களுக்கு ஹிஜ்ரத் எனும் நாடு துறந்து செல்வது கடமை இல்லை! இதை நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது அறிவித்து விட்டார்கள்.

”மக்கா வெற்றியின் போது நபி(ஸல்) அவர்கள் ‘இவ்வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் கிடையாது. இனி அறப் போர் செய்வதும் நல்ல எண்ணமும் தான் உள்ளது. எனவே போருக்காக அழைக்கப்பட்டால் உடனே புறப்படுங்கள்” என்று கூறினார்கள். (புகாரி. முஸ்லிம், திர்மதீ, அஹ்மத், அபூதாவூத். நஸயீ)

மார்க்கத்திற்காக நாடு துறத்தல் அளப்பெரும் நன்மையை அள்ளித்தரும். ஆனால் ஹிஜ்ரத் பயணம் நபியின் காலத்தோடு முடிந்து விட்டது. மார்க்கக் கடமைகளை நிறைவேற்ற முடியாத காலத்தில்தான் ஹிஜ்ரத் கடமையாக இருந்தது. அதன் பிறகு இஸ்லாம் மேலோங்கி இன்றுவரை வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற இயலாத நிலைமை எங்குமே இல்லை! அதனால் இந்திய வாழ் முஸ்லிம்கள் நாடு துறந்து செல்ல வேண்டிய அவசியமில்லை.

இந்திய மண்ணில் குடியுரிமைப் பெற்ற ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இந்தியாவில் வாழ உரிமை இருக்கிறது. முஸ்லிம்களும் இ ந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள். அவர்களை வெளியேற்ற எவருக்கும் அதிகாரம் இல்லை. ஒருவேளை முஸ்லிம்களை வெளியேற்ற யாராவது வன்முறையில் இறங்கி இங்கே வாழ்வே முடியாத ஒரு சூழலை ஏற்படுத்துவார்கள் எனில் சொந்த மண், சொந்த உடமையைப் பாதுகாப்பதற்காக அறப்போரில் இறங்கி அதில் இறந்தாலும் அதுவும் முஸ்லிம்களுக்கு நன்மைதான்.

//முஸ்லீமான பின்னால் குஃபார் நாட்டில் வாழ்பவன் என் உம்மாவை சேர்ந்தவன் அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) தெரிவித்துள்ளார்கள். அல் வாலா அல் பாராவை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்.// – சுலைமான்.

– இந்த ஹதீஸுக்கான விளக்கம் அடுத்த பகுதியில் இன்ஷா அல்லாஹ்.

ஆக்கம்: அபூமுஹை

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: