இஸ்லாம்தளம்

இந்தியா காஃபிர் நாடா? (பகுதி-3)

ஹிஜ்ரத் – நாடு துறத்தல் ஒரு பார்வை!

மூன்றாம் பகுதியை வாசிக்கத் துவங்கும் முன் முன்சென்ற பகுதி-1, பகுதி-2 ஆகியவற்றை பார்வையிட்டுக் கொள்ளுங்கள்.

இஸ்லாமியச் சொல் வழக்கில் “ஹிஜ்ரத்” என்றால் நாடு துறத்தல் என்று பொருளாகும். பிறந்த நாட்டை, வாழ்ந்த பூமியை, வசிக்கும் இல்லத்தை, தமக்குச் சொந்தமான நிலங்களை ஒட்டுமொத்தமாகத் தியாகம் செய்துவிட்டு எந்த அறிமுகமும் இல்லாத அந்நிய நாட்டில் குடியேறுவதாகும். நாடு துறத்தல் பற்றி வரலாற்று ஆசிரியர்களின் கண்ணோட்டம் சுருக்கமாக:

ஹிஜ்ரத் என்றால் தனது எல்லா உலக ஆதாயங்களையும் இழந்து, சொந்த மண்ணில் உள்ள உடைமைகளை அப்படியே விட்டுவிட்டு தன்னையும் தனது மார்க்கத்தையும் காப்பாற்றிக் கொள்ள தனது சொந்த நாட்டை, சொந்த ஊரைத் துறந்து அந்நிய நாட்டுக்கு அந்நிய ஊருக்குச் செல்வதாகும். இவ்வாறு நாடு துறப்பவர்கள், செல்லும் வழியில் அல்லது செல்வதற்கு முன் பல ஆபத்துகளைச் சந்திக்க வேண்டி வரும். உயிர் பறிபோகலாம்; உடைமைகள் அபகரிக்கப்படலாம்; செல்லுமிடத்தில் எத்தகைய எதிர்காலத்தை முன்னோக்க வேண்டியிருக்குமோ? அங்கு என்னென்ன கவலைகளும், துக்கங்களும், துயரங்களும் மறைந்திருக்கின்றனவோ? என்று அறியாத நிலையில் மேற்கொள்ளும் பயணமே ஹிஜ்ரத்தாகும்.

இப்படியொரு நாடு துறத்தல் எனும் தியாகத்தைச் செய்தவர்கள் இதற்கான மகத்தான கூலியை இறைவனிடம் பெற்றிருக்கிறார்கள் என்று திருமறை குர்ஆன் கூறுகிறது. ஹிஜ்ரத் பற்றிய இறைவனின் கட்டளைகளையும், அதைச் செயல்படுத்திய நபியவர்கள் மற்றும் நபித்தோழர்கள் பற்றியும் சற்று விரிவாகப்பார்ப்போம். அதற்குமுன்,

“இந்தியா ஒரு காஃபிர் நாடு எனவே இந்தியாவில் முஸ்லிம்கள் வசிப்பது ஹராம் – விலக்கப்பட்டது” என்று சில இஸ்லாம் விரோத சக்திகள் கூக்குரலிடுகின்றன. இந்தியாவில் ஒரு மதம் சார்ந்த ஆட்சியை நிறுவ முயற்சிக்கும் மதவாத சக்திகளுக்கு இஸ்லாம் ஒரு பேரிடராக இருப்பதால் முஸ்லிம்களுக்கு எதிராக இஸ்லாத்தையே திருப்பிவிட முயற்சிக்கும் ஒரு சதி வேலையே “இந்தியா போன்ற காஃபிர் நாட்டில் முஸ்லிம்கள் வாழக்கூடாது!” என்ற வாய் கிழிய ஓதும் இப்புதுமந்திரம்.

இந்தியா ஆங்கிலேய அடிமைத்தளையிலிருந்து மீண்டு சுதந்திரம் அடைந்த காலகட்டங்களுக்குப் பின், அதுவரை இந்தியா சுதந்திரம் அடைவதற்காக பாடுபடாமல் அன்னியனின் ஆட்சியில் உயர் பதவிகளை தக்கவைத்து அனுபவித்துக் கொண்டிருந்த ஒரு கூட்டம், இந்தியா சுயாட்சி பெற்றதன் ஊடாகவே முஸ்லிம்கள் பெருவாரியாக வசித்து வந்த பகுதிகளும் தனியாகப் பிரிக்கப்பட்டு பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட உடன் அவர்கள் கனவு காணும் மதஆட்சியை இந்தியாவில் நிறுவி விடலாம் என மனப்பால் குடித்தனர். ஆனால் அதன் பின்னரும் இந்திய மண்ணின் அனைத்து இடங்களிலும் ஆங்காங்கே பரவி வசித்து வந்த முஸ்லிம்கள் அதற்கு மிகப்பெரும் இடையூறாக இருந்தனர்.

முஸ்லிம்களை இந்தியாவிலிருந்து ஒதுக்காமல் தங்களின் கனவு ஈடேறாது என்பதை நன்றாகப் புரிந்து கொண்ட அவர்கள், இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திற்குப் பின்னர் முஸ்லிம்களை இந்தியாவில் நிம்மதியாக வாழ விடாமல் அனைத்து விதத்திலும் இடையூறுகளை ஏற்படுத்தத் துவங்கினர். இதன் பல்வேறு வடிவங்கள் தான் சூரத், பாகல்பூர், பம்பாய், குஜராத், கோயம்புத்தூர் போன்ற இடங்களில் முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட திட்டமிட்ட இனக்கலவரங்களும் பாபர் மசூதி போன்ற எண்ணற்ற இறையில்லங்கள் இடிப்பும் ஆகும். இத்தருணங்களின் போதெல்லாம் முக்கியமாக இவர்களின் வாயில் இருந்து உதிர்ந்த வாசகங்கள் மிக முக்கியமானவைகளாகும். “முஸ்லிம்களே! இந்தியாவில் வாழ உங்களுக்கு உரிமையில்லை; ஒன்று நீங்கள் கப்ருஸ்தானுக்குச் செல்ல வேண்டும்; அல்லது பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும்”.

இதுதான் அவர்களின் நோக்கம். சுதந்திரம் அடைந்த கடந்த 60 வருடக்காலமாக இவர்களால் நிகழ்த்தப்பட்ட அனைத்து அட்டூழிய, அராஜகங்களையும் சகித்துக் கொண்டு சொந்தம் மண்ணை விட்டு வெளியேறாமல் இருக்கும் முஸ்லிம்களை என்ன செய்வது என்று புரியாமல் வழிதேடியவர்களின் புதிய கண்டுபிடிப்பு தான் “இந்தியா காஃபிர் நாடு”, “முஸ்லிம்கள் காஃபிர்களுக்கு இடையில் வாழக் கூடாது”, எனவே “முஸ்லிம்கள் உடனடியாக வேறு இஸ்லாமிய நாடுகளுக்கு ஹிஜ்ரத் செய்ய வேண்டும்” இது இஸ்லாமிய சட்டம் என்ற பூச்சுற்றல்.

இதனை அடிப்படையாக வைத்து, அரேபிய நாட்டின் ஆட்சியர்கள், நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றவில்லை! எனக் கூறி, “அரேபிய பூமி எல்லா முஸ்லிம்களுக்கும் ஹிஜ்ரத் செய்யும் நிலமாக இருக்க வேண்டும்” என்று ஹிஜ்ரத் என்றால் என்னவென்றே விளங்கிக்கொள்ளாமல் இந்த அரைவேக்காடுகள் முஸ்லிம்களுக்குப் பாடம் நடத்த வந்திருக்கின்றனர். அதாவது முஸ்லிம்களெல்லாம் அரேபியா மண்ணிலேயே வசிக்க வேண்டும், முஸ்லிமல்லாதவர்கள் ஆட்சியராக இருக்கும் மற்ற பூமியில் முஸ்லிம்கள் வசிக்கக்கூடாது என்று சொல்ல வருகிறார்கள்.

இஸ்லாத்தின் பெயரைக் கூறிவிட்டால் நம்பிவிடுவார்கள் முஸ்லிம்கள் என்று எண்ணியது சரி தான். ஆனால் அதனை ஆய்ந்துப் பார்க்காமல் அப்படியே நம்பி இருக்கும் இடத்தைக் காலி செய்து விடுவார்கள் என்று எண்ணியது தான் இவர்கள் செய்த அபத்தம்.

இவர்களின் கருத்தில், முஸ்லிம்கள் இந்நாட்டின் மைந்தர்கள் அல்ல, அவர்கள் அரேபியா நாட்டிற்குச் செல்ல வேண்டியவர்கள் என்ற சூழ்ச்சிகள் மறைந்திப்பது மட்டுமல்லாது, ஹிஜ்ரத் பற்றிய அறியாமையும் தாராளமாக நிறைந்திருக்கின்றன. ஹிஜ்ரத் என்பது ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பிழைப்புக்காகச் செல்வது போல் அல்ல! அல்லது இந்தியாவிலிருந்து சுற்றுப்பயணமாக பல நாடுகளுக்கு ஜாலி டிரிப் – மகிழ்ச்சியான பயணம் சென்று வருவது போலவும் அல்ல!

ஹிஜ்ரத் மிகவும் கடுமையானது, ஹிஜ்ரத் கடமையாக்கப்பட்ட நேரத்தில் அக்கடமையைக் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும். ஹிஜ்ரத்தை மேற்கொள்ளும் சமயத்தில் அதிலிருந்து தவறினால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் இஸ்லாம் எச்சரிக்கை செய்கிறது. இஸ்லாமிய ஒளியில் ஹிஜ்ரத்தினைக் குறித்து சற்று விரிவாக இங்கு காண்போம்:

நபித்துவ வாழ்வில் முதல் ஹிஜ்ரத்:

இறைத்தூதுவராக, இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மக்காவில் ஆரம்பக் காலகட்ட இஸ்லாமியப் பிரச்சாரத்தைத் துவங்கிய காலத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்கள், இஸ்லாத்தின் மார்க்க கடமைகளை நிறைவேற்ற இயலாமல் மக்கா நகர் முஷ்ரிகின்களால் சித்ரவதை செய்யப்பட்டார்கள். சிலர் கொலை செய்யப்பட்டு மாண்டும் போனார்கள். குறைஷியருக்கு அஞ்சி இறைக் கடமைகளை நிறைவேற்ற இயலாமல் தவித்துக்கொண்டிருந்த முஸ்லிம்களுக்கு, இதற்கான வழிகாட்டலை இறைவன் அறிவித்தான்.

“நம்பிக்கை கொண்ட எனது அடியார்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள். இவ்வுலகில் நன்மை செய்தோருக்கு நன்மையே உள்ளது. அல்லாஹ்வின் பூமி விசாலமானது. பொறுமையாளர்களுக்குக் கணக்கின்றி கூலி வழங்கப்படும்” என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 039:010)

குறைஷியரிடமிருந்து உயிரையும் மார்க்கத்தையும் பாதுகாத்துக்கொள்ள ஹபஷா(அபிசீனியா)விற்கு ஹிஜ்ரத் செய்யுமாறு தொடக்கக்கால நபித்தோழர்களை நபி(ஸல்) அவர்கள் பணித்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் அனுமதியுடன், தாம் பிறந்த மண்ணைத் துறந்து முஸ்லிம்கள் ஹபஷாவிற்குப் பயணம் மேற்கொண்டனர். “எங்களுக்கு வீடு, சொத்து எதுவுமே வேண்டாம்” என்று முடிவெடுத்து எல்லாவற்றையும் இழந்து செல்லத் தயாராக இருந்தாலும் நாடு துறந்து செல்வது முஸ்லிம்களுக்கு இலகுவானதாக இருந்திருக்கவில்லை. மக்காவை விட்டு வெளியேற முயன்ற முஸ்லிம்களின் முயற்சியைக் குறைஷியர் அறிய நேர்ந்தால் அவர்களை விலங்கிட்டுக், கைதிகளாக்கி அடைத்து வைத்தார்கள். அதனால் நாடு துறந்து செல்வதும் அத்துணை எளிதாக இருக்கவில்லை!

முதலாவதாக நாடு துறந்து சென்றவர்களில் பன்னிரண்டு ஆண்களும் நான்கு பெண்களும் இருந்தனர். அவர்களுக்குத் தலைவராக உஸ்மான் பின் அஃப்பான்(ரலி) அவர்கள் இருந்தார்கள். இப்பயணத்தில் அவர்களின் மனைவியான (நபி(ஸல்) அவர்களின் மகள்) ருகையாவும்(ரலி) உடன் இருந்தார்கள். “நபி இப்ராஹீம்(அலை), நபி லூத்(அலை) ஆகிய இருவருக்குப் பின் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்த முதல் குடும்பம் இதுதான்” என்று இவ்விருவரைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இது நபித்துவம் பெற்ற ஐந்தாம் ஆண்டில் நடைபெற்றது.

இரண்டாவது ஹிஜ்ரத்:

முஸ்லிம்கள் பெருமளவில் ஹபஷாவிற்கு ஹிஜ்ரத் செல்ல ஆயத்தமானார்கள். ஆனால் இந்த இரண்டாவது ஹிஜ்ரத் முந்திய ஹிஜ்ரத்தை விட மிகக் கடினமானதாகவே இருந்தது. முஸ்லிம்களின் இப்பயணத்தை குறைஷிகள் அறிந்து கொண்டதால் அத்திட்டத்தை அழிக்க வேண்டுமென்பதற்காகத் தீவிரமான முயற்சியில் இறங்கினர். ஆனால் அல்லாஹ்வின் அருளால் பயணம் அவர்களுக்குச் சாதகமாகி நிராகரிப்பவர்கள் தங்களது திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னதாகவே பயணத்தைத் துரிதப்படுத்தி ஹபஷா சென்றடைந்தனர். இம்முறை 83 ஆண்களும் 18 பெண்களும் ஹபஷா சென்றனர்.

ஹபஷாவிற்குச் சென்ற முஸ்லிம்களை, குறைஷியர் அங்குச் சென்றும் திரும்ப மக்காவுக்குக் கொண்டு வர முழு முயற்சி மேற்கொண்டனர். அன்றைய ஹபஷாவின் மன்னர் நஜ்ஜாஷி நீதமானவராக இருந்ததால் குறைஷியரின் சூழ்ச்சிகள் பலிக்கவில்லை. அதனால் முஸ்லிம்களை மீண்டும் மக்காவுக்குக் கொண்டு வருவதில் தோல்வியடைந்த குறைஷியர், மக்காவில் எஞ்சியிருந்த மற்ற முஸ்லிம்களிடம் மேலும் மூர்க்கத்தனமானக் கொடுமைகளைக் கட்டவிழ்த்து விட்டனர்.

நபியவர்களின் ஹிஜ்ரத்:

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மதீனாவாழ் முஸ்லிம்கள், மக்கா வாழ் முஸ்லிம்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டினர். அதன் பேரில் முஸ்லிம்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கும் ஹிஜ்ரத் சென்றார்கள். இவ்வாறாக முஸ்லிம்களின் ஆதரவு மேலோங்க குறைஷியர் குல முஷ்ரிகின்கள் கொந்தளித்தனர். இறுதியாக இஸ்லாத்தை முடக்கிட நபி(ஸல்) அவர்களையும் குறிவைத்துக் கொல்லத் திட்டம் தீட்டினார்கள். நபி(ஸல்) அவர்களைத் தீர்த்துக்கட்ட மூன்று ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டன.

1. ஊரை விட்டு வெளியேற்றுவது.

2. சங்கிலியால் விலங்கிட்டு ஒரு அறையில் அடைத்து சாகும்வரை அப்படியே விட்டுவிடுவது.

3. கொன்று விடுவது.

இம்மூன்று யோசனையில் மூன்றாவதைச் சிறந்த திட்டமென ஏற்று, நபி(ஸல்) அவர்களைக் கொலை செய்து விடுவதைக் குறைஷி முஷ்ரிகின்கள் தேர்ந்தெடுத்தார்கள். அதற்கான ஆட்களும், நாளும் தேர்ந்தெடுக்கப்பட்டத் தருணத்தில், இறைவனின் உத்தரவினால் ஏற்கெனவே மதீனாவாசிகளோடு மக்காவில் வைத்து செய்து கொண்ட அகபாவின் இரண்டாவது உடன்படிக்கையின்படி மதீனாவாசிகள் தந்த ஆதரவையேற்று நபி(ஸல்) அவர்கள் நாடு துறந்து மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் செய்தார்கள்.

“இன்பத்திலும் துன்பத்திலும் (இறைக் கட்டளைக்கு) செவிசாய்க்க வேண்டும்; கட்டுப்பட வேண்டும். வசதியிலும் வசதியின்மையிலும் செலவு செய்ய வேண்டும். நன்மையை ஏவவேண்டும்; தீமையைத் தடுக்க வேண்டும். அல்லாஹ்வுக்காக நீங்கள் தியாகம் செய்யத் தயாராக வேண்டும். அல்லாஹ்வின் விஷயத்தில் பழிப்பவர்களின் பழிப்பு உங்களைப் பாதித்து விடக்கூடாது. ஆட்சி அதிகாரத்தைப் பெறுவதற்காகச் சண்டையிடக்கூடாது. நான் உங்களிடம் வந்து விட்டால் நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும். உங்களையும், உங்களின் மனைவியரையும் பிள்ளைகளையும் பாதுகாப்பதைப் போல் நீங்கள் என்னைப் பாதுகாக்க வேண்டும். இதனை நீங்கள் பைஆ (இஸ்லாமிய ஒப்பந்தம்) செய்து கொடுங்கள். அல்லாஹ் உங்களுக்குச் சொர்க்கத்தைத் தருவான்” இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் அகபாவில் வைத்து உரை நிகழ்த்தினார்கள்.

அப்பொழுது அகபாவில் மதீனாவாசிகள் நபி(ஸல்) அவர்களுக்குக் கீழ்க்கண்டவாறு உறுதியளித்தனர்:

“செல்வங்கள் அழிந்தாலும், (எங்களில்) சிறப்பிற்குரியவர்கள் கொல்லப்பட்டாலும் நாங்கள் இவரை அரவணைத்துக் கொள்வோம்; கைவிட்டுவிட மாட்டோம். இதே நிபந்தனைகளின் பேரில்தான் இவரை அழைத்துச் செல்கிறோம். நாங்கள் இந்த நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றினால் எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்று மதீனாவாசிகள் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “சொர்க்கம் கிடைக்கும்” என்று கூறினார்கள். உடனே அந்த மக்கள் ‘உங்களது கையை நீட்டுங்கள்’ என்று கூற நபி(ஸல்) அவர்கள் கையை நீட்டியவுடன் அனைவரும் இஸ்லாமிய ஒப்பந்தம் செய்து கொடுத்தார்கள்.

மதீனாவாசிகள் அகபாவில் வைத்து ஏற்கெனவேச் செய்து கொடுத்த இந்த ஒப்பந்தத்தின்படி நபி(ஸல்) அவர்களும் அவர்களைப் பின்பற்றிய முஸ்லிம்களும் துன்பத்தோடும் துயரத்தோடும் உயிருக்கு அஞ்சிய நிலையிலும் ஹிஜ்ரத் பயணம் சென்றார்கள். ஹிஜ்ரத் – நாடு துறந்தவர்கள் பற்றியும் அவர்களுக்கான நற்கூலிகள் பற்றியும் திருமறை குர்ஆன்…

ஈமான் கொண்டு, தம் நாட்டை விட்டும் வெளியேறித் தம் செல்வங்களையும் உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மகத்தானவர்கள். மேலும் அவர்கள்தாம் வெற்றியாளர்கள். (அல்குர்ஆன், 009:020)கொடுமைப்படுத்தப்பட்டப் பின்னர், அல்லாஹ்விற்காக நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றவர்களுக்கு, நாம் நிச்சயமாக அழகான தங்குமிடத்தை இவ்வுலகத்தில் கொடுப்போம். இன்னும், அவர்கள் (இதை) அறிந்து செயற்படுவார்களாயின் மறுமையிலுள்ள (நற்) கூலி (இதைவிட) மிகவும் பெரிது. (அல்குர்ஆன், 016:041, மேலும் பார்க்க: 016:110)

அல்லாஹ்வுடைய அருளையும் அவனுடைய பொருத்தத்தையும் அடைவதற்காகத் தங்கள் செல்வத்தை இழந்து இல்லங்களிலிருந்து வெளியேற்றப் பட்டுப் புலம் பெயர்ந்த ஏழைகளுக்கும் (போர் பொருட்களில்) பங்குண்டு. அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனின் தூதருக்கும் இடையறாது உதவிகள் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் தாம் உண்மையாளர்கள். (அல்குர்ஆன், 059:008)

இன்னும், எவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு) ஹிஜ்ரத் செய்து பின்னர் கொல்லப்பட்டோ இறந்தோ விடுகிறார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் அழகிய உணவை நிச்சயமாக அளிக்கின்றான்; (ஏனெனில்) உணவளிப்பவர்களிலெல்லாம் நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க மேலானவன். (அல்குர்ஆன், 022:058.)

ஹிஜ்ரத்தின் நோக்கம்:

ஆரம்பக் காலகட்டத்தில் மிகச் சொற்ப விசுவாசிகளைப் பெற்றிருந்த இஸ்லாம், முஸ்லிம்கள் மார்க்கத்தைப் பேணவும், உயிர்களைக் காத்துக்கொள்ளவும் ஹிஜ்ரத் எனும் நாடு துறக்கும் தியாகத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இஸ்லாம் ஹிஜ்ரத்தைக் கடமையாக்கியது என்பதை இஸ்லாத்தின் வரலாற்றுப் பதிவுகள் சான்று பகிர்கின்றன. அதன்படி ஹபஸாவை நோக்கிய முதல் இரு ஹிஜ்ரத்கள் அமைந்தன.

மதீனாவை நோக்கிய ஹிஜ்ரத், குறைஷியரிடமிருந்து தப்பிச் செல்வதோடு, நிரந்தமாக அன்றைய முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவதற்காகவும், அதற்காக இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு உறுதுணையாக நின்று மார்க்கத்தை மேலோங்கச் செய்ய வேண்டும் என்ற வகையிலும் அமைந்தது. அதாவது எதிரிகளிடமிருந்து தப்பியோடுவதைத் தவிர்த்து அவர்களை ஒன்றிணைந்து எதிர்த்துப் போராடுவதற்காக, இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தலைமையின் கீழ் வலுவான சக்தியாக முஸ்லிம்கள் ஒன்று சேரவேண்டும் என்ற காரணத்திற்காகவும் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்வது அன்றைய முஸ்லிம்களின் மீது கடமையாக இருந்தது.

இஸ்லாமிய வரலாற்றில் ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டில் நடந்த முதலாவது யுத்தமாகிய பத்ர் போரில், 317 பேர்களே முஸ்லிம்களின் படை தரப்பில் இருந்தனர். இது எதிரிகளின் படையில் நான்கில் ஒரு பங்கு. எதிரிகளின் படையில் 1300 பேர்கள் இருந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

பத்ர் போர் நடந்து கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் தமது இறைவனை நோக்கி. “அல்லாஹ்வே! இக்கூட்டத்தை இன்று நீ அழித்து விட்டால் உன்னை வணங்குவதற்கு இப்பூமியில் யாருமே இருக்க மாட்டார்கள். அல்லாஹ்வே! நீ இக்கூட்டத்தை அழிக்க நாடினால் இன்றைய தினத்திற்குப் பின் உன்னை யாரும் வணங்க மாட்டார்கள்” என்று இறைவனிடம் கையேந்தினார்கள். நபி(ஸல்) அவர்களின் பிரார்த்தனையை ஏற்று அல்லாஹ் உதவி புரிந்தான்.

அன்று 317 பேர்களைப் பெற்றிருந்த முஸ்லிம் படைகளைக் கொண்டுதான் தூய இஸ்லாத்தின் ஏகத்துவக்கொள்கை நிலைநாட்டப்பட்டது என்பது இங்கு கவனிக்கத்தக்கது. அதனாலேயே அன்றைய முஸ்லிம்களின் ஹிஜ்ரத் எனும் தியாகத்தை அல்லாஹ் பொருந்திக்கொண்டான், அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டதாக அருள்மறை குர்ஆன் கூறுகிறது…

“ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸாரிகளிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தோரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான்… (அல்குர்ஆன், 009:100)

ஹிஜ்ரத் செய்தவர்களுடன், அன்ஸார்களையும் சேர்த்தே இறைவன் குறிப்பிட்டு கூறுகிறான். இதற்கும் முக்கியக் காரணங்கள் உண்டு. (இதை தொடரும் பகுதியில் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்)

இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தோரையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், சிரமமான காலகட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களை மன்னித்தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன், இரக்கமுடையோன். (அல்குர்ஆன், 009:117)

ஹிஜ்ரத்திற்கான முக்கியக் காரணிகள், சிரமமான காலத்தில் சிரமத்தைப் பொருட்படுத்தாமல், பொருளிழப்பாலும், உயிரிழப்பாலும் மார்க்கத்துக்கு உதவும் உண்மை நோக்கில் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் பின்பற்றியவர்களை மேற்கண்ட வசனம் சிறப்பித்து கூறுகிறது. தொடர்ந்து வரும் வசனத்தில்…

உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன் (நல்வழியில்) செலவு செய்து போரிட்டவருக்கு (உங்களில் யாரும்) சமமாக மாட்டார்கள். பின்னர் செலவிட்டு போரிட்டவர்களை விட அவர்கள் மகத்தான பதவியுடையவர்கள்… (அல்குர்ஆன், 057:010)

மக்கா வெற்றிக்குப் பின் மார்க்கம் நிலையாக மேலோங்கியது. மக்கா வெற்றிக்கு முன் இஸ்லாத்திற்காகச் செய்த தியாகங்களுக்கு சமமாக மக்கா வெற்றிக்குப் பின் செய்யப்படும் தியாகங்கள் வராது. அதாவது, மக்கா வெற்றிக்கு முன் இஸ்லாத்திற்காக நாடு துறந்த, அறப்போர் செய்த தியாகங்களுக்கு மகத்தான பதவியுண்டு. மக்கா வெற்றிக்குப் பிறகு செய்யும் தியாகங்கள் அதற்குச் சமமாக இல்லை!

ஹிஜ்ரத் செய்வதற்கான உறுதிமொழியைப் பெறுவதற்காக (என் சகோதரர்) அபூ மஅபத் (முஜாலித்) அவர்களை அழைத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். நபி(ஸல்) அவர்கள், “ஹிஜ்ரத், அதற்குரியவர்களுக்குக் கடமையாகி (நிறைவேறி) முடிந்துவிட்டது. இனி, இஸ்லாத்தின்படி நடந்திடவும் அறப்போர் புரிந்திடவும் தான் இவரிடம் நான் உறுதிமொழி பெறுவேன்” என்று கூறினார்கள். (புகாரி, 4307. முஸ்லிம், 3796, 3797)

வாழ்க்கையும் மார்க்கமும் கேள்விக்குறியாகும் மேற்காணும் கொடுமையான சூழல் இல்லையென்றால், ஹிஜ்ரத் கடமையன்று என மேற்கண்ட நபிமொழியைப் போல் சில நபிமொழிகள் தெளிவாக உணர்த்துகின்றன. அவற்றை அடுத்த பகுதியில் காண்போம் இன்ஷா அல்லாஹ்.

ஆக்கம்: அபூ முஹை

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: