இஸ்லாம்தளம்

இந்தியாவில் இஸ்லாம்-14

தொடர்-14: தோப்பில் முஹம்மது மீரான்

பொன்னானி ஷெய்க்கு ஷெய்னுத்தீன் மஃதூம்(ரஹ்) அவர்கள் எழுதிய அரபி நூலான “துஹ்ஃபத்துல் முஜாஹிதீன்” என்ற முதல் கேரள வரலாற்று நூலின் இரண்டாம் அத்தியாயத்தின் தமிழாக்கம் இது. இரண்டாம் அத்தியாயம் முழுவதையும் மொழி பெயர்க்கவில்லை. இக்கட்டுரைத் தொடருக்குத் தேவையான பகுதி மட்டுமே இன்று மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. மூல ஆசிரியருடைய அசல் கையெழுத்துச் சுவடியையும், பல பிற மொழிபெயர்ப்புகளையும் வைத்து திரு.வேலாயுதன் பணிக்கச்சேரி என்ற வரலாற்று ஆசிரியர் “கேரளா 15-ம் 16-ம் நூற்றாண்டுகளில்” என்ற தலைப்பில் மலையாளத்தில் மொழிபெயர்த்த நூலின் 57-71 வரையான பக்கங்களின் தமிழாக்கம் (இரண்டாவது அத்தியாயம்).

குடும்பங்களுடன் பயணம் செய்யும் ஒவ்வொரு யூத, கிறிஸ்தவ குழுக்கள் மலபாரிலுள்ள துறைமுகமான கொடுங்கல்லூரில் கப்பலில் இறங்கினர். அன்றைய அரசர் சேரமான் பெருமாள் அவர்களுக்கு தங்குவதற்காக வீடும் தோட்டங்களும் தேவைக்கேற்ப வழங்கினர். அவர்கள் அங்கு நிரந்தரமாக தங்கலாயினர்.

சில வருடங்களுக்குப் பின் அரேபியாவிலிருந்து முஸ்லிம்களான சில புகராக்கள், கண்ணியமிக்கவரும் அறிஞருமான ஒரு ஷெய்க்கின் தலைமையில் இலங்கைக்கு செல்லும் வழியில் கொடுங்கல்லூரில் இறங்கினார். புகராக்களின் வருகையை கேள்விப்பட்ட அரசர், அவர்கள் வருந்தினராக அரண்மனைக்கு வரவழைத்து வரவேற்று கொடுத்தார். அவர்களைப் பற்றிய தகவல்கள் அறிய அரசர் ஆர்வம் காட்டினார்.

பெருமானார்(ஸல்) அவர்களைப் பற்றியும், அவர்கள் போதனை செய்த தூய இஸ்லாத்தைப் பற்றியும் மானிட திறனுக்கப்பாற்பட்ட ‘சந்திரப் பிளப்பை’ பற்றியும் விளக்கமாக அரசருக்கு எடுத்துரைத்தார் ஷெய்க் அவர்கள். பெருமானார்(ஸல்) அவர்களுடைய வரலாற்றையும் அற்புத நிகழ்ச்சிகளையும் ஷெய்க்கிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்ட அரசருடைய இதயத்தில் பெருமானார்(ஸல்) அவர்களின் வாய்மை இடம்பெறவும் பெருமானார்(ஸல்) அவர்கள் மீது தனி அன்பும் மதிப்பும் ஏற்பட்டன. தூய இஸ்லாத்தின் பால் கவரப்பட்ட அரசர், அவர்களுடன் அரேபியாவுக்குச் செல்லும் நோக்கத்தோடு இலங்கையிலிருந்து திரும்பி வரும் வழியில் இங்கு இறங்க வேண்டுமென்று ஷெய்க்கிடத்திலும் குழுவினரிடத்திலும் வேண்டினார்.

ஷெய்க் அதை ஏற்றுக் கொண்டார். இந்த விஷயம் மக்கள் தெரிய வேண்டாதென அரசர் அவர்களிடத்தில் கேட்டுக் கொண்டார், ஷெய்க்கும் குழுவினரும் இலங்கை சென்று ஆதம் மலை தரிசனம் செய்துவிட்டு, வாக்களித்தபடி கொடுங்கல்லூரில் வந்து அரசரை சந்தித்தார்கள். மிக இரகசியமான முறையில் பயணத்திற்காக கப்பலும் ஏனைய தயாரிப்புகளும் ஏற்பாடு செய்ய அரசர் ஷெய்க்கிடம் பொறுப்பை ஒப்படைத்தார். அந்த சந்தர்ப்பத்தில் துறைமுகத்தில் வெளிநாட்டு வர்த்தகர்களின் ஏராளமான கப்பல்கள் வந்திருந்தன. அவற்றின் உரிமையாளர்களில் ஒருவரை அணுகி தானும் தம்முடைய புகராக்குழுவும் அரேபியாவிற்கு பயணம் மேற்கொள்ள எண்ணுவதாகவும் அதற்கான வசதிகளை ஏற்படுத்தித்தர இயலுமா என்று ஷெய்க் கேட்டார். கப்பல் உரிமையாளர் அந்த வேண்டுதலை முகமலர்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.

பயண நாள் நெருங்கிய போது குடும்பத்தினரோ, ஊழியர்களோ, அமைச்சர்களோ யாருமே ஏழு தினங்களுக்கு தம் அரண்மனைக்குள் நுழைவதையும் தம்மை சந்திப்பதையும் தடைசெய்து கட்டளைப் பிறப்பித்தார். தமது நாட்டை பல பகுதிகளாக பிரிவினை செய்து எல்லையை வரையறுத்து ஆட்சி முறைகளையும் சட்டங்களையும் வகுத்து ஒவ்வொரு பகுதி மீதான ஆட்சி உரிமையை அரச குடும்பத்திலுள்ள ஒவ்வொரு நபருக்கும் எழுதிவைத்தார். மலபாரிலுள்ள ஹிந்துக்கள் மத்தியில் இந்நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றது. இவர் மலபாரின் ஒட்டுமொத்த ஆட்சியாளராகத் திகழ்ந்தார். மலபாரின் எல்லைகள் தெற்கு கும்ஹுரியும் (கன்னியாகுமரி) வடக்கு காஞ்சன் கூத்தும் (காசர்கோடு) ஆகும்.

அரசு தொடர்பான பொறுப்புக்களை ஒப்படைத்த பின் அவர் ஷெய்க்குடனும் புகராக்குழுவுனனும் சேர்ந்து இரகசியமாக இரவே கப்பல் ஏறி பயணமானார். வழியில் ஃபந்தரீனாவில் (பந்தலாயனி) இறங்கி ஒருநாள் தங்கியபின் தஹ்ஃபத்தனுக்குப் (தர்ம்மடம்) போனார். அங்கு இறங்கி மூன்று தினங்கள் ஓய்வெடுத்த பின் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தார். தஹ் ஃபத்தனிலிருந்து நேரடியாக ஹைருக்கே சென்றுவிட்டார். அரசரும் குழுவினரும் அங்கு இறங்கினர்.

அங்கு தங்கியிந்த சந்தர்ப்பத்தில், மலபாருக்கு வந்து இஸ்லாம் மார்க்க பிரச்சாரம் செய்யவும் பள்ளிவாசல்கள் கட்டவும் திட்டமிட்டிருந்த ஒரு குழு அவருடன் இணைந்தது. அவர்களுக்கு எல்லாவித உதவி ஒத்துழைப்புக்கள் நல்குவதாக அரசர் மகிழ்ச்சியுடன் வாக்களித்தார். அரசருடன் சேர்ந்து மலபாருக்கு வருவதுதான் அவர்களது நோக்கம். ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் அரசர் நோய்வாய்ப்பட்டதால் பயணம் செய்ய முடியாமல் போய்விட்டது. நோய் உச்சக்கட்டத்தை எட்டியபோது, மலபார் பயணத்திற்கு திட்டமிட்டிருந்தவர்களில் முக்கிய நபர்களை ஷரபு இப்னு மாலிக், அவருடைய தாயாரின் சகோதரன் மாலிக் இப்னு தீனார், அவருடைய சகோதர புதல்வரான மாலிக் இப்னு ஹபீப் இப்னு மாலிக் ஆகியோரையும் பிரச்சாரக் குழுவிலுள்ள பிற உறுப்பினர்களையும் அழைத்து அரசர் பின்வருமாறு உபதேசம் செய்தார்: “இந்த நோய் மூலம் நான் இறந்துவிட்டாலும் உங்களுடைய மலபார் பயணத்தை தாமதப்படுத்தவோ, அதிலிருந்து பின்வாங்கவோ செய்யக் கூடாது.”

“தங்கள் நாடு எங்கு இருக்கிறதென்றும், தங்கள் அதிகார எல்லை எவ்வளவு உண்டு என்றும் எங்களுக்குத் தெரியாது. அதனாலேயே நாங்கள் உங்களுடன் பயணம் செய்ய முடிவு எடுத்தோம்.” அவர்களுடைய இந்த பதில் கேட்டபோது அரசர் சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்தபின் மலையாளத்தில் ஒரு கடிதம் எழுதி அவர்களிடம் ஒப்படைத்தார். அக்கடிதத்தில் அவருடைய இராஜியத்தின் பெயரும், குடும்ப உறுப்பினர்கள், அங்குள்ள அரசர்கள் ஆகியோரின் விவரங்கள் விளக்கப்பட்டிருந்தன.

கொடுங்கல்லூரிலோ, தஹ்ஃபத் தனிலோ (தர்ம்மடம்) ஃபந்தரீனா (பந்தலாயனி)விலோ, கவுல் (கொல்லம்)த்திலோ இறங்க வேண்டுமென்றும், தம்முடைய நோய் நிலைமைப் பற்றியோ, தாம் இறந்துவிட்டால் அந்த தகவலையோ மலபாரில் யாரிடத்தில் சொல்லவேண்டாமென்றும் அவர்களிடம் தனியாக நினைவுபடுத்தினார்.

அதிக நாட்கள் செல்லும் முன் அரசர் இம்மையை விட்டு பிரிந்தார். அல்லாஹ் அவர் மீது பெருவாரியாக அருளாசிகள் பொழியட்டும்!

சில வருடங்களக்குப் பின், கண்ணியம் மிகுந்த ஷரபு இப்னு மாலிக்’ மாலிக் இப்னு தீனார், மாலிக் இப்னு ஹபீப், இப்னு மாலிக், அவருடைய துணைவியார் கமரியா, அவருடைய பிள்ளைகள், தோழர்கள் ஆகியோருடன் மலபாருக்கு கப்பல் ஏறி நீண்டநாள் பயணத்திற்குப் பின் அவர்கள் கொடுங்கல்லூரில் கரை இறங்கினார்கள். மன்னர் கொடுத்தனுப்பியிருந்த கடிதத்தை அங்குள்ள அரசரிடத்தில் ஒப்படைக்கவும், மன்னரின் மரணச் செய்தியை இரகசியமாக பாதுகாத்துக் கொள்ளவும் செய்தனர். கடிதத்தின் மூலம் செய்திகள் தெரிந்துகொண்ட அரசர். அவர்களுக்கு தங்குமிடங்களும், தோட்டங்களும் மற்றும் நிலங்களும் கொடுத்தார். அவர்கள் அங்கேயே தங்கினார்கள். காலம் தாழ்த்தாமல் ஒரு பள்ளிவாசலையும் அங்கு (கொடுங்கல்லூரில்) கட்டினார்கள். (இதுதான் இந்தியாவிலுள்ள முதல் பள்ளிவாசல்.)

மாலிக் இப்னு தீனார் அங்கேயே தங்கியிருந்து கொண்டு தம்முடைய சகோதர புதல்வரான மாலிக் இப்னு ஹபீப், இப்னு மாலிக்கை மலபாரின் பிற பகுதிகளில் பள்ளிவாசல் நிறுவவும், இஸ்லாம் மார்க்கப் பிரச்சாரம் செய்யவும் பணித்தார்.

தொடரும்..

மக்கள் உரிமை வாரஇதழ்: டிசம்பர், 09 – 15, 2005 .gallery { margin: auto; } .gallery-item { float: left; margin-top: 10px; text-align: center; width: 33%; } .gallery img { border: 2px solid #cfcfcf; } .gallery-caption { margin-left: 0; }

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: