கேள்வி : மக்களுள் பெரும்பாலோர் தொழும் போது தேவையில்லாத அசைவுகளை அதிகப்படுத்துகின்றனர். ஒரு செயலை மூன்று தடவைக்கு மேல் செய்தால் தொழுகை பயனற்றதாகி விடும் என்று சிலர் கூறுகின்றனர். இதற்கு ஆதாரமுண்டா? தொழுகையின் உயிரோட்டத்தைப் பாதிக்கக்கூடிய செயல்களில் ஈடுபடக்கூடிய சகோதரர்களுக்கு நீங்கள் வழங்கக் கூடிய உபதேசம் என்ன?
ஃபத்வா: தொழுகையில் அமைதியைப் பேணுவது முஃமின்கள் மீது கடமையாகும். ஏனெனில், ‘துமஃனீனத்’ எனும் அமைதியைப் பேணுவது தொழுகையின் கடமைகளில் உள்ளதாகும். தொழுகையில் நிதானம் இல்லாமல் அவசர அவசரமாகத் தொழுத ஒருவரை நபி (ஸல்) அவர்கள் மீண்டும் தொழுமாறு ஏவினார்கள். (நூல்கள் : புஹாரி, முஸ்லிம்)
தொழுகையில் இறையச்சத்துடன் அமைதியாக இருப்பதை ஈமானுக்கு இலக்கணமாக இறைமறை கூறுகிறது:
‘முஃமின்கள் வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் தமது தொழுகையில் பயபக்தியுடன் இருப்பார்கள்’. (அல்குர்ஆன் அல்முஃமினூன் 23:1,2)
எனவே தொழுது கொண்டிருக்கும் போது ஆடையை ஒழுங்கு படுத்துதல், தாடியைத் தடவுதல், (கைக் கடிகாரத்தைச் சரி செய்தல்) போன்ற செயல்களில் ஈடுபடுவது வெறுக்கத் தக்கது. தொடர்ந்து இவ்வாறு செய்வது – நமது அறிவுக்கு எட்டியவரை – தொழுகையைப் பயனற்றதாக்கி விடும்.
இத்தனை தடவை ஒரு செயலைத் தொடர்ந்து செய்தால் தான் தொழுகை பயனற்றதாகி விடும் என்று வரையறை செய்ய முடியாது. இவ்வாறு கூறுவதற்கு எவ்வித ஆதாரமுமில்லை. தொழுபவருடைய எண்ணத்தில், தான் மேற்கொண்ட வீணான செயல் தொழுகையின் உயிரோட்டத்தைப் பாதித்து விட்டதைப் போன்ற உணர்வு தோன்றி, அத்தொழுகை கடமையானதாகவும் இருந்தால், அத்தொழுகையைத் திருப்பித் தொழுவதோடு, தவ்பாவும் செய்து கொள்ள வேண்டும்.
மறுமொழியொன்றை இடுங்கள்